கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சிப் பலன்கள் - கடகம்...



சமயோஜித புத்தியும் சாமார்த்தியமும் நிறைந்த கடகராசி அன்பர்களே, குருபகவான் மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சென்று மறைகிறார். 8 ல் குரு நின்றால் பெயருக்குக் கலங்கம் ஏற்படுமே... என்று அஞ்சிகொண்டிருந்தால் அதை விட்டுவிடுங்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ஸ்திர வீட்டில் மறைவதால் நற்பலன்களே ஏற்படும்.


குருபகவானின் பார்வை உங்களுக்கு இரண்டாம் வீடான சிம்மத்தின் மீது படுகிறது. இது குடும்ப அமைப்பில் மிகவும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இதுவரை இருந்துவந்த வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப்புழக்கத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். மனதில் அமைதி பிறக்கும் . நிம்மதியாக உறங்குவீர்கள். குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் வந்து விலகும். பழைய வாகனத்தை மாற்றிப் புதுவாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மீண்டும் உற்சாகம் ஏற்படும். .


குருபகவானின் சஞ்சார பலன்கள்:


13.11.2021 முதல் 30.12.2021 வரை


குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இந்தக் காலகட்டத்தில் சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சொந்தமாக வீடு வாங்கும் முயற்சி வெற்றிபெறும்.


31.12.2021 முதல் 02.03.2022 வரை


சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நின்று போயிருந்த கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அரசிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். அதேவேளையில் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளுங்கள். சின்னச் சின்ன விதிமீறல்கள்கூட ஃபைன் செலுத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு விட்டுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


02.03.2022 முதல் 13.04.2022 வரை


குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் தம்பதிக்கு நல்ல குழந்தைப் பேறு வாய்க்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வரவேற்பைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.



வியாபாரிகளுக்கு:


கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடக்கும். நிலுவையில் இருந்த தொகையை சாமர்த்தியமாகப் பேசி வாங்குவீர்கள். கடையைப் புதிய பெரிய இடத்துக்கு மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிர்பாராத நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள். அதேநேரம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது.


உத்தியோகஸ்தர்களுக்கு:


உங்கள் உழைப்பு இதுவரை போற்றப்படாமல் இருந்த நிலை இனி மாறும். அனைவரும் பாராட்டுவார்கள் திறமைக்கு ஏற்ப ஊதிய உயர்வும் பாராட்டுகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்கள் குறித்து அடுத்தவர்களிடம் பேச வேண்டாம். புதிய வேலை மாறுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு வேண்டிய சலுகைகளைக் கேட்டுப் பெறுங்கள்.


கலைஞர்களே! விமர்சனங்களைத் தாண்டி சாதித்துக் காட்டுவீர்கள்.



மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றிபெற வைக்கும். வாழ்வில் ஒருபடி முன்னேறுவீர்கள்.


பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். சகலமும் நன்மையாகும்.


இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து குரு பகவான் உங்கள் ராசியை பார்த்துக்கொண்டிருந்தார். பலவித நன்மைகள் உங்களைத் தேடி வந்திருக்கும். நினைத்த காரியத்தை எளிதாக செய்து முடித்திருப்பீர்கள். ஆனால் தற்போது குரு பகவான் 8-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்குச் செல்கிறார். அஷ்டமத்து குரு எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்ற ஒருவித அச்சம் ஏற்படுவது இயற்கையே.


உங்கள் ராசிக்கு குரு பகவான் ஆறாம் இடத்திற்கும் பாக்ய ஸ்தானமான 9-ஆம் இடத்திற்கும் அதிபதி ஆவார். இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. 6ஆம் அதிபதி 8ஆம் இடம் செல்லும் பொழுது விபரீத ராஜயோகமாக வேலை செய்வார் என்பது ஜோதிட விதி. எனவே எந்த வகையிலும் குரு பகவான் உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார். அது மட்டும் காரணமல்ல கடக ராசியான உங்கள் ராசியில்தான் குரு பகவான் உச்சம் அடைவார். தனக்கு மதிப்பு மரியாதை தரக்கூடிய கடகராசிக்கு அவர் எந்த வகையிலும் கெடுதல் செய்ய மாட்டார் என்பதுதான் உண்மை.


இந்த விபரீத ராஜ யோகத்தின் காரணமாக ஏராளமான நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த வீடு வாங்குதல், சொத்துகள் சேர்த்தல், புதிதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்குதல், வெளிநாடு செல்லுதல், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுதல், அதிர்ஷ்டப் பரிசுகள் கிடைத்தல், தூரத்து உறவினர்களின் சொத்துகளில் பங்கு கிடைத்தல், உங்கள் மூதாதையர்களின் சொத்துகளை இனம் கண்டு அதை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல் போன்ற நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. சகோதர சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்தேறும்.சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாக பேசித் தீர்க்கப்படும். பூர்வீகச் சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகள் இப்போது விற்பனையாகும். பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஆனால் தந்தையின் உடல் நலத்தில் மட்டும் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் அவ்வப்போது ஏற்படும். ஆனாலும் பயப்படும்படியாக எந்த பிரச்சினையும் இருக்காது. தந்தைவழி உறவுகள், பங்காளிகள் இவர்களிடம் சற்று நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். அவர்கள் பிரச்சினைகளை உண்டு பண்ணினாலும் அமைதியாக கடந்து செல்வது நல்லது.


இளைய மகன் அல்லது மகள் இவர்கள் மூலமாக ஒரு சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். நிதானம் இழக்காமல் அந்தப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரத்திற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது. வருமானத்தில் தன்னிறைவு இருந்து கொண்டே இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்றவை ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டியது வரும். வீட்டை புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் போன்ற நல்ல செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் பெரிய அளவில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.


இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவை உண்டாகும். பதவி உயர்வில் பின் வரிசையில் இருந்த உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக பதவி உயர்வு கிடைக்கும். அது உங்களுக்கு மட்டுமல்ல... உங்கள் அலுவலகத்தில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக இருக்கும்.


அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும்., ஆனாலும் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது. காவல் துறை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்பு கிடைக்கும். அது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது நிதர்சனம்.


சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி இருக்கும். வங்கிக்கடன் பெற்று தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய தொழில் தொடங்குதல் போன்றவை நடக்கும். தொழில் தொடர்பாக புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிக அருமையான காலகட்டம் இது என்றே சொல்ல வேண்டும். அஷ்டமத்து குரு என்று அச்சப்பட்டு ஒதுங்க வேண்டாம். கடன்பெற்று மேலும் நிலபுலங்கள் வாங்கி அதை அதிக விலைக்கு விற்று ஆதாயம் பெறக்கூடிய வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி உங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும். புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் கிடைக்கும். மிகப்பெரிய நிறுவனத்தோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் உள்ளது. தொழில் நிறுவனத்தை நல்ல வசதியான பெரிய இடத்திற்கு மாற்றும் வாய்ப்பும் இப்போது உள்ளது.


விவசாயிகளுக்கு குரு பகவானின் உதவியோடு விளைச்சல் அதிகரிக்கும். அந்த விளைச்சலுக்கு தகுந்த வருமானமும் கிடைக்கும். புதிய தொழில்நுட்பங்கள், விவசாயத்தில் புதிய முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணப் பயிர்கள் பயிரிடுவதன் மூலம் அதிக ஆதாயம் பெற முடியும். குருபகவான் மட்டும் உதவி செய்யவில்லை, சனிபகவானும் ராகு பகவானும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள்.


வியாபாரிகளுக்கு தங்களுடைய வியாபாரத்தில் நல்ல ஆதாயம் தரக்கூடிய காலகட்டம்தான். தற்போது வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதன் மூலம் மேலும் வியாபாரம் விரிவடையும். வங்கிக்கடன் பெற்று புதிய வியாபாரம் தொடங்குதல், வியாபாரக் கிளைகள் ஆரம்பித்தல் போன்றவை செய்யலாம். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். கடனில் பெரும்பகுதி அடைக்கப்படும். துணிச்சலான முடிவுகளை எடுத்தால் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியாளராக இந்த குருப் பெயர்ச்சி காலகட்டத்தில் நடந்தேறும்.


பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி காலகட்டம் அதிக நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. விபரீத ராஜ யோகத்தின் மூலமாக திடீர் சொத்துகள் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவை கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆதரவு பேருதவியாக இருக்கும். அவருடைய சொத்துகளில் பெரும் பங்கு உங்களுக்குக் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.


இயல் இசை நாடகக் கலைஞர்கள், பெரிய திரை, சின்னத்திரை கலைஞர்கள் அனைவருக்கும் இந்த குருப் பெயர்ச்சி நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை சற்று தள்ளியே வையுங்கள். அவர்களால் தேவையற்ற வருத்தங்களைச் சந்திக்க வேண்டியது வரலாம். மற்றபடி தொழில் ரீதியாக வருமானம் திருப்திகரமாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் முழு பணத்தையும் பெற்றுக் கொண்டே உங்கள் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துக்கொள்ளவேண்டும். எந்தவித சலுகையும் காட்டாதீர்கள். கையிலே காசு என்ற நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும் அதேபோல தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி சிறப்பாகவே இருக்கும். இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலைச்சல்கள் அதிகரிக்கும். மிகுந்த கவனத்துடன் பணிபுரிந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.


மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரக் கூடியதாக இருக்கும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த ஆண்டில் உங்களுடைய ஆராய்ச்சிப் படிப்பு முடிந்து பட்டம் பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனாலும் கூடுதல் உழைப்பும் கவனமும் தேவை என்பதை மறந்துவிட வேண்டாம்.


கடகராசிக்காரர்களுக்கு எப்போதுமே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு மிகச் சிறந்த பலன்களை தரும். அதேபோல குருபகவான் ஆலயங்களாக இருக்கக்கூடிய ஆலங்குடி, திட்டை போன்ற ஆலயங்களுக்கும் சென்று வருவது மிகச் சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும். வாழ்க வளமுடன். 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...