கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) - வாழ்க்கை வரலாறு (Biography)...



 மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) (1769-1821) கருதப்படுகிறார்.


பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார்.


1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார்.


1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார்.


பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?


நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ?

ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம்.


நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார்.


நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன?


கோர்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர்.


'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர்.


நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார்.


தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார்.


நெப்போலியனின் உயரம் என்ன?

நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார்.


நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது?

நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார்.


தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள்.


நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்?


தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.


நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார்.


ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார்.


நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன?

1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார்.


ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது.


1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார்.


நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார்.


நெப்போலியன் ஏன் பிரான்ஸின் பேரரசர் ஆனார்?

1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார்.


ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி?


நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன.


பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.


அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.


நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது?

ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார்.


நெப்போலியன் ஏன் நாடுகடத்தப்பட்டார்?

1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது.


1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர்.


மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன்

ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.


பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.



நெப்போலியன் மரணம்

1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார்.


அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.


நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்

நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...