கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அட்டகாசமாக தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பாடநூல் கழக வட்டாரம் கூறியதாவது: மொத்தம், 90 பக்கங்கள் கொண்டதாக அட்லஸ் இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயன்படும் வகையில் உயர்ந்த தரத்தில், அதிக தகவல்கள், புள்ளி விவரங்கள், அதிக படங்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.
அட்லஸ் தயாரிப்பதற்கு, டேராடூனில் உள்ள, இந்திய சர்வேயர் ஜெனரலிடம், அனுமதி பெற வேண்டும். கடந்த, 6ம் தேதி, அனுமதி கிடைத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம், "அட்லஸ்" தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில், இந்த நிறுவனங்கள், அச்சடிப்பு பணியை துவங்கும். அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, எந்த யோசனையும் இப்போது இல்லை. கோரிக்கைகள் வந்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

>>>பிளஸ் 2 உடனடித் தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு

பிளஸ் 2 உடனடித்தேர்வு தொடர்பான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித்தேர்வில் பங்கேற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் (http://www.dge.tn.nic.in) இன்று வெளியிடப்படும்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வருக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.

>>>செப்.15 முதல் முப்பருவ கல்வி இரண்டாம் பருவப் புத்தகங்கள் வினியோகம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.
ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.
தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

>>>ஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம்

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்.,8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. 

என்ன பயன்:
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

ஆப்ரிகாவில் குறைவு:
வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நிலை:
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

>>>செப்டம்பர் 08 [September 08]....

  • உலக எழுத்தறிவு தினம்
  • இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியா பிறந்த தினம்(கிமு 20)
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)

>>>பல்வேறு அரசு கல்வி நிறுவன கட்டடங்களை முதல்வர் திறந்தார்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட, 268 பள்ளி கட்டடங்கள், கல்லூரி கட்டடங்கள் மற்றும் வகுப்பறை கட்டடங்கள், முதியோர் இல்லங்களை, முதல்வர், தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டத்தில், 11; ஈரோடு, 7; வேலூர், 24; நீலகிரி, 1; கோவை, 5; காஞ்சிபுரம், 14; கடலூர், 12; திருவண்ணாமலை, 36; புதுக்கோட்டை, 16; விருதுநகர், 22 பள்ளிக் கட்டடங்கள் உட்பட, 268 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடங்கள், அதன் உட்பிரிவுகள். மாவட்டத்திற்கு இரண்டு வீதம், 64 இடங்களில், முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த வளாகங்களை, "வீடியோ கான்பரன்சிங்" மூலம், முதல்வர் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு ஒருங்கிணைந்த வளாகத்திலும், தலா, 25 ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் தங்கி பயன்பெறுவர். கல்லூரிகள், கட்டடங்கள் தேனி மாவட்டம், போடியில் துவக்கப்பட்டுள்ள, புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், ஆசிரியர் நியமனம், விடுதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள் அமைக்க, 93.64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பண்ருட்டி, தஞ்சையில் ராஜாமடம், கன்னியாகுமரியில் கோணம் ஆகிய இடங்களில், அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோவை, அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு, 60.15 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பெரம்பலூர் கீழக்கணவாய், மதுரையில் அம்பலக்காரன்பட்டி, தேனியில் கோட்டூர், திருவாரூரில் கொற்கை, கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு, 29.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், வகுப்பறை கட்டடங்கள் சென்னை, மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி; ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி; கோவை அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி; தஞ்சாவூர், ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி உட்பட, பல கல்லூரிகளில், 12.86 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நூலகங்கள், மாணவியர் விடுதி. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில், 8.12 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என, மொத்தம், 110.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, "வீடியோ கான்பரன்சிங்" மூலம், முதல்வர் திறந்து வைத்தார்.

>>>வேலை வாய்ப்பு, பயிற்சி துறை இணையதளத்தில் குளறுபடி

வேலை வாய்ப்பு, பயிற்சி துறைக்கான இணையதளத்தில், சிவகங்கை மாவட்டத்திற்கான பதிவுகளில், குளறுபடி உள்ளதால், விண்ணப்பதாரர்கள் அதைப் பயன்படுத்த முடியாமல், சிவகங்கைக்கு அலைகின்றனர்.
வேலைவாய்ப்பிற்கான புதிய பதிவு, கூடுதல் தகுதி சேர்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகள், தற்போது, "ஆன்-லைன்" மூலம் செய்யப்படுகின்றன. இதற்காக விண்ணப்பதாரர்கள், அதற்கான இணைய தளமான, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்துகின்றனர். அதில், அவர்களின் பதிவு எண்ணைப் பதிவு செய்கையில், பலருக்கும் குளறுபடியான தகவல்கள் வருகின்றன.
வேறு பெயர்கள், கூடுதல் தகுதி பதிவு செய்யாதது, புதுப்பித்தல் பதிவாகாதது போன்ற பல குளறுபடிகள் உள்ளன. அ.காளாப்பூரைச் சேர்ந்த, எம்.அறிவு என்பவருக்கு, ஆக., 2014ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வேலை வாய்ப்புப் பதிவு அட்டையில் அதற்கான பதிவு உள்ளது. ஆனால், இணைய தளத்தில், அவர் பதிவு எண் தவறானது என, பதில் வருகிறது. திருப்புத்தூரரைச் சேர்ந்த, பி.வெங்கடேசன் என்பவருக்கு, ஜன., 2014ம் தேதி வரை, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கும், பதிவு எண் தவறானது என்றே, பதில் வருகிறது; "ஆன்-லைன்" முறை இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை.
இதுபோன்ற பிரச்னையைச் சந்திக்கும் மக்கள், மீண்டும், சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, அலைய வேண்டியுள்ளது. "இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, புதிய தகவல்களை உடனடியாக இணைய தளத்தில் ஏற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நிர்வாகம் எடுக்க வேண்டும்" என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...