கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கிராமப் புறங்களில் கொரோனா பரவுவதைத் தடுப்பது எப்படி?



கிராமப் புறங்களில்  கொரோனா பரவுவதைத் தடுப்பது எப்படி?


டாக்டர்.க.குழந்தைசாமி, பொது சுகாதார வல்லுநர்


 கொரோனா வைரஸ் ஏன் கிராமங்களில் நுழைகிறது?


முதல் அலையின் போது பெரும்பாலும்  நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது.


தற்போது சமுதாயத்தில் மிக அதிக அளவில் கிருமி பரவியுள்ளதால்,

ஏற்கெனவே தொற்று ஏற்படாத அனைவருக்கும் நகர்ப்புறம், கிராமப்புறம் என வேறுபாடின்றி தொற்று எல்லா இடங்களிலும் பரவுகின்றது.


 கிராமப்புறங்களில் தொற்று பரவாமல் எவ்வாறு தடுப்பது ?


1. துக்க காரியங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினராக, இறுதி சடங்குகளை செய்பவராக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.


2. சுப காரியங்களையும் தள்ளி வைக்கலாம்.

தவிர்க்க முடியாத நிலையில், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.


3. தேவையில்லாமல் மருத்துவ மனைகளுக்கு போகக்கூடாது. 


உற்றார் உறவினர்களைப் பார்க்க மருத்துவ மனைகளுக்கு போகக் கூடாது. 


பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion)  உடன் இருந்தால் போதுமானது.


 குழந்தையைப் பார்க்க உறவினர்கள் நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது.


உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஆரோக்கியமாக இருக்கும் வயது குறைந்த  ஆரோக்கியமான உறவினர் ஒருவர்/ இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஒருவர்/ அறிகுறிகளே இல்லாமலோ அல்லது சாதாரண சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் உடனிருக்கலாம்.


4. நகர்ப் புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்புபவர்கள், வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு செல்லக் கூடாது.


5. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு கொரோனா பெருந்தொற்று அடங்கும் வரை செல்லக் கூடாது.


6. நியாய விலைக் கடைகள், பால் சொசைட்டி, உள்ளூர் மளிகைக் கடைகள் முதலான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.


7. வெளி வேலைகளுக்கு சென்று திரும்புகிறவர்கள் கால்கள், கைகள் மற்றும் முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.


 குடும்பத்தில்  உள்ளவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டும்.


8. கிராமங்களில் உள்ள பொது இடங்களுக்கு செல்லக் கூடாது.


9. மளிகைக் கடைகள், பால் சொசைட்டி, நியாய விலைக் கடைகள் போன்ற இடங்களில் பணி புரிபவர்கள் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.


10. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பு


1. கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு மருத்துவ மனைகளில் கூட்டம் குறைவாக உள்ள போதுதான் செல்ல வேண்டும்.


2. கர்ப்பிணிப் பெண்ணின் உடன் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


3. கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரக் கூடாது.


4. கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை வளைகாப்பு விழா நடத்தக் கூடாது.


5. கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மருத்துவ ஆலோசனையுடன்  கோவேக்சின் போன்ற (killed vaccine) தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போடவேண்டும்.


6. பிறந்த குழந்தையைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது.


7. குழந்தைக்கு தடுப்பூசி போடப் போகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


உங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தனி இடம், தனி நேரம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


 கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டைவலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.


 சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.


 ஆரம்ப சுகாதார நிலையங்கள்


உங்கள் ஊருக்கான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார  மருத்துவ அலுவலர், கிராம சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் கைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


 உதவி எண்கள்


104, 108 மற்றும் மாவட்ட  மாநில உதவி எண்களைக் (044-29510400; 044-29510500; 

94443 40496 & 

87544 48477)  குறித்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் அவசர உதவிக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


 மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.


மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.


 பல்ஸ் ஆக்சி மீட்டர்கள்


வீட்டில் உள்ளவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.


ஆக்சிஜன் அளவு மிக மிக அபாயகரமான அளவான எழுபது சதவீதத்திற்கும் கீழாகக் குறையும் போது தான் மூச்சுத்திணறல் ஏற்படும். 


மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்றால் போதும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தும்.


ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்து பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் இருக்க வேண்டும்.


 கிராமப்புற மக்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?


1. முகக் கவசம் அணிதல்


2. கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்


3. சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தள்ளி இருத்தல்


4. கூட்டம் கூடும் இடங்களுக்கு/ நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது. 


5. கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்


6. கதவு ஜன்னல்களை நன்கு திறந்து காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுதல்


7. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்


 *கவனம்


இதுவரை கொரோனா தொற்று ஏற்படாதவர்களையும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசுவோரையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையம் தாக்கக் காத்திருக்கிறது கொரோனா.


தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, கிராம மக்கள் தயவு செய்து எச்சரிக்கையாகவும்

கவனமாகவும் இருங்கள்!


உயிரைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் அனைவரும் ஒன்றினைந்து மனம் தளராமல் செயல்பட்டு

கொரோனாவை வெல்வோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns