பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு. அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி...
பிரதமர் சொன்னபடி ரூ.15 லட்சத்தில் முதல் தவணை 5.5 லட்சம் வந்தது- அதிர்ச்சி கொடுத்த நபர்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ்.
அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக வங்கி நிர்வாகம் 5.5 லட்ச ரூபாயை கிரெடிட் செய்துள்ளது.
ஒரு கட்டத்தில் வங்கி நிர்வாகம் அந்த தவறை உணர்ந்து ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டுள்ளது.
அதோடு அவருக்கு பலமுறை நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை அவர் கண்டும் காணாமல் இருந்துள்ளார்.
இறுதியில் வங்கி தரப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
உடனடியாக காவல் அதிகாரிகள் ரஞ்சித் தாஸை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் அவர் வியக்கும் அளவிற்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
“கடந்த மார்ச் மாதம் எனது வங்கி கணக்கிற்கு 5.5 லட்சம் வந்தது. அது கிடைத்தவுடன் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியின் படி 15 லட்ச ரூபாயில் முதல் தவணையாக 5.5 லட்ச ரூபாயை எனது வங்கி கணக்கில் செலுத்தினார் என நினைத்தேன். நான் அந்த பணத்தை செலவு செய்து விட்டேன். இப்போது எனது வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை” என போலீசாரிடம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.