கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) - உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளரின் வாழ்க்கை பயணம் (Life Travel of World famous Self Confidence Speaker)...



நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) வாழ்க்கை பயணம் (Life Travel)...


உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.


உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களுக்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.


இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உரையாற்றியுள்ளார். 


இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் கடந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.


1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.


சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத்தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.

பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.


அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.


Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.


ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nickஇனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nickஇன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.


தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.


இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணினியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.


Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களுக்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nickஇனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.


பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 



2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.



இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.


.


வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...


1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.


2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.


3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.


4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.


5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.


6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.


7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.


8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.


நூலின் பெயர் : நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)


நூலாசிரியர் : சேவியர்


பதிப்பகம் : தோழமை வெளியீடு


மொழி : தமிழ்


வருடம் : 2012


நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்




நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) - வாழ்க்கை வரலாறு (Biography)...



 மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) (1769-1821) கருதப்படுகிறார்.


பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார்.


1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார்.


1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார்.


பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?


நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ?

ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம்.


நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார்.


நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன?


கோர்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர்.


'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர்.


நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார்.


தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார்.


நெப்போலியனின் உயரம் என்ன?

நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார்.


நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது?

நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார்.


தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள்.


நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்?


தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.


நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார்.


ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார்.


நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன?

1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார்.


ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது.


1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார்.


நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார்.


நெப்போலியன் ஏன் பிரான்ஸின் பேரரசர் ஆனார்?

1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார்.


ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி?


நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன.


பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.


அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.


நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது?

ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார்.


நெப்போலியன் ஏன் நாடுகடத்தப்பட்டார்?

1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது.


1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர்.


மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன்

ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.


பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.



நெப்போலியன் மரணம்

1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார்.


அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.


நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்

நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...