கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் -பிரின்ஸ் கஜேந்திர பாபு...

 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை : நாள் 17.05.2021


மாநில உரிமை காக்க! 

கல்வி உரிமை மீட்க! 

தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி, வரவேற்கிறோம். 


ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.   அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ் நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ் நாடு அரசின் இந்த முடிவை வாழ்த்தி வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்க தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோர்க்க  வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.  


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  மக்களின் துயர் துடைக்கும் நல்லாட்சியை  வழங்கிட  

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்" எனும் குறள் வழியில் அமைச்சர் முதல் அரசு அலுவலர்கள் வரை  ஆய்ந்தாய்ந்து மிகப் பொருத்தமான  நேர்மையானவர்களை உரிய துறைகளுக்கு அமர்த்தியுள்ளதைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பாராட்டி வரவேற்கின்றது. பொறுப்பேற்றுள்ள அனைவர் தம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.


பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019ல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித் துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது. 


புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கி விட்டு, பள்ளிகளில் கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.


எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (IAS cadre post) வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இன்று வரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ் நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ் நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல. 


கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக திரு. க.நந்தகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறோம்.  மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் போது தனது மாவட்டத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப்பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அவரின் அக்கறை கொண்ட அணுகுமுறையையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அந்த நோக்கம் நிறைவேறும் காலம் வரை இயக்குநர் பணியிடத்தில் ஒர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.  மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணி பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். 


இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப்படை கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக்கூடாது. 


இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட உறுதியுடன் செயல்படும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட விரைந்து செயல்பட வேண்டும்  என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...