ஆச்சரியப்படுத்திய விடயங்கள் - தினா சனிச்சார்...
வருடம் : 1867
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷார் மாவட்டதிலுள்ள ஓர் அடர்ந்த காட்டினுள் வேட்டையர்கள் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஓநாய் கூட்டம் அவர்களது பாதையை கடக்கிறது .
அந்த கூட்டத்தில் வினோத ரூபத்தில் நான்கு கால்களில் ஒரு உருவம் நடந்து போவதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட, நொடிப்பொழுதில் அந்த ஓநாய் கூட்டம் மறைந்துவிடுகிறது.
அந்த வினோத விலங்கை வேட்டையாடும் நோக்கத்தில் இவர்களும் ஓநாய் கூட்டத்தின் காலடி பாதையை பின்தொடர, அந்த கூட்டம் ஒரு குகையை சென்றடைந்ததை அறிகின்றனர்.
குகையின் வாயிலில் தீயை மூட்ட, புகையினால் உள்ளிருந்த ஓநாய் கூட்டம் திசைக்கு ஒன்றாக சிதற, அப்போது தான் அந்த வினோத உருவம் விலங்கல்ல, அது ஒரு 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் என்று தெரியவருகிறது.
பிறகு அந்த ஒநாய்க்கூட்டத்தை வேட்டையாடி விரட்டியடித்து, அந்த வினோதச் சிறுவனை நகருக்குள் அழைத்து வந்தனர்.
அழைத்துவந்த சிறுவன் ,ஆக்ராவிலுள்ள சிகாந்த்ரா அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப்படுகிறான்.
சனிக்கிழமை இல்லத்திற்கு வந்ததால், தினா சனிச்சார் என்று அங்கிருந்த பாதிரியாரால் ஞானஸ்தானம் செய்யப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.
அதுவரை மனிதர்களையே பார்க்காத அந்த சிறுவனுக்கு அங்கிருந்த சூழல் முற்றிலும் புதுமையாக இருந்தது.
நான்கு கால்களில் நடந்து, பற்களை கூர்மையாக்கிக் கொண்டு, என அவன் மனிதர்களுடன் இருந்தாலும் ஓநாயை போலவே நடந்துகொண்டான்.
அதே போல் சமைத்த உணவை அளித்தபோதும் அதை மிருகத்தை போல் நுகர்ந்து பார்த்து, அவற்றை தள்ளி விட்டு பச்சையாக கறியை உண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்கள் நிற்க கற்றுக்கொண்டாலும் நான்கு கால்களில் நடப்பதையே விரும்பினான்.
அவனுக்கு மனிதர்களின் மொழி புரியாததால் அவன் எது தேவையாக இருந்தாலும் ஊளையிட்டே கேட்டு வாங்கிக்கொண்டான்.
காலப்போக்கில் உணவருந்த, ஆடை அணிய கற்றுக்கொண்டதாக ஒரு சில குறிப்புக்கள் கூறுகிறது.
இருப்பினும் நம்மை போல் சாதாரண மனிதனாக அவனால் கடைசி வரை இருக்க முடியவில்லை.
கடைசி வரை அவனால் மனித மொழி பேச முடியவில்லை.
அவன் மனித இனத்திடம் கற்றுக்கொண்ட ஒரே பழக்கம், புகைப்பழக்கம்.
ஆம், செயின் ஸ்மோக்கரான சனிச்சார், தன்னுடைய முப்பத்தி ஐந்தாவது வயதில் காசநோயால் இறந்து போனான்.
இவரது வாழ்க்கை குறிப்பை அடிப்படையாய் வைத்து தான் பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக் புத்தகத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.
இவரைப்போல் உலகில் பல மனிதர்கள் விலங்குகளால் வளர்க்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.