கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளிகளில் உயரும் மாணவர் சேர்க்கை - உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுகோள்...

 அரசுப்பள்ளிகளில் உயரும் மாணவர் சேர்க்கை - உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுகோள்...


கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சிறப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும். எனவே பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.


இதற்கிடையே ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் நடப்பு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:


கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு அதிக விளம்பரம், ஊக்கத்தொகை, கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பணிகளைமுன்னெடுக்க வேண்டி இருந்தது. ஆனால், சமீபகாலமாக அரசுப் பள்ளிகளுக்கு மக்களிடம் பரவலாக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, கரோனா பாதிப்பால் பெரும்பாலான மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளும் அதிக கல்விக் கட்டணத்தை முன்வைப்பதால் அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோரின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு போல் 2 லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக சேர வாய்ப்புள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.கோவிந்தன் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள், கட்டமைப்பு வசதிகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டம், பொறியியல் உள்ளிட்ட இதர தொழில்படிப்புகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தரப்படுகிறது. இவை மாணவர் சேர்க்கை உயர முக்கிய காரணமாகும்.


புதிய பாடத்திட்டம் மாற்றம், நீட் தேர்வுக்குப் பிறகு, பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவை தேர்வுசெய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் நடப்பாண்டில் உயிரியல் பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கும் அதிக வரவேற்புள்ளது. இதனால் அரசுப் பள்ளி களில் பிளஸ் 1 பாடப்பிரிவிலும் கூடுதலாக 15 சதவீத இடங்களை ஏற்படுத்திக் கொள்ள கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. மறு புறம் தனியார் பள்ளிகளில் முந்தைய ஆண்டுகளைவிட சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களை தக்கவைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். ஆய்வகம், நூலகம் போன்ற தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். மேலும், ஆங்கில மொழியை சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.


இந்நிலையில், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நெருக்கடி, பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளை நாடுவதற்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்களான எஸ்.பிரசன்னா, கோ.ராஜேஷ் ஆகியோர் கூறியதாவது:


கரோனா பரவலால் இணையவழி கல்வி முறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது. தொற்று குறையாத சூழலில் இன்னும் ஓராண்டுக்கு இந்த நிலையே நீடிக்கும் எனத்தெரிகிறது. எனினும், தனியார் பள்ளிகள்கட்டணங்களை முழுவதும் வசூலிக்கின்றன. ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைனில் வகுப்பெடுக்க தனியார் பள்ளிகளுக்கு அதிகபட் சம் ரூ.65,000 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர மருத்துவம் உட்பட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அமலில் உள்ளது. இந்தத் தேர்வு முறைகளால் கல்வியானது பெரும் செலவினமாக மாறிவிட்டது. தற்போதைய வருவாய் பற்றாக்குறை சூழலில் இந்த செலவு பெரும் சுமையாகும்.


மறுபுறம் அரசுப்பள்ளியில் பாடப்புத்தகம் தொடங்கி சீருடை, ஷூ, மடிக்கணினி வரைஇலவசமாகத் தரப்படுகிறது. இதனால் செல வுகள் குறைவதுடன், குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியும் உறுதி செய்யப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன் வரவேண்டும்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கல்வி அமைச்சர் உறுதி


அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை உயர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, ‘‘குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பாண்டில் மாணவர்கள் அதிகம் சேரும் பள்ளிகளைக் கணக்கெடுத்து, அதற்கேற்ப தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தரும் அறிக்கையின்படி பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும்’’ என்றார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...