கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா - அணு ஆயுத தாக்குதல் நாள்...



 ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா - அணு ஆயுத தாக்குதல் நாள்...


ஆகஸ்ட் 1939  


நாஜி ஜெர்மனியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த 

இயற்பியல் தத்துவ மேதை 

ஆல்பர்ட் ஐண்ஸ்டைண் 

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதுகிறார். 


இதை எழுதத் தூண்டியவர் 

லியோ சிலார்ட் எனும் சக இயற்பியலாளர்


ஐண்ஸ்டைண் இவ்வாறு எச்சரிக்கிறார்

" நாஜி ஜெர்மனி உலகின் சக்தி வாய்ந்த அணு குண்டைத் தயாரிக்கும் முகத்தில் இருக்கிறது. 

அதற்கு முன்பு அமெரிக்கா அணுகுண்டை கண்டறியாவிட்டால் 

இந்த உலகை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று எழுதுகிறார். 


அமெரிக்கா கண் விழித்துக் கொள்கிறது 

டிசம்பர் 1941 மண்ஹாட்டன் ப்ராஜெக்ட் எனும் ரகசிய திட்டம் மூலம் 

ஒப்பன்ஹைமரை தலைவராக நியமித்து அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறது 


முரண் யாதெனில் அணுகுண்டு உருவாக்குமாறு கடிதம் எழுதியவரும் அணுகுண்டு தொழில்நுட்பத்தின் மூல சூத்திரமான ஈ = எம்சி² கண்டறிந்தவரே  இந்தத் திட்டத்தில் தேசத்தின் பாதுகாப்பு கருதி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.   


அணுகுண்டு கண்டறியும் வேலை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க 


பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அணுகுண்டை பல ஆயிரம் மைல்கள் தூக்கிக் கொண்டு சென்று போடுவதற்கு ஏற்றவாறு போர் விமானங்கள் அப்போது இல்லை. 


அதற்கு ஏற்றவாறு 

நவீன போர் விமானங்களை உருவாக்கும் பொறுப்பு போயிங் நிறுவனத்திடம் செப்டம்பர் 1941 இல் வழங்கப்பட்டது. 


கவனிக்க - ஜப்பான் அமெரிக்காவின் பியர்ல் ஹார்பரைத் தாக்கியது டிசம்பர் 1941 . அதற்கு முன்னதாகவே 

இத்தகைய நெடிய போர் நிலை வரும் என்பதை கணித்தோ என்னவோ அல்லது பசிபிக்கில் ஜப்பான் போன்ற நாட்டுடன் போர் புரிய நவீன விமானங்கள் வேண்டியோ 250 பி29 போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. 


இந்த விமானங்களை உருவாக்க 

அணுகுண்டை தயாரிக்க செலவழித்ததை விட இருமடங்கு செலவழிக்கப்பட்டது. 


பி29 சூப்பர் ஃபோர்ட்ரெஸ் நவீன போர் விமானங்களை உற்பத்தி செய்து டெலிவரி செய்யும் போது அதில் 

பல பிரச்சனைகள் கோளாறுகள் இருந்ததை  அறிய முடிந்தது. 


இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் கன்சாஸ் எனும் இடத்தில் ஐந்து வாரங்கள் 

1944 ஆம் ஆண்டு இந்த விமானங்களை எல்லாம் போருக்குத் தேவையான வழிவகைகளில் மராமத்து பார்த்து தயார் செய்யப்பட்டன. 


இந்நிலையில் 

அமெரிக்காவின் 509வது காம்போசிட் க்ரூப் எனும் படையை தலைமை தாங்கும் பொறுப்பு - கர்னல் பவுல் டபிள்யூ டிபெட் ஜூனியரிடம் டிசம்பர் 1944 இல் ஒப்படைக்கப்பட்டது


இந்த 509 வது படையின் முக்கிய முழு முதல் பணி - உலகின் முதல் அணுகுண்டை எதிரி நாட்டின் மீது விமானத்தில் இருந்து வீசுவது மட்டுமே. 


இதற்கெனவே அமெரிக்காவிலும் பசிபிக்கிலும் தனியாக இந்தக் குழு பயிற்சி எடுத்து வந்தது. 


பி29 விமானங்களுள் சில மட்டும். 

