திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14,99,485 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,83,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று சென்னையில் 6,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 42,579 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 297 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (மே 14) அவர் வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.