கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை விரட்ட வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய புரளிகள் அன்றாடம் கிளப்பி விடப்படுகின்றன. அதுபோல் 'எலுமிச்சை தெரபி' என்ற பெயரில் வீடியோ ஒன்று வைரலானது. பாஜக முன்னாள்
எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, '' நானும் இதை முயற்சித்திருக்கிறேன். மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் (42) நேற்று முன் தினம் வீடியோவில் கூறியவாறு தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தி காரணமாக ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.