கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிட் 2.0 - எச்சரிக்கை கோரும் பதிவு...

 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, 

பொது நல மருத்துவர், 

சிவகங்கை...



பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சி பதியப்படுகின்றது. 


நேற்று என்னை சந்திக்க 70களின் இறுதிப்பகுதியில்  இருக்கும் பெண்மணி வந்திருந்தார். 


அவரிடம் நான் மேற்கொண்ட நோய் குறித்த விசாரணையை அப்படியே உரையாடலாக பதிவு செய்கிறேன் 


"என்னங்கமா  செய்யுது?" 


" மூனு நாலு நாலா உடல் சோர்வு அசதி.. 

சரியா சாப்ட முடியல..பசி எடுக்க மாட்டேங்குது" 


"ஓகே.. காய்ச்சல் இருந்துச்சா.? 


"காய்ச்சல் இல்ல சார்.."


"இருமல் இருக்குங்களா மா?"


"லேசான இருமல் அப்பப்போ வருது.." 


" நல்லா யோசிச்சு சொல்லுங்க.. உங்களுக்கு கடந்த ஒரு வாரத்துல காய்ச்சல் அல்லது  அடிச்சு போட்ட மாதிரி வலி அசதி இருந்துச்சா?" 


"ஆமா..சார். சனிக்கிழமை அன்னைக்கு பூறா எழுந்துக்கவே முடியல. அவ்வளவு அசதி..வலி.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. " 


"மூச்சு விடுறதுல சிரமம் இருக்கா?" 


"லேசா மூச்சு விடுறதுல சிரமம் இருக்குற மாதிரி தான் இருக்கு" 


"மா.. இந்த தடவ கொரோனாவுக்கு பல பேருக்கு காய்ச்சல் வராம இந்த மாதிரி உடம்பு அசதி வலி ஏற்படுது.. கூடவே உங்களுக்கு இருமல் இருக்குறதால.. சிடி ஸ்கேன் எடுத்து பாத்துரலாம்.." 


"சார்... ரெண்டு நாள் மாத்திரை போட்டு பாத்துக்குறேனே.." 


பல்ஸ் ஆக்சிமீட்டர் விரலில் வைத்துப் பார்த்தேன். 

93% -94% என்று இருந்தது. 


"இல்ல மா.. ஏற்கனவே அஞ்சாவது நாள் ஆயிடுச்சு.  நாளைக்கு சிடி ஸ்கேன் எடுத்து ரிசல்ட் வந்தா.. ஆறாவது நாள். 

இதுக்கு மேல லேட் பண்ண கூடாது. நீங்க நாளைக்கு எடுக்கணும் கண்டிப்பா.. இது என்னோட அன்புக்கட்டளை "


"சரி சார் . எடுத்துட்டு வர்றேன்.." என்று பாராமுகமாக சென்றார் . 


இன்று அவரது உறவினர் ஸ்கேனைக் கொண்டு வந்தார். 

அந்த நோயரால் எழுந்து வர முடியவில்லை என்பதால் இவர் மட்டும் வந்திருக்கிறார்


நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில்  கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 


உடனே நோயர் இன்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு விட்டார். 


நிச்சயம் தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களின் திறனாலும் உழைப்பாலும் 

நலம் பெற்று வீடு திரும்புவார் என்று இறைவனை வேண்டுவோம். 


இந்த நிகழ்வில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் 


1️⃣ கொரோனாவில் காய்ச்சல் கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை 


2️⃣ கடும் உடல் அசதி / உடல் சோர்வு போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம். கூடவே வயிற்றுப்போக்கும் இருக்கலாம்.


3️⃣ கடும் உடல் அசதி அதை ஒட்டிய இருமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை அலட்சியம் செய்வது கூடாது. 


4️⃣ தற்போது வரும் காய்ச்சலுக்கு கட்டாயம் ஊசி போடக்கூடாது. காரணம் ஊசி போடுவதால் அறிகுறிகள் அடங்கி விடும். இதனால் பொன்னான பொழுதை வீட்டில் கழித்து விட்டு காலம் கடந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். 


5️⃣ சரியான நேரத்தில் அறிகுறிகளைக் கண்டறிந்து சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும் 


6️⃣நான் சந்தித்த இந்த பெண்மணி இன்னும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. 60+ வயதினருக்கு கடந்த மார்ச் 1  முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எத்தனையோ முதியோர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து 45+ வயதினர் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும். 


7️⃣அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அரசு மருத்துவமனைகளை நம்பி விரைவாக சிகிச்சை பெறுங்கள். சிகிச்சைக்கு காலம் தாழ்த்தாதீர்கள்.  


8️⃣ கட்டாயம்  முதியோர்கள் வெளியிடங்களுக்கு அவசியமின்றி வெளியே வரக்கூடாது. 

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர நேர்ந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாகக் கூடுதல் கூடாது. 


9️⃣ கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான விசயங்களை பரப்ப வேண்டும். பொய்களை பரப்பக்கூடாது.  


🔟பொதுமக்கள் அறிகுறிகள்  தோன்றினால் தாமே சீக்கிரமாக பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும். 

பரிசோதனை செய்து கொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

🙏🙏


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...