தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள் - Tamil Nadu Budget 2024-25: Highlights...
>>> நிதிநிலை அறிக்கை - பாகம் 1 (PDF)...
>>> நிதிநிலை அறிக்கை - பாகம் 2 (PDF)...
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டின் அதன் முக்கிய அம்சங்கள்:
நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை, பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடிக்கு திறன் ஆய்வகங்கள்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.
சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
சிப்காட் பகுதியில் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும்.
கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு
புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பள்ளிக் கல்வி துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்வி மற்றும் விடுதிகள் கட்டணத்தை அரசே ஏற்கும்.
ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்கிற பெயரில் இது செயல்படுத்தப்படும்.
ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
> சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.
> நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு
பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான
தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
"காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறு மன்ன நிலம்"
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தொடர்ந்து அவர் ஆற்றிய அறிமுக உரையில், "நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களை தலைநிமிர செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் பட்ஜெட் உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன" என்றார்.