ஸ்ரீ ஆண்டாள் வரலாறு:
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரைப் பற்றிப் பார்க்கலாம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நந்தவனம் அமைத்து, வடபத்ரசாயி எனப்படும் வடபெருங் கோயிலுடையானுக்குப் பூ மாலைகள் சமர்ப்பித்துக் கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார் .
குழந்தைப் பேறு இல்லாத அவருக்கு, அவரது நந்தவனத்திலே, ஒரு துளசிச் செடியின் கீழ், ஒரு பெண் குழந்தை கிடைத்தது.
அன்று திருவாடிப்பூரம். அக்குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு, சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.
கோதை என்றால் தமிழில் மாலை என்று பொருள்.
வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
கோதை சிறு வயதிலேயே கண்ணன்பால் பிரேமை கொண்டு காதல் வசப்பட்டாள்.
தினந்தோறும் பெருமாளுக்குப் பெரியாழ்வார் தொடுக்கும் மாலையைத் தன் கழுத்தில் சூடி அழகு பார்த்து, இப்படிச் சூட்டினால் பெருமாளுக்கு அழகாக இருக்குமா என்று பார்த்து விட்டு, அந்த மாலையைக் கழற்றி வைத்து விடுவாள்.
தினந்தோறும் இவ்வாறு நடந்து வந்தது.
ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்து விட்டார்.
“இதென்ன அபத்தம்” எனக் கோதையைக் கடிந்து கொண்டு, அன்றைக்குச் கோயிலுக்குப் போகாமலும், எம்பெருமானுக்கு மாலை சூட்டாமலும், தூங்கி விட்டார்.
அவரது கனவில் பெருமாள் தோன்றி, ‘உன் மகள் சூடிக்களைந்த மாலையே எனக்கு உவப்பானது’ எனக் கூறி மறைந்தார்.
பெரியாழ்வார் வியந்து, தன் மகள், பிராட்டியின் அம்சம் என்று உணர்ந்து போற்றினார்.
கோதை மணப் பருவம் எய்த,
“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று கூறி விட்டாள்.
அத்துடன், திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புவதாகவும் சொல்லி விட்டாள்.
ஶ்ரீமத் பாகவத காலத்தில் விரதம் இருந்து, ஆயர் பெண்கள் கண்ணனை அடைந்ததை எண்ணியும், தமிழர் மரபுப்படி பாவை நோன்பு இருத்தலையும், கருத்தில் கொண்டு திருப்பாவைப் பாடல்களாலேயே பாவை நோன்பு நோற்றார் ஆண்டாள்.
நாச்சியார் திருமொழிப் பாடல்களால் பெருமானுக்குத் தூது விட்டார்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி நாச்சியார் பாடிக் கொடுத்த நாச்சியாராகவும் ஆனார்.
ஆழ்வாரின் கனவில் மீண்டும் தோன்றிய திருவரங்கத்துப் பெருமான், கோதையைத் தம்மிடம் அழைத்து வரக் கூறினான்.
அதேபோல, பாண்டிய மன்னன் வல்லவதேவனும், தன்னிடமும் இறைவன் கனவில் கூறியபடி, ஆண்டாளின் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய, பெரியாழ்வார் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றார்.
எல்லோரும் பிரமிப்புடன் பார்த்திருக்க, அரங்கனின் கருவறையை அடைந்து, நேராக உள்ளே சென்று பெருமானின் திருவடி பற்றி அமர்ந்ததும், ஆண்டாள் மறைந்து பகவானுடன் கலந்தாள்.
இங்கே,
“ஒரு மகள் தன்னையுடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்” என்னும் பெரியாழ்வார் திருமொழி (3-8-4) பாசுரம் நினைவு கூறத் தக்கது.
இது தான் ஆண்டாளின் திருக்கல்யாணம்.
ஆன்மாவான உயிர், இறைவனின் திருவடிகளில் இணைவதைக் குறிப்பதே இது.
வைணவத்தில் ஆண்டாளுக்கும், திருப்பாணாழ்வாருக்கும் மட்டுமே கிடைத்த பேறு இது.
பின்னர், பெரியாழ்வார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமக்கள் வேண்ட, “வாரணம் ஆயிரம்” என்ற அன்னையின் கனவுத் திருமணத்தை நனவாக்கி, முறைப்படி திருமணம் புரிந்து கொண்டான் அரங்கன் என்பது வழி வழியான கதை.
இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாருடன் ஶ்ரீரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களைக் காத்தருளுகிறான்.
ஆண்டாளின் பாடல்களின் அகச்சான்றுகளை வைத்து டாக்டர் மு. இராகவன், இவரது காலத்தை ஆராய்ந்திருக்கிறார்.
திருப்பாவை 13-ம் பாசுரத்தில் வரும் ‘வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று’ எனும் சொற்றொடரில் இருக்கும் வானவியல் சம்பவத்தை நிபுணர்களுடன் ஆராய்ந்து, அது கி.பி. 885, நவம்பர் மாதம் 25ஆம் தேதி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் இராகவன், தமது ‘ஆழ்வார்கள் கால நிலை’ எனும் புத்தகத்தில்.
எனவே ஆண்டாளின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஆண்டாளின் பாடல்களின் அமைப்பு, சொல்லாட்சி, பாவை நோன்பு, காதல் முதலியவற்றை ஆராய்ந்தால், இரண்டு விஷயங்கள் தெளிவாகும்.
1. ஒரு பெண்ணால்தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்.
ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவரது பெண்மை மிளிரும் பாடல்களே அறிவிக்கின்றன.
“அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்”.
– நாச்சியார் திருமொழி (1-4).
என்ற வரிகளில் மிளிரும் பெண்மையும் காதலும் கவனிக்கத் தக்கது.
2. ஆண்டாள் தமிழில் மிகுந்த புலமை பெற்றிருந்திருக்கிறார்; அவர் தம் தந்தை பெரியாழ்வாரிடம் கற்றிருக்கவேண்டும்.
திருப்பாவை எளிமையானது.
ஆனால் அதன் யாப்பு கடினமானது.
’இயற்றரவினை கொச்சக் கலிப்பா’ என அதனை வகைப் படுத்துகிறார்கள்.
கடுமையான பா அமைப்பு அது.
கடுமையானதொரு யாப்பில், மிக எளிய பாடல்கள் அமைக்கும் திறமை ஒரு சிறிய பெண்ணிடம் இருந்தது என்பது ஒரு மிகப் பெரிய விஷயம்.
இன்றைக்கு நம்மிடம் உள்ள நம் சிறந்த கவிஞர்கள் கூட, திருப்பாவையின் யாப்பமைதியில் பாட்டு எழுதினால், இத்தனை எளிமையாக, அத்துனை அழகாக, கருத்தாழமிக்கதாக அமைப்பது கடினம்.
அவரது நாச்சியார் திருமொழியில், அறுசீர், எழுசீர், ஆசிரிய விருத்தங்கள், கலி விருத்தங்கள், கலிநிலை விருத்தங்கள், கலிநலத்துறை பாடல்கள் என்று எடுத்து, வரிக்கு வரி அதில் உள்ள எழுத்துக்களை, ஒற்றெழுத்து இல்லாமல் எண்ணிப் பார்த்தால், ஒரே எண்ணிக்கையில் வருமாம். நீங்கள் யாராவது இதனை சோதனை செய்துதான் பாருங்களேன்!
boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.