கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? - கவனம்! - தென்னிந்திய கடற்பரப்பு கள்ளக்கடல் ஆகலாமென INCOIS ஆரஞ்சு எச்சரிக்கை...
விடுமுறையைக் கடலில் கழிக்கத் திட்டமா? தென்னிந்திய கடற்பரப்பு கள்ளக்கடல் ஆகலாமென INCOIS ஆரஞ்சு எச்சரிக்கை...
கடல் பரப்பின்மீது காற்று வீசும்போது நீரில் சலனம் ஏற்படும். காற்று அதிகமாகும்போது இந்தச் சலனங்கள் அதிகரித்து நகரத் தொடங்கும். சில சமயம் கடுங்காற்று / புயலின்மூலம் உருவாகும் சலனங்கள் தொடங்கிய இடத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும். அவற்றை Swell waves என்பார்கள். இதுபோன்ற அலைகள் வரக்கூடிய சாத்தியம் இருந்தால் அந்தக் கடற்பகுதியை "கள்ளக்கடல்" என்று அழைப்பார்கள். கள்ளத்தனமாக வந்து திடீரென்று பெரிய அலையாக மாறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு என்ற பொருளில் உருவான மலையாளப் பதம் இது.
காற்று எவ்வளவு வலுவானதாக இருக்கிறதோ அதைப் பொறுத்து இந்த அலைகளின் ஆற்றல் அதிகரிக்கும். இந்த வகை அலைகள் எளிதில் உடைந்துவிடாமல் நெடுந்தூரம் பயணிக்கும் ஆற்றல் உடையவை. இவற்றின் ஆற்றலும் அலைநீளமும் மிக அதிகம்.
இந்த ஸ்வெல் அலைகள் நீண்ட தூரம் பயணிப்பதால் அதிகமான வண்டலையும் மணலையும் இழுத்து வரக்கூடியவை, இவற்றில் ஆற்றலும் வேகமும் அதிகம். ஆகவே இவற்றில் மாட்டிக்கொண்டால் எளிதில் தப்பிக்க முடியாது.
இந்தியப் பெருங்கடலில் சில சமயம் இந்த ஸ்வெல் அலைகளும் கள்ளக்கடல் நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு.
ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5, 2024) கடல்சார் தகவல்களுக்கான தேசிய அமைப்பான INCOIS (தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்) ஒரு ஆரஞ்சு அலர்ட் அறிக்கை விடுத்திருந்தது.
"கேரளா, தெற்கு தமிழ்நாடு, லட்சத்தீவு, கர்நாடகா, கோவா, ஆந்திரா, ஒடிஷா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் ஸ்வெல் அலைகளோடு கூடிய கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படலாம். மறு அறிவிப்பு வரும்வரை ஆரஞ்சு எச்சரிக்கை தொடரும்" என்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவிலிருந்து பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றின்மூலம் இந்த ஸ்வெல் அலைகள் தோன்றியிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்துக்கு வங்காள விரிகுடா பகுதி சீற்றம் கொண்டதாக இருக்கும் என்றும் INCOIS அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் எந்த கடற்பகுதியிலும் கடலுக்குள் இறங்குவது, நீச்சலடிப்பது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும். அதுவே கள்ளக்கடலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் வழி.
Picture : Thomson Learning Inc.
🌊