''அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, உள்ளாட்சிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில், நடந்தது.அதில், அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில், ஜல் ஜீவன் திட்டத்தில், 1,464 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் வாயிலாக, குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள, 37 ஆயிரம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும், 54 ஆயிரத்து, 439 அங்கன்வாடிகளில், ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, ஜல் சக்தி திட்ட நோக்கத்தின்படி, அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதை, 100 சதவீதம் உறுதி செய்து, மூன்று வாரங்களுக்குள், உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.