குழந்தைகளின் மத்தியில் தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காக விதைக்க, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் சார்பில், வரும் மே மாதத்தில் ஆன்லைன் மூலம், கோடைகால முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமின் ஒரு பகுதியாக, சிறப்பு தபால் தலையை பொழுதுபோக்காக சேகரிப்பதை அறிமுகம் செய்தல், கடிதம் எழுதும் பயிற்சிகள், தபால் நிலையத்துக்கு களப்பயணம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ரூ.250 கட்டணமாக செலுத்தி இந்த முகாமில் சேரலாம்.
நுழைவுக் கட்டணத்தை, காசோலை மற்றும் டிமான்ட் டிராப்ட் மூலம்,
தலைமை அஞ்சலக அதிகாரி,
அண்ணா சாலை தலைமை அலுவலகம்,
சென்னை 600002
என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இம்முகாம் 4 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதி மே 5 முதல் 7-ம் தேதி வரையிலும், 2-ம் தொகுப்பு மே 11 முதல் 13 வரையிலும், 3-வது தொகுதி மே 19 முதல் 21 வரையிலும், 4-ம் தொகுதி மே 26 முதல் 28-ம் தேதி வரையிலும் காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரையில் நடைபெறும். பங்கேற்பாளருக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும். அண்ணா சாலை தலைமை அஞ்சலக, தலைமை அஞ்சலக அதிகாரி சு.குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதை தெரிவித்துள்ளார்.