கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் துறையைப் புரட்டிப்போட்ட சீனாவின் முடிவு...

 சீனாவின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றை அந்நாட்டு அரசு சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் எந்த நிறுவனமும் லாப நோக்குடன் செயல்படக் கூடாது என்பதே அந்த அறிவிப்பு. பள்ளிக் கல்விப் பாடத்திட்டங்களுக்குப் பயிற்சி தரும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், பங்குச் சந்தை போன்றவற்றின் மூலம் நிதி திரட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அதேபோன்று 6 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் கற்பிக்கும் முறைக்கும் முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பாடத்திட்டங்களை சீனாவுக்குள் கற்பிக்கக் கூடாது என்றும், வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களைப் பணியில் அமர்த்திப் பயிற்சி தரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அரசின் இந்தப் புதிய அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சீனாவில் பள்ளிக் கல்விக்கான பயிற்சி வர்த்தகம் இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் கோடி அளவுக்கு லாபகரமான தொழிலாக நடந்துவரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு சீனக் கல்வித் துறையின் நடைமுறையைப் புரட்டிப் போட்டுள்ளது. 


இதுவரை லாப நோக்குடன் செயல்பட்டுவந்த பயிற்சி மையங்கள், உடனடியாகத் தங்களை சேவை அமைப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கல்வித் துறையில் குவியும் நிதியைக் கட்டுப்படுத்துவது இந்தப் புதிய உத்தரவின் நோக்கங்களில் ஒன்றாகும். இதுபோன்று பள்ளிக் கல்விக்கு வெளியில் உள்ள மையங்கள் மூலம் பயிற்சி தருவதால், இளம் மாணவர்கள் பள்ளிக் கல்வி, வெளியில் தரப்படும் பயிற்சி என இரண்டு விதமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 


பெற்றோர்களும் இருபுறமும் பணம் கட்டி அதிக நிதிச் சுமைக்கு ஆளாகிறார்கள் என்பதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. வசதி மிக்கவர்கள் வெளியில் பயிற்சி எடுத்துக்கொள்வதால், ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, வசதி குறைந்த மாணவர்களைப் பாதிக்கிறது. மாணவர்கள் மத்தியில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டு, இது சமூகப் பிரச்சினையாக மாறுகிறது. பள்ளிக் கல்வி சேவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் சிதைப்பதால் அதைத் தடுக்கப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று சீன அரசு அறிவித்துள்ளது. 


 சீன அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்தியக் கல்வியாளர்கள் பலர் அதேபோன்ற ஒரு உத்தரவை இந்தியாவிலும் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கல்வித் துறை சேவை நோக்கத்திலிருந்து லாப நோக்கத்துக்கு மாறி நீண்ட காலமாகிவிட்டது. அரசுப் பள்ளிகள் மட்டுமே லாப நோக்கமின்றிச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், அரசுப் பள்ளிகளின் பங்கு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 1978-ல் 74.1% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றனர். இன்றைக்கு 52.2% மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். 


லாப நோக்குடன் இயங்கும் தனியார் பள்ளிகள் இந்தக் காலகட்டத்தில் 10 மடங்கு வளர்ந்துள்ளன. 2018-ல் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. ‘தனியார் பள்ளிகள் லாப நோக்கத்துடன் இயங்கும் பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும்படி மாணவர்களையும் பெற்றோரையும் கட்டாயப்படுத்தக் கூடாது’ என்பதே அந்த உத்தரவு. ஆனால், நடைமுறையில் பல தனியார் பள்ளிகள் ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனங்களைப் பள்ளிகளுக்கே வரவழைத்து லாப நோக்கத்துடன் இயங்குகின்றன. இந்தியாவில் உள்ள 15 லட்சம் பள்ளிகளில் 25 கோடி மாணவர்கள் படிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 30% மாணவர்கள் தங்கள் பாடங்களைக் கற்க வெளியில் பயிற்சி பெறுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. 


இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பள்ளிப் பாடங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களின் ஆண்டு வர்த்தகம் ரூ.10 லட்சம் கோடி என்றும், இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ரூ. 37 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. சேவையாக இருக்க வேண்டிய கல்வி, லாபத்தின் உச்சத்தைத் தொடும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், சீன அரசின் உத்தரவு இந்தியாவிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தனியார் பள்ளிகளில் படித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில அறிவு கிடைக்கும் என்றும், பொறுப்புணர்வுடன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் இந்தியாவில் உள்ள பெற்றோர் நினைக்கின்றனர். 


இந்த மனநிலைதான் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை இழுக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள் என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது. ஆனால், உண்மை நிலவரம் வேறுவிதமாக உள்ளது. வடமாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான தனியார் பள்ளிகள், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் பிள்ளைகளுக்கே கல்வி கற்பிக்கின்றன. அங்குள்ள தனியார் பள்ளிகளில் 70% பள்ளிகள் மாதம் ரூ.1,000-க்கும் குறைவாகக் கட்டணம் பெறும் பள்ளிகளாக உள்ளன.

அதேசமயம், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாகப் பயிற்சி அளிப்பதன் மூலமாகவும், மாணவர்களைக் கசக்கிப் பிழிவதன் மூலமாகவும் அதிக தேர்ச்சி விகிதங்களைக் காட்டுகின்றன. 


அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் 95% பேர் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மாணவர்களைத் தனியார் பயிற்சிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. இந்தப் போட்டி, லாப நோக்கத்தின் உச்சிக்கே தனியார் பயிற்சி மையங்களை இட்டுச்செல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் பயிற்சி மையங்களில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், கல்வியைச் சேவையாகத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவிலும் சீனாவைப் போன்று அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. - 


எம்.சண்முகம், தொடர்புக்கு: shanmugam.m@hindutamil.co.in




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...