கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?



SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?


        - ராக குமார்-

----------------------------------------


 "நீங்க எத்தனை மார்க் எழுதினீங்க?"


நான் 40 மார்க் எழுதினேன். நீங்க?


"நான் 70 மார்க்  எழுதுனேன்"


 "ஓ 70 மார்க்குக்கு சொன்னானா "


"அவன் எங்க சொன்னா,  எல்லாமே நானாத்தான் எழுதினேன்".


 ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களின் உரையாடல்தான் இது.


 தன்னால் சுயமாக எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் SCRIBE பெற்று தேர்வு எழுதும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. முன்பு  பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மட்டுமே ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.


மாணவர் குறிப்பிடும் சில குறியீடுகள், வரைபடங்களை பிற பாட ஆசிரியர்களால் எழுத முடியாது என்பதனாலேயே இந்த ஏற்பாடு.


 ஆனால் நம் ஆசிரியர்களோ ஸ்க்ரைப் என்பதை மறந்து தன்னையே தேர்வராக கருதிக் கொண்டு  தெரிந்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு மற்ற மாணவர்களை விட ஸ்க்ரைப் எழுதும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்லாமல்....  முதல் மதிப்பெண் பெற்ற கொடுமையெல்லாம் அரங்கேறியது.


 உடனே ஆசிரியர்களின் மன நிலையில் ஒரு மாற்றம்... ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிற அளவுக்கா எழுதுறது? ஒரு 50, 60 மார்க் எடுக்கிற அளவுக்கு எழுதினா பத்தாதா? என்று ஒரு தரப்பினரும்


 "அவ்ளோ மார்க் தேவையில்லைங்க... பாஸ் பண்ற அளவுக்கு எழுதினா போதும்" என்று இன்னொரு தரப்பினரும்  பேச ஆரம்பித்திருக்கிறார்களே தவிர...


மாணவர் சொல்வதை மட்டும் எழுதினால்  போதும் என்று யாருமே பேசுவதில்லை.


 SCRIBE எழுதினாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்ற மோசமான கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.


 இதன் காரணமாகவே கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் ஸ்க்ரைப் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது. 


 முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில்  ஸ்க்ரைப் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர், பதினோராம் வகுப்பில் படிப்பதற்கு எளிதாக இருக்கும் கலை பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பார்.  ஆனால் இப்பொழுது அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.


 இதற்குக் காரணம் காரணம் "தேர்வு எழுதுபவர் ஆசிரியர் தானே படிக்காமலேயே தேர்ச்சி அடைந்து விடலாம்" என்ற மாணவரின் நம்பிக்கையும்.... "பாவம் அவன் படிக்கலைனா  என்ன.. நாம  பாஸ் பண்ற அளவுக்கு எழுதி விடுவோம் "என்ற ஆசிரியரின் தாராள குணமும் மாணவருக்கு படிக்கத் தேவையில்லை என்ற தைரியத்தை கொடுத்திருக்கிறது.


மேலும்  படிக்க திறன் இருக்கும் மாணவர்களுக்கு கூட படிப்பதற்கு அவசியமற்ற சூழ்நிலையை  நாமளே உருவாக்கிக் கொடுக்கிறோம்.


 இதற்காக நாம் எவ்வித குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறோம்.


இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஸ்க்ரைப் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து அனைத்து ஆசிரியர்களுமே ஸ்க்ரைப் எழுத வேண்டிய நிலை வரும்.


 "சார், அவன் பெயில் ஆனா நம்மல கேள்வி கேட்க மாட்டாங்களா?" இது பெரும்பாலான ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது.


இப்படித்தான் நாமளே உருவாக்கிக் கொண்ட கற்பனையான கேள்விகள் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.


 மாணவர் பெயிலானால் ஸ்க்ரைப் எழுதுபவரை  எப்படி கேள்வி கேட்க முடியும்?மாணவர் சொல்வதை தவறில்லாமல் எழுதுவது தான்  ஸ்க்ரைப்பின் முக்கிய பணியே தவிர, மாணவர் சொல்லாததை எல்லாம் எழுதி தேர்ச்சி அடைய வைக்க வேண்டிய தேவை இல்லை. இந்த தெளிவு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.


ஒன்பதாம் வகுப்பு வரை வாசிக்க, எழுதத் தெரியாத மற்றும் அடிப்படை கணிதம் தெரியாத  மாணவரை 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் ஸ்கைரைப் மூலம் எழுதி தேர்ச்சி அடைய வைப்பதால்.... இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் சிறிதளவு நன்மையாவது இருக்குமா? ஆசிரிய சமுதாயம் சிந்திக்க வேண்டாமா?  


ஏற்கனவே மிக மிக அதிக பாடப்பொருள், மாணவர்களின் கற்றல் ஆர்வ குறைபாடு,  மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு, பெற்றோர்களின் ஒத்துழைப்பின்மை, இவற்றுடன் 100% தேர்ச்சி, பாட சராசரியை அதிகரித்தல் போன்ற கல்வி அதிகாரிகளின் நெருக்கடிகள்...


இவற்றுக்கு மத்தியில் கூடுதலாக மாணவர் சொல்லாதவற்றையெல்லாம் எழுதி தேர்ச்சி அடையச் செய்வது, எதிர்காலத்தில் கணிக்க இயலாத பல புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்... 


எனவே இனிமேலாவது ஸ்க்ரைப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் முன்  நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்... 👇


 நான் சொல்வதை மட்டும் எழுதுபவரா?  தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns