அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர், ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்களது அறிவியல் ஆர்வத்தை புரிந்து கொண்ட பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான போட்டிக்கு இவர்களை விண்ணப்பிக்க சொல்லியுள்ளார். 2000 பேர் பங்கேற்றுள்ள இப்போட்டி 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக நடந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த ரகசியா மற்றும் வேதாஶ்ரீ தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையறிந்த பள்ளிகல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னைக்கு அழைத்து அண்மையில் விருது வழங்கி பாரட்டு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி மாணவிகளிடம் கேட்டபோது இது தங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாகவும், நாசாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், அதற்கான முதற்படியாக இதை பயன்படுத்தி கொள்வோம் என தெரிவித்தனர். இந்த அரசு பள்ளி மாணவிகளால் அரியலூர் மாவட்டமே பெருமையடைந்துள்ளது.