வர்த்தகரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களையும், தனி நபர்கள் பயன்படுத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களையும் அழிக்கும் அல்லது பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
கரோனா வைரஸ் பரவல், தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சிக் குறைவு, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது.
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
”காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்படி தனிநபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அதற்கு தகுதிச்சான்று பரிசோதனை செய்யவேண்டும்,
அதேபோல, வர்த்தகரீதியான வாகனங்கள் 15 ஆண்டுகளை நிறைவடைந்திருந்தால், அதற்கு தகுதிச்சான்று பெற வேண்டும். பழைய வாகனங்களைத் திரும்பப்பெற்று புதிய வாகனங்கள் சாலையில் ஓட்டும்போது, எரிபொருள் மிச்சமாகும், காற்று மாசு குறையும், சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாமல் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ பொதுத்துறை நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்.
இது 2022, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்தத் திட்டம் மத்திய அரசு, மாநில அரசு வாகனங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், இந்தியா மிகப்பெரிய வாகனமுனையாக மாறும். வாகனங்களின் விலையும் குறையும். பழைய வாகனங்களில் இருந்து மறு சுழற்சிக்காக எடுக்கப்படும் பாகங்கள் மூலம் வாகனங்களின் விலை குறையும் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏற்றுமதியாகும்’ எனத் தெரிவித்தார்.