கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு புதிய கட்டணம்

கல்விக் கட்டண நிர்ணய காலம் முடிவடைந்த, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மீண்டும் மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக, கோவிந்தராஜன் இருந்தபோது, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டார்.
அதன்படி, 2009ல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டதால், 2012-15க்கான, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து, குழுத் தலைவர் சிங்காரவேலு உத்தரவிட்டு உள்ளார்.
மாவட்ட வாரியாக, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, