கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 தமிழகத்திலேயே முதல் முறை - காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்...
தமிழகத்திலேயே முதல் முறையாகக் காலையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாலையில் அதன் முடிவுகளை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளில் சேர விரும்பும் முதுநிலைப் பட்டதாரிகள், நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பாரதியார் பல்கலைக்கழகம் இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்திய இத்தேர்வை, நேற்று முன்தினம் (அக். 27) முதல் முறையாக இணையவழியில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் முடிவையும் அன்றே வெளியிட்டு சாதனை படித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஃபில்., பிஎச்.டி. நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ம.இளஞ்செழியன் கூறியதாவது:
''2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில்., பிஎச்.டி. நுழைவுத்தேர்வு http://bucetonlineexam2020.b-u.ac.in என்ற இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 2,778 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இணையதளத்தில் முதல் முறையாக நுழைவுத்தேர்வு நடத்துவதால், தேர்வு நடைமுறைகள் குறித்த அனைத்து விவரங்களுக்கும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அக். 23-ம் தேதி இணைய வழியில் மாதிரி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
அப்போது கணினி வசதி, இணையதள வசதி இல்லாமை, மலைப்பகுதிகளில் நெட்வொர்க் பிரச்சினை ஆகியவை குறித்து மாணவர்கள் முறையிட்டனர். இது உடனடியாகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள இணையதள மையம், மற்றும் ஜவுளித்துறை அறைகளில் 200 கணினிகள் பொருத்தப்பட்டன.
மாணவர்களை நேரடியாக வரவழைத்துப் பல்கலைக்கழகத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததில், 94 பேர் கலந்து கொண்டனர். மீதமுள்ள 2,563 பேர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, இணையதளம் வழியாகத் தேர்வெழுதினர். 215 பேர் மட்டுமே தேர்வெழுதவில்லை.
ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் வகையில், கணினியில் புரோக்ராமிங் செய்து வைத்திருந்தோம். வினாக்களுக்கு ஏற்ற விடைக்குறிப்புகளைத் தனியாகப் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம்.
காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 35 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் இ-வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும், துறைவாரியாக வினாக்களும், விடைகளும் கணினி மூலமாகப் பொருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் துறைவாரியாகப் பொருத்தப்பட்டவை சரிதானா? என்று ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் நுழைவுத்தேர்வு நடத்தி முடிவுகளை அன்றே வெளியிடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை''.
இவ்வாறு ம.இளஞ்செழியன் கூறினார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Prolonged sitting puts heart at risk - new study warns
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns