கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தீயணைப்புத் துறையில் இருந்து முதன்முறையாக இ.ஆ.ப. அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் அலுவலர்...

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அலுவலர் பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து IASஆக நியமிக்கப்பட்டுள்ளார்...



மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக தற்பொழுது பிரியா ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில் சோ்ந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா்.


மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.


இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோ்வாகியுள்ளாா்.


தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோ்வாகியிருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வை எழுதி தனது 26 ஆவது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்ற துவங்கினார் பிரியா ரவிச்சந்திரன், இவருடைய சொந்த ஊர் சேலம். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்புத் துறையில் பயணித்து வருகின்றார். 


தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக இப்பொழுது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது, மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழக வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 



இளமையும் கல்வியும்

பிரியா தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நல்லியப்பன் பட்டய கணக்காளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை தன்னுடைய வெற்றிக்கு உந்துதலாக இருந்ததாகவும், அரசு அதிகாரிக்குச் சேவையாற்ற வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் வாய்ப்பைப் பற்றி பேசுவது தானும் ஒரு அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியதாகக் கூறுகிறார். தன்னுடைய வீட்டில் பாலின பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள குளுனி மெட்ரிக்குலேசன் பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற்றார். இவர் 1999ஆம் ஆண்டு பொதுச் சேவைகள் தேர்வை எழுதினார். தனது 26ஆவது வயதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முகமையின் (தொகுதி -1) பிரிவு அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 2003ஆண்டில் பணியினைத் தொடங்கினார். இவர் தனது பணியினைத் துவங்கும் போது இரண்டு மாதக் கைக் குழந்தையின் தாயாக இருந்தார்; இருப்பினும் இத்துறையில் கடுமையான உடல் பயிற்சியினைப் பெற்றார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரியில் தனது பிரிவு அலுவலர் பயிற்சியினைச் சிறப்பான முறையில் முடித்தார். இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள மோர்டன்-இன்-மார்ஷ் தீ சேவை கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.


அரசுப் பணி

பிரியா தனது முதல் பணி நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் பதவியேற்பதற்கு முன்னதாக கோவை மண்டலத்தில் பணியாற்றினார். கோயம்புத்தூர் -நீலகிரி மாவட்டங்களின் கோட்ட அலுவலராகவும் பணியாற்றினார். கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுச் செயலாற்றியதைக் கண்ட இப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டினர். இப்பகுதியின் அனைத்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். பின்னர் அவர் தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். இங்கு இவர் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்பு திறன்களைப் பயிற்றுவித்தார். மாநில பொதுச் சேவை ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட மகளிர் நிலைய அதிகாரிகளின் உடல் சரிபார்ப்பு உட்படப் பல அரசு குழுக்களின் உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு தேர்வானைத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கான குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிரதிநிதிகளில் பிரியாவும் ஒருவர், தொழில்துறை இடர் மேலாண்மை படிப்பிற்காக ஜெர்மனிக்குச் சென்ற குழுவில் இருந்த ஒரே பெண்மணியும் இவரே ஆவார். 2012 சனவரியில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, சென்னையில் பாரம்பரிய அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மத்திய சென்னையின் கோட்ட அதிகாரியான பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார். இந்த தீயைச் சமாளிக்க அதிக அளவில் தீயணைப்புத் துறை வீரர்களும் நவீன கருவிகளும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. கலாசு மகால் பாரம்பரிய மையத்தில் மீட்பு நடவடிக்கையின் போது பிரியா தனது சக அதிகாரியுடன் பலத்த காயமடைந்தார். இவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தீவிபத்தில் மீட்பு நடவடிக்கையில் பலியானார். பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்து அரசின் ஆதரவினை தெரிவித்தார். இவரது துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு வீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.



தமிழ்நாட்டின் வடக்கு மண்டல இணை இயக்குநராகப் பதவி உயர்வு மற்றும் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை கண்ட ஊடகங்கள் இவரது செயலினை வெகுவாக பாராட்டினர். 


விருதுகள்

தன்னலமற்ற துணிச்சலான செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரால் 2012ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம்

2013ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் விருது

பெமினா பெண் சக்தி விருது (2013)

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதல்வர் விருது (2014)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -  மாண்புமிகு அமைச்சர் உயர்திரு.ஏ.வ.வேலு அவர்களுடன்  ADAF கூட்டமைப்பி...