அணுகுண்டு தாங்கி ஏவுவதற்கு தோதாக வடிவமைக்கப்பட்டன. 

அவற்றின் எடை குறைக்கப்பட்டது. 

இந்த திட்டத்துக்கு "சில்வர் ப்ளேட் பார்ஜெக்ட்" என்று பெயர் வைக்கப்பட்டது. 


டிப்பெட் தனக்கான பிரத்யேக பி29 விமானத்தை மே 9, 1945  இல் தேர்ந்தெடுத்தார். 


இந்தக் குழுவானது ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஜூலை 6 ஆம் தேதி 

பசிபிக்கில் ஜப்பானில் இருந்து 1500 மைல் தூரத்தில் இருக்கும் டினியன் தீவுக்கு வந்து அணுகுண்டின் வரவுக்காகவும் அதை வீசுவதற்கான உத்தரவுக்காகவும் காத்திருந்தது. 


ஜூலை 16,1945 

நியூ மெக்சிகோ மாகாணத்தில் 

ட்ரினிட்டி பரிசோதனையின் மூலம் வெற்றிகரமாக அணுகுண்டை வெடிக்கச் செய்து பரிசோதனை செய்து காண்பித்தார் ஒப்பன்ஹைமர்


இப்போது 

அமெரிக்கா கையில் 

லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் ஆகிய இரண்டு அணுகுண்டுகள் இருக்கின்றன ஆனால் இவற்றை ஜப்பானுக்கு அருகில் இருக்கும் டினியன் தீவுக்கு கொண்டு செல்ல வாகனம் வேண்டுமே? 


அப்போது கை கொடுக்கிறது. 

யூஎஸ்எஸ் இண்டியானாபாலிஸ் போர்க்கப்பல்.. 


இந்த கப்பலுக்கு ஒரு பழிவாங்கும் வரலாறு இருக்கிறது.  


டிசம்பர் 7,1941 ஆம் ஆண்டு 

பியர்ல் ஹார்பரை ஜப்பான் விமானப்படை நிர்மூலமாக்கிய போது அங்கிருந்த பல போர்க்கப்பல்கள் சிதறடிக்கப்பட்டன. ஆனால் இந்த இண்டியாணாபாலிஸ் கப்பல் மற்றும் அதில் இருந்த போர் விமானங்கள் போர் ஒத்திகைக்காக வேறொரு இடத்துக்குச் சென்றதால் தப்பித்தன.


இந்த கப்பலில் தான் தற்போது 

உலகின் முதல் இரண்டு அணுகுண்டுகள் டினியன் தீவு நோக்கி பரமரகசியமாக கொண்டு வரப்பட்டு ஜூலை 25ஆம் தேதி வந்தடைந்தன. 


இதில் மற்றொரு ட்விஸ்ட் யாதெனில் 

வந்து அணுகுண்டுகளை டெலிவரி செய்த நான்காவது நாள் இந்த போர்க்கப்பல் ஜப்பானின் நீர் மூழ்கி குண்டுகளான டோர்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இப்போது 

அணுகுண்டை வீச வேண்டிய டிபெட் தலைமையிலான படை ரெடி

அணுகுண்டு ரெடி 


அணுகுண்டை எங்கு எப்போது வீச வேண்டும் என்ற ஆணைக்கு காத்திருந்தனர்


ஜூலை 17 ,1945 தொடங்கி நடந்து வந்த பாட்ஸ்டேம் அமைதி மாநாட்டில் நேச நாடுகள் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜெர்மனியை மற்றும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை எப்படி பங்கிட்டுக் கொள்ளலாம் எப்படி நிர்வகிக்கலாம் என்பது குறித்து கலந்தாலோசித்தனர்


இதில் ஜூலை 25 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

உடனடியாக நிபந்தனையற்ற சரணாகதி அடையாவிட்டால் துரிதமான முறையில் மிகத்தீவிரமான மனித சமுதாயம் இதுவரை கண்டிராத பேரழிவை சந்திக்க நேரும் என்று சூசகமாக அணுகுண்டு குறித்து எச்சரித்தார்


ஆனால் ஜப்பான் செவிகளில் இது விழவில்லை. அமெரிக்கர்கள் அணுகுண்டே கண்டறிந்தாலும் அதை பக்குவமாக 

இவ்வளவு தூரம் கொண்டு வரும் தொழில் நுட்பமெல்லாம் இருக்காது என்றே நம்பியது. 


