கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு - சில கேள்விகளும் பதில்களும்

 


ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு - சில கேள்விகளும் பதில்களும்


// எந்த விருதும் வாங்காமல். யார் கண்ணிலும் படாமல் அமைதியாக மிக மிக அடக்கமாக யார் கண்ணிலும் படாமல் தனது முழுத் திறனையும் பயன்படுத்தி சொல்லிக் கொடுத்து வரும் ஆசிரியர்களை அறிவேன். குழந்தைகளுக்கு புரியவில்லை என்று கூறி அழுத ஆசிரியர்களை அறிவேன்.‌ சம்பளத்தில் ஒரு பகுதியை சளைக்காமல் குழந்தைகளுக்கு செலவு செய்யும் ஆசிரியர்கள். சேமநல நிதியை எடுத்து மாணவர்களுக்கு மனம் கோணாமல் செலவு செய்து வரும் ஆசிரியர்கள் .


இப்படி எத்தனையோ விதமான தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத, இனித் தகுதித் தேர்வு வைத்தால் தகுதி பெறுவார்களா என்ற நிலையில் இருப்பவர்களையும் அறிவேன்.


இதோ அடுத்த ஓர் ஆசிரியர் தின விழா வந்திருக்கிறது. இந்த ஆசிரியர் தின விழாவை, ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்களா? என்று தெரியவில்லை.


குறிப்பாக, 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? என்று அனைவருமே ஊகிக்க முடியும். ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று கருதும் அல்லது தீர்மானிக்கும் நீதிபதிகள் எந்தவிதமான எழுத்துத் தேர்வையும் சந்திக்காமல், நேர்காணல் கூட இல்லாமல் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களே.


கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளே போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் கொலிஜியம் பரிந்துரை அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகின்றனர்.


தகுதித் தேர்வு இல்லாமல் பிரகாசித்த ஆசிரியர்கள்


இது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை முதலில் அலசுவோம்.‌ தமிழ்நாட்டில் பொதுக் கல்வி முறை வேகமாக வளர்ந்து வந்த காலம். பள்ளிகள் வளர்ந்த அளவுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர் இல்லாத காலம். பதினொன்றாம் வகுப்பு, அதுவே அன்றைய பள்ளி இறுதி வகுப்பு. பதினொன்றாம் வகுப்பிற்கு தமிழ் கற்பித்து வந்த தமிழாசிரியர் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாதவர்.


ஆனால் தமிழ் கற்பிப்பதில் தனி முத்திரை பதித்தவர். பள்ளி முழுவதும் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவரும் பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தால் தான் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கு கற்பிக்க முடியும் என்ற நிலை வந்தது. அவரும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதினார்.


தமிழ் பாடத்திலேயே தேர்ச்சி அடையவில்லை அவர். சிறந்த ஆசிரியராக விளங்க தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில்லை. தேர்வுக்கும் பாடம் நடத்துவதற்கும் தொடர்பில்லை. தமிழ் அறிஞர்கள் தமிழில் போட்டித் தேர்வு எழுதுபவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு மதிப்பெண் எடுக்க முடியாது.


ஆசிரியர் தகுதிகள்


இது ரொம்ப பழைய கதை என்று நீங்கள் நினைக்கலாம். சரி புதிய விசயங்களுக்கு வருவோம். தகுதித் தேர்வில் தகுதி பெற்றோர் அனைவரும் திறன் மிக்க ஆசிரியர்களாகத் திகழ முடியுமா? தகுதித் தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று, ஒருவர் பணிக்கு வந்து உள்ளார் என்று ‌வைத்துக் கொள்வோம். அவர் நல்ல ஆசிரியராக, மாணவர் மைய ஆசிரியராகத் திகழ முடியுமா? அதற்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒரு நல்ல ஆசிரியருக்கு என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டும்? அந்தத் தகுதிகளை பெறத் தக்க வகையில் தகுதித் தேர்வுகள் இருக்கிறதா என்று முதலில் பார்ப்போம்.


என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதில் ஆழ்ந்த அறிவும் தெளிவும், சொல்லிக் கொடுப்பதை புரியும்படி, புரியும் விதத்தில், புரிய வைக்கும் உத்திகளை கடைபிடித்து சொல்லிக் கொடுப்பது. ஆசிரியரின் அத்தியாவசிய பண்புகளில் இரண்டு முக்கியமானது… ஒன்று பொறுமை, மற்றொன்று மாணவனின் நிலையிலிருந்து மாணவனைப் பார்த்தல்.


