கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் - அமுதம் அங்காடிகளில் அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு



 தீபாவளியையொட்டி ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் - அமுதம் அங்காடிகளில் அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு


அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்...


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டத்தை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-



"தமிழ்நாட்டில் விவசாயப் பெருமக்களின் நலனைப் பாதுகாத்திடவும், பொதுவிநியோகத் திட்டப் பொருட்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து பொதுவிநியோகத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திட முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-இல் தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டினைக் கடந்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.



தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதல்-அமைச்சர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு லாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



அதன் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக் காலங்களைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை லாபநோக்கமின்றி ரூ.499/- விலையில் அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு என்ற பெயரில் இன்று (22.10.2024) சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.


மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த மளிகைத்தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.


இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் த.மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். "


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...