அதே ஜூலை 25 ஆம் தேதி 1945, 

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இருந்து பசிபிக் போர் தளபதிக்கு உத்தரவு பறக்கிறது. 


509வது காம்போசிட் படை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு மேல் எப்போது வானிலை அனுமதி அளிக்கிறதோ அப்போது 


ஹிரோஷிமா

கொகுரா

நிகாட்டா

நாகசாகி 

ஆகிய நகரங்களில் ஒன்றின் மீது ஸ்பெசல் குண்டை வீச வேண்டும். 


வீசச் செல்லும் போது 

ராணுவ மற்றும் சிவிலியன் அறிவியலாளர்களை கூட வேறு விமானங்களில் அழைத்து சென்று 

இந்த குண்டினால் ஏற்படும் பாதிப்புகளை படம் பிடித்து அளவிட வேண்டும். 


இன்னும் சில அணுகுண்டுகள் அடுத்தடுத்து டெலிவரி செய்யப்படும். அதை எங்கு வீச வேண்டும் என்பதும் பின்னால் தெரிவிக்கப்படும்"


என்று உத்தரவும் வந்து விட்டது.


அணுகுண்டு 

அணுகுண்டு வீசும் விமானம் மற்றும் விமானி

அணுகுண்டு வீசச் சொல்லி உத்தரவு 


மூன்றும் வந்து விட்டது. 


ஆகஸ்ட் மூன்றுக்குள் ஜப்பான் சரணடையவில்லை என்பதால் 


முதல் இலக்காக 

ராணுவ தளவாடங்களும் கூடவே இதுவரை விமானத்தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருந்த ஹிரோஷிமா தேர்ந்தெடுக்கப்பட்டது. 


இதுவரை பாதிப்புக்குள்ளாகாமல் இருந்தால் தான் 

அணுகுண்டினால் ஏற்படும் முழுமையான பாதிப்பு ஜப்பானுக்குத் தெரிய வரும் என்பதே இந்த இலக்கு தேர்ந்தெடுக்கப்பட காரணம். 


தொடர்ந்து வானிலை கண்டறியும் விமானங்கள் ஹிரோஷிமாவின் மீது வலம் வந்து 


ஆகஸ்ட் ஆறு அன்று வானிலை சரியாக இருக்கவே.. 


அன்று அதிகாலை 2.45 மணிக்கு 

தனது பி29 விமானத்தில் 

டெப்பெட் மற்றும் அணுகுண்டைக் கையாளும் கேப்டன் பார்சன் மற்றும் மோரிஸ் ஜெப்சன் ஆகியோருடன் டேக் ஆஃப் செய்தார்.


விமானத்தின் இடப்பக்கம் தனது தாயின் பெயரான எனோலா கே என்பதை அவரது நினைவாக எழுதக் கூறியதால் அந்த விமானம் எனோலா கே என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. 


அதிபயங்கரமான அணுகுண்டை டேக் ஆஃப் செய்யுமுன்பே அசெம்பிள் செய்தால் 

வெடிக்கும் அபாயம் உள்ளதால்


வண்டி டேக் ஆஃப் ஆனதும் வானத்தில் வைத்த படியே அணுகுண்டு அசெம்பிள் செய்யப்பட்டு 

அதிகாலை ஆறு மணிக்கு வீசுவதற்கு தயார் செய்யப்பட்டது. 


அப்போது தான் முதல் முறையாக அவரது குழுவிடம் டிபெட் உலகின் முதல் அணுகுண்டை வீசப்போவதை அறிவிக்கிறார். 


காலை 7:00 

ஹிரோஷிமாவின் வான்பரப்பில் எனோலா கே நுழைந்தது


ஜப்பானிய ரேடார்கள் 

இதை மோப்பம் பிடித்ததால் மக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது


மக்கள் வீடுகளுக்கு பதுங்கினர்


ஆனால் ஏதும் நிகழவில்லை


இவ்வாறு 

7.25 மணிக்கு ஒருமுறையும் 


8.00 மணிக்கு 

மறுமுறையும் மீண்டும் எனோலா கே வட்டமடிக்க மக்கள் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை துச்சமாகக் கருதி அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். 


சரியாக 8:09 மணிக்கு 

வானிலை ஆராயும் விமானத்தில் இருந்து தற்போது மேகமூட்டம் இல்லை. 

எல்லாம் க்ளியர் என்று தகவல் கிடைக்க 


இம்முறை எனோலா கே ஹிரோஷிமா நகரில் இருந்து மேலே 26000 அடிக்கு இறங்கி வந்து 


ஹான்காவா நதி மற்றும் மோடோயாசு நதிகள் இணையும் டி வடிவ பாலத்துக்கு நேர் மேலே 


8:15 மணிக்கு 

அணுகுண்டை மேலிருந்து வீசியது 


நிலப்பரப்பில் இருந்து

1900 அடி மேலே அணுகுண்டு வெடித்துச் சிதற


காளான் போன்ற பெரிய வடிவத்தில் மேக மூட்டம் கிளம்பியது. 


அந்த இடத்தை சுற்றி நான்கு மைல் தூரத்திற்கு அனைத்தும் சாம்பலாகின. 


சுமார் ஒரு லட்சம் மக்கள் உடனேவும் 

இன்னும் ஒன்றரை லட்சம் மக்கள் அடுத்த சில நாட்கள் முதல் வருடங்களுக்கும் மாண்டணர். 


டோக்யோவில் இருந்து நேரடியாக ராணுவ அதிகாரிகள் வந்து நிலைமையின் கோரத்தைக் கண்ணால் காணும் வரை 

இது அணுகுண்டு இல்லை என்ற வதந்தியை வானொலியில் மக்கள் நம்புமாறு பரப்பிக் கொண்டிருந்தனர். 


அணுகுண்டு வீசப்பட்டு பதினாறு மணிநேரங்கள் கழித்து 

அமெரிக்க அதிபர் ட்ரூமேன் மக்களுக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட செய்தியை அறிவித்தார். 

ஐப்பான் இப்போதும் சரணடையவில்லை என்றால் இன்னும் உக்கிரமான அழிவை சந்திக்க நேரும் என்று எச்சரித்தார். 


ஒப்பன்ஹைமர் தான் செய்தது மிகப்பெரும் தவறு என்ற குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகி அதிபர் ட்ரூமனை சந்தித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். 

அதற்கு ட்ரூமன் 

"அணுகுண்டு தயாரிப்பது மட்டுமே உனது பணி. அதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் என்னைச் சேர்ந்தது? நீ கவலைப்படத் தேவையில்லை" என்று கூலாகக் கூறிவிட்டார்


ஐண்ஸ்டைணும்

"நான் நாஜிக்கள் அணுகுண்டுகளை கண்டறிவதற்குள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று நம்பியிருந்தால் 

நிச்சயம் அமெரிக்க அதிபருக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுதி இருக்க மாட்டேன்" என்றார் 


இவ்வாறு உலகின் முதல் அணுகுண்டு 

மனிதர்கள் மீது நேரடியாக வீசி சோதனை செய்யப்பட்ட நாள் இன்று 


ஆகஸ்ட் 6,1945 


இன்று உலகம் முழுவதும் பத்து பெரிய நாடுகளிடம்  ஹிரோஷிமாவை விடவும் பன்மடங்கு  சக்தி வாய்ந்த அழிவைத் தரக்கூடிய

அணுகுண்டுகள் உள்ளன. 


அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டே செல்வதில் வல்லரசுகளும் சளைக்காமல் ஈடுபடுகின்றன. 


இதன் மூலம் மனித இனம்  தனக்கு மட்டுமின்றி உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காரியத்தை நாம் ஒருபோதும் ஏற்கக்கூடாது. 


அணு ஆயுதங்களை படிப்படியாகக் குறைத்து 

அணு ஆயுதங்களற்ற அமைதியான பூமி நம் சந்ததிகளுக்கு அமைய வேண்டும். 


அணுவிதைத்த பூமியிலே

அறுவடைக்கும்

அணுக்கதிர் தான் 


 அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் உலக அமைதிக்காகவும் 

இன்னுயிரை நீத்த ஹிரோஷிமா யமகுஷிககளின் ( அணுகுண்டைத் தாங்கிய தியாகிகள்)  நினைவாக இந்த நாளை அனுசரிப்போம். 


 நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...