2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் குறித்த கட்டுரைப் போட்டி - ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் (2 lakh prize money - Essay Competition on Bharathiyar for School and College Students - Can apply by January 8)...
பாரதியார் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை, தமிழ்நாடு ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை அறிக்கை:
பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்கள் 'இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு' என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.
தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்; ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021eng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 'பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்' என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharaticol2021tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் mahakavibharaticol2021engl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள், ஜனவரி 8 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதில், மாணவர்கள் தங்கள் பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், அலைபேசி எண் ஆகிய விவரங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
முதல் பரிசு 2 லட்சம் கட்டுரைகளைத் தேர்வு செய்ய, செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேசய்யன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளிகள் அளவிலான போட்டியில், முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்; கல்லுாரிகள் அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ், ஜனவரி 26ஆம் தேதி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
>>> தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு எண்: 113, நாள்: 12-12-2021...