கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு




TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)

மாநில அமைப்பு

நாள் : 27.09.2025

*********************

 சென்னையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம்

முக்கிய முடிவுகள் அறிவிப்பு


* மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு துறைகளின் முதன்மைச் செயலாளர்களுடன் டிட்டோஜாக் சந்திப்பு.


* ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல்


* சென்னையில் மூத்த வழக்கறிஞருடன் சந்திப்பு


* டிட்டோஜாக் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது  மறுசீராய்வு மனு தாக்கல்

*********************

 * தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 25.09.2025 அன்று சென்னையில்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் திரு இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு


* தீர்மானம் எண்:1

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசம் முழுவதும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசே மறுசீராய்வு மனு தாக்கல் செய்திடக் கோரியும், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் பிரிவு 23இல் திருத்தம் செய்து பணியில் இருக்கும் ஆசிரியர்களைப் பாதுகாத்திடக் கோரியும் வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக 08.10.2025 புதன்கிழமை மாலை டிட்டோஜாக்  பேரமைப்பின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 2

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009இன் பிரிவு 23இல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு அழுத்தம் அளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் டிட்டோஜாக் மாவட்டப் பொறுப்பாளர்கள்  ஒரு வாரத்திற்குள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது


* தீர்மானம் எண்: 3

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதெனவும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதெனவும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 4

 * டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான செலவினங்களை டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்வதெனவும், டிட்டோஜாக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மறுசீராய்வு மனுவில் ஒவ்வொரு இணைப்புச் சங்கத்தின் சார்பிலும் 100  ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதெனவும் ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


* மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு டாக்டர். சந்தரமோகன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் விரிவாக எடுத்துக் கூறியதோடு, இன்று (25.09.2025)  அல்லது நாளைக்குள் (26.09.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து மறுசீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்கள். மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் கருத்துகள்  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அக்கறையை உணர்த்துவதாகவும், மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.


 * இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில்  நிதித்துறைச் செயலாளர் மதிப்புமிகு. உதயச்சந்திரன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் தொடர்பான  தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு தணிக்கைத் தடைகள் சார்ந்தும் முறையிட்டனர்.


* அதனைத் தொடர்ந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைந்து ஆணைகளை வழங்கிடக் கேட்டுக் கொண்டனர்.


* அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு. தங்கம் தென்னரசு அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்த மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்டவை மீது தீர்வுகாண வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.


* அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. சங்கரன் அவர்களை மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.

*********************

 இப்படிக்கு

மாநில உயர்மட்டக் குழு

டிட்டோஜாக்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...