படைப்பூக்கம் நிறைந்தவராக இருக்க வேண்டும். மாணவர்களுக்குத் தக்கவாறு பொருத்தப்பாடு வேண்டும். மாணவன் தன்னை முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கவராக ஆசிரியர் விளங்க வேண்டும். ஆசிரியர் எல்லாவற்றிலும் ஓர் நம்பிக்கைக்கு உரிய பாத்திரமாகத் திகழ வேண்டும். மாணவனைக் கவர்ந்திழுக்கும் மனோவசியம் தெரிந்திருக்க வேண்டும்.


தொடர்ச்சியாக கற்போராக விளங்க வேண்டும். மாணவன் சொல்வதை மனதைத் திறந்து வைத்துக் கொண்டு பொறுமையாக் கேட்கும் தெய்வீக ஆற்றல் வேண்டும். வகுப்பறையில் மாணவனை பங்கேற்பாளனாக மாற்றும் பக்குவத்தை வளர்த்தெடுத்திருத்தல் அவசியம். மாணவனது கற்றலுக்கு எப்போதும் துணை நிற்றல். கொடுத்திருக்கும் பாடப் பகுதிகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் முடித்துக் காட்டுபவர் அல்ல. தனக்கு ஒதுக்கப்பட்ட பாட வேளையில் எவ்வளவு திறன் மிக்கவராக மாணவனை மாற்றப்போகிறார் என்பதே நல்லாசிரியருக்கான அளவுகோல்.


ஆளுமைப் பண்புகளை வளர்தெடுத்தல்

 “எதற்கும் நான் இருக்கிறேன்..” என்று தைரியம் ஊட்டுபவராக இருக்க வேண்டும். “நீயெல்லாம் ஒரு வாத்தியாரா?” என்று சாமான்ய மனிதர்கள் கேட்கும் கேள்வியில் மேற்படித் தகுதிகள் அடங்கியுள்ளன. மேற்கண்ட தகுதிகளை வளர்த்தெடுக்கவா ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது? அல்லது நடக்கப் போகிறது? ஆசிரியர் தகுதித் தேர்வில் மேற்படிக் கூறுகளை பரிசோதிக்கும் வினாக்கள் எத்தனை இடம்பெற்று இருந்தன. ஒரு தேர்வின் மூலம் மேற்படித் தகுதிகளை பரிசோதனை செய்ய இயலுமா? என்ற கேள்வி அத்துடன் சேர்ந்தே பிறக்கிறது.


மாணவர்கள் நல்லாசிரியர்கள்

இக்கட்டுரையாளர் இதேபோன்ற ஓர் ஆசிரியர் தினத்தில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் ஓர் ஆய்வை நடத்தினார். ஆய்வுக்கான அடிப்படைக் கேள்வி இதுதான். “ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பல ஆசிரியர்களிடம் படித்துவிட்டு வந்துள்ளீர்கள். உங்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில் உங்கள் மனம் கவர்ந்த ஒரேயொரு சிறந்த ஆசிரியரின் பெயரை எழுதிக் கொடுங்கள். அவர் எப்படி உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர்? என்பதையும் ஒரு தாளில் எழுதிக் கொடுங்கள்” என்றேன்.


அதுவே கட்டுரையாளரின் முதல் நூலான “பள்ளிக் கூடத் தேர்தல்: நல்லாசிரியரைத் தேர்வு செய்த மாணவர்கள் ” என்ற நூலாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. அந்த மனம் கவர்ந்த நல்லாசிரியர்களின் போற்றத்தக்க பண்புகள் பிரம்மிக்க வைத்தன. ஒரு மாணவன் எழுதிக் கொடுத்தான். “அடிக்கக் கூடாது என்று அரசாங்கம் சட்டம் கொண்டிருக்கிறது. இருந்தாலும் எங்கள் ஆசிரியர் அடிப்பார். ஆனால் அவர் தான் என் மனம் கவர்ந்த நல்லாசிரியர்” என்றான். இப்படி பலவிதமான நற்பண்புகள் நிறைந்த நாம் இதுவரை கேள்விப்படாத நற்குணங்கள் பொருந்திய ஆசிரியர்களை மாணவர்கள் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது.


பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணி செய்த ஆசிரியர். விளையாட்டு ஆசிரியர். பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியர். தனது வகுப்புக்கு வராத தனக்கு பாடமே நடத்தாத, தான் ஒரேயொரு முறைகூட பேசாத ஆசிரியரைக் கூட நல்லாசிரியர் என்று தேர்வு செய்து அதற்கான காரணத்தை மாணவர்கள் கூறி இருந்தார்கள். 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. அப்போது தகுதித் தேர்வு பற்றிய பேச்சு இல்லை. இது போன்ற ஆசிரியர்கள் தகுதித் தேர்வு வைத்தால் எத்தனை பேர் தேர்வார்கள் என்று தெரியவில்லை.


முறைசாரா கல்வி கற்றுத் தருவது


பேராசிரியர் ச. மாடசாமி அன்று முதல் இன்று வரை ஒரு விசயத்தை மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார். அது , “முனைவர் பட்டம் பெற்ற பல பேராசிரியர்களின் அறிவொளி வகுப்புகள் காற்று வாங்கியது. எட்டாம் வகுப்பு படித்து வீட்டிலிருந்த பெண் பிள்ளைகளின் மாலைநேர வகுப்புகள் நிரம்பி வழிந்தது” இது எதைக் காட்டுகிறது? எல்லாப் பள்ளிகளிலும் விரட்டியடிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை. வேறு வழியின்றி ரயில் பெட்டியில் ஒருவர் மாற்றுப் பள்ளி ஒன்று நடத்தி வருவார். அந்த மாற்றுப் பள்ளியில் படித்த பெண் குழந்தை பிற்காலத்தில் ‌ஜப்பான் தலைநகரான டோக்கியோ வானொலி நிலையம் மற்றும் தொலைக்காட்சிக்கு இயக்குனராக வரும் அளவுக்கு சிகரத்தை எட்டுவார். அப்படி அவர் சிகரம் தொட்ட பிறகு அந்தப் பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர் பற்றி எழுதினார். அதுவே உலகப் பிரசித்தி பெற்ற ‘டோட்டோசான்’ புத்தகம். இந்தப் புத்தகம் உலகிற்கு சொல்லும் சேதி என்ன? தகுதித் தேர்வு எழுதாமல் தன்னிகரற்ற ஆசிரியர்களாக ஜொலிக்க முடியாது என்றா?


படங்கள் நடத்தும் பாடம்


ஆசிரியருக்கான தகுதி என்ன என்பதை சீனப் படம் அற்புதமாக உணர்த்தும். ‘Not one less’ என்பது அந்தப் படம். சக குழந்தைகளில் ஒருவரை “நீ தான் ஆசிரியர். இவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி விட்டு விடுவார்கள். அது பார்த்துக் கொண்டு இருந்த குழந்தைகளில் ஒன்று காணாமல் போய்விடும். அதைத் தேடி அக்குழந்தை அலைவதே கதை. அந்த அலைச்சலே ஓர் ஆசிரியருக்கான தகுதி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘தாரே ஜமீன் பர்’ போன்ற படங்களும் இதில் அடக்கம்.



வாசிப்பில் வசமாகும் ஆசிரியர் தகுதிகள்

சேர்த்து வைத்த புண்ணியம் முழுவதையும் தானம் செய்யும் கர்ணனுக்கு நிகரான பாத்திரம், ரஷ்ய நாவலான “முதல் ஆசிரியர்” நாயகன் துய்சேன் என்ற பாத்திரப் படைப்பு. அந்தப் புத்தகத்தை ஓர் வாசிப்பு முகாமில் இளம் ஆசிரியர்கள் கையில் கொடுத்தோம்.


படித்து முடித்து விவாதங்கள் முடிந்த பிறகு ஒரு இளம் ஆசிரியர் எழுந்து எல்லோரும் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


“இந்த நாவலில் வரும் துய்சேன் போன்ற ஆசிரியராக நான் வாழ்வேன்” என்று சபதம் ஏற்கலாம் என்றார்‌. மற்றொரு ஆசிரியர்களுக்கான முகாமில் ஒரு தமிழாசிரியர். பார்வை மாற்றுத் திறனாளி அவர். முகாம் முடிந்த பிறகு சொன்னார். “அடியாத மாடு படியாது என்ற பழமொழி மீது ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். நன்கு அடித்தே படிக்க வைப்பேன். இந்த முகாமிற்கு வருவதற்கு முந்தைய நாள் கூட, ஒரு மாணவியை நன்கு அடித்து விட்டேன். இந்த முகாம் என்னைத் திருத்தி விட்டது. மனம் மாறிவிட்டேன். ஊருக்கு சென்று பள்ளியில் இறைவணக்க வேளையில் எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்பேன்” என்றார்.


முப்பது ஆண்டுகள் பணி முடித்து இருந்தாலும் ஒரே பாடத்தை தொடர்ந்து நடத்தி வந்தாலும் ஏன் காலையில் எழுந்து மூன்று மணி நேரம் படிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வி. எஸ். காண்டேகரின் “கிரௌஞ்ச வதம்” இப்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், இனிமேல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு இது போன்ற பயிற்சிகளும் வாசிப்பு மனமாற்றமுமே தேவை. தகுதித் தேர்வுகள் அல்ல.


தகுதித் தேர்வும் கற்பித்தலும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நாட்டில் முதல் மதிப்பெண் எடுப்பவர் கூட மாணவர் விரும்பும் நல்லாசிரியராக மலர்வாரா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் என்ற மிதப்பில் அல்லது அதே போதும் என்ற நினைப்பில் சமூகப் பொறுப்பு இன்றி நல்லாசிரியராகத் திகழ வேண்டும் என்ற அக்கறை இன்றி இருக்கும் ஆசிரியர்களை கண்ணுற்று இருக்கிறேன். எந்த விருதும் வாங்காமல். யார் கண்ணிலும் படாமல் அமைதியாக மிக மிக அடக்கமாக யார் கண்ணிலும் படாமல் தனது முழுத் திறனையும் பயன்படுத்தி சொல்லிக் கொடுத்து வரும் ஆசிரியர்களை அறிவேன். குழந்தைகளுக்கு புரியவில்லை என்று கூறி அழுத ஆசிரியர்களை அறிவேன்.‌ சம்பளத்தில் ஒரு பகுதியை சளைக்காமல் குழந்தைகளுக்கு செலவு செய்யும் ஆசிரியர்கள். சேமநல நிதியை எடுத்து மாணவர்களுக்கு மனம் கோணாமல் செலவு செய்து வரும் ஆசிரியர்கள் … இப்படி எத்தனையோ விதமான தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத, இனித் தகுதித் தேர்வு வைத்தால் தகுதி பெறுவார்களா என்ற நிலையில் இருப்பவர்கள்.


ஆசிரியர் தகுதித் தேர்வு: ஏன் எழுந்தது?

ஏதேதோ சொல்லி தகுதித் தேர்வு வேண்டாம் என்று தான் சொல்ல வருகிறார். தகுதி இல்லாமல் ஆசிரியராக நியமித்து என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்தக் கேள்வி அரைகுறை கேள்வி. ஆழம் இல்லாத கேள்வி. புரிந்து கொள்ளாத கேள்வி. ஆசிரியர் பயிற்சி தனியார்மயம் ஆகாத வரை. ஆசிரியர் பயிற்சியில் தனியார் நுழையாத வரை இந்த சிக்கல் எழவில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு இரண்டையும் கூறு கட்டி விற்றார்கள். இப்போதும் விற்று வருகின்றனர்.


ஒரேயொரு நாள் கூட கல்வியியல் கல்லூரிக்கு செல்லாத, டெஸ்ட் அசைன்மென்ட் எதுவும் எழுதாமல் கல்வியியல் பட்டம் முடித்து விட்டு ஏராளமானவர்கள் வெளியே வருகிறார்கள். ஆசிரியர் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு இதில் என்ன பாட திட்டம்? என்ன பயிற்றுவிக்கிறார்கள்? என்ன பயிற்சி என்பதே முக்கியம். தகுதித் தேர்வு/ போட்டித் தேர்வு என்ற ஜோடணை எல்லாம், எண்ணற்ற உபரி ஆசிரியர்கள் இருப்பதால் தான். ஆசிரியர்களின் தேவை அதிகம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி எடுத்தவர்கள் இல்லையென்றால் தகுதித் தேர்வு இருக்குமா? இது இதர வேலைகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே பணிக்கு வந்து, எண்ணற்ற வருடங்கள் கற்பித்து, ஏராளமான அனுபவம் உள்ள ஆசிரியர்களை, “உங்கள் தகுதியை நிரூபியுங்கள்” என்று சந்தேகிப்பது ராமன் சீதையை சந்தேகித்த கதையே.


ஆசிரியர் தேர்வில் செய்ய வேண்டியது என்ன?

தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்கள் பட்டப் படிப்புகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு பாடத்திட்டம் பயிற்சிகள் தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கு பரந்து பட்ட வாசிப்பு உயிர் மூச்சாக மாற வேண்டும், கற்றல் கற்பித்தலில்

புதிய புதிய பயிற்சி முறைகளை உள்வாங்கும் திறன், படைப்பூக்கம் வேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வு என்று ஒன்று தேவையே இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, ஐந்து ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை அவர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வேலை கிடைக்கவில்லையென்றால் அதே முயற்சி தொடர வேண்டும்.


இந்த வன்கொடுமையை என்ன சொல்வது?


தரமான ஆசிரியர் பயிற்சி மட்டுமே போதும். ஆசிரியர்கள் தேவையின் போது “ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின்” மூலம் ஆசிரியர் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்.


கட்டுரையாளர்:

பேராசிரியர் நா.மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% GST  குறையும் கட்டுமான பொருட்களின் விலை? சிமெண்ட்டுக்கு 28% இருந்த ஜி.எஸ்....