கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழப்பு - சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (2nd Standard student Theeksheth died in private school van accident in AlwarThirunagar, Chennai - Chennai Chief Educational Officer Notice)...

 


சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தீக்சித்தின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். மிகுந்த கவலைக்குரிய இந்தச் சம்பவத்தின் முழு விவரம்:


சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம்போல், பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர் தீக்சித். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த மதிய உணவு பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி வந்துள்ளார்.


அப்போது வேனை பார்க்கிங்க செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மாணவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.


வேன் ஓட்டுநர் கைது: இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர்.


பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் குழந்தைகளை பள்ளி வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அஜாக்கிரதையாக பணியாற்றிய குழந்தைகளை பள்ளி வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் பணியாளர் ஞானசக்தியையும் கைது செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.


மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை: மாணவர் பலியான ஆழ்வார் திருநகர் தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். மாணவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


உடலை வாங்க மறுப்பு: ஒரே மகனான மாணவர் தீக்சித்தின் உடலை வாங்க மறுத்த அவரது தாய் ஜெனிபர் கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "காலை வழக்கம்போல் பள்ளிக்கு வேன் ஏற்றிவிட்டேன். 8.40 மணிக்கு குழந்தைக்கு ஆக்சிடென்டாகி விட்டதென்று போன் வந்தது. என்னவென்றுகூட அவர்கள் சொல்லவில்லை. குழந்தை சீரியஸாக உள்ளது, விஜயா மருத்துவமனைக்கு போக சொல்லிவிட்டனர். அங்கு சென்று பார்த்தபோது என் குழந்தைக்கு உயிரே இல்லை. காலையில் வெள்ளை நிற ஆடை போட்டுச் சென்ற என மகனை தூக்குறேன், உடம்பு முழுவதும் ரத்தம். 7 வயது குழந்தை, மூக்கில், வாயிலிருந்து ரத்தம். என்ன நடந்ததென்று பள்ளியிலிருந்து யாரும் வந்து சொல்லவில்லை.


பள்ளியிலிருந்து எந்தத் தகவலும் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று கேட்டால், குழந்தை லஞ்ச் பேக்கை விட்டுவிட்டான், தவறி விழுந்துவிட்டான். அதே வேன் அவன் வயிற்றில் ஏறி அங்கேயே இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.


அந்த வேன் ஓட்டுநரை கைது செய்திருக்கின்றனர். அந்தப் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யாமல், என் குழந்தை உடலை நான் வாங்கமாட்டேன். என் குழந்தையே இல்லை, நானெல்லாம் இனி உயிரோடு இருந்து என்ன செய்வது?" என்று கதறி அழுதார்.


பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை: இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்தும், பள்ளிகளில் உள்ள வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்ல உஷா தலைமையில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ்: இதைத்தொடர்ந்து, விபத்து நடந்த பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 6 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க தனியார் பள்ளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:


>>> சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



> பள்ளி நிர்வாகத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்புப் பணியாளர் நியமனம் செய்யப்படாதது, பள்ளி அளவில் பேருந்துக் குழு அமைக்கப்படாதது ஏன்?


> மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையுமின்றி 64 வயது முதியவரை பேருந்து ஓட்டுநராக நியமனம் செய்தது எப்படி?


> பள்ளி வளாகத்தில் பேருந்துகள் வந்துச்செல்லக்கூடிய நிலையில், பள்ளி வளாகத்தில் வேகத்தடை அமைத்திடாதது ஏன்?


> பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிய பின்னர், அந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்குச் சென்றுவிட்டனரா என்பதை கவனிக்க பள்ளி முதல்வர் கவனிக்கத் தவறியது ஏன்?


> பள்ளியின் முதல் பாடவேளை தொடங்குவதற்கு முன்பு வரை பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை ஒழுங்குப்படுத்திட வேண்டிய கடமையிலிருந்து உடற்கல்வி ஆசிரியரைக் கொண்டு கவனிக்கத் தவறியதும், உடற்கல்வி ஆசிரியர் விடுப்பு எனும்போது மாற்று பொறுப்பாசிரியரை நியமிக்காதது ஏன்?


> பள்ளி தாளாளர் விபத்து குறித்து அறிந்திருந்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை தராததற்கான காரணம் என்ன?


இந்தக் கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் 24 மணி நேரத்தில் நேரடியாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


உடலை வாங்க சம்மதம்: இந்நிலையில், மாணவர் தீக்சித்தின் உடலை வாங்க மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தைதையைத் தொடர்ந்து, தீக்சித்தின் உடலை வாங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.



>>> சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...

  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...  அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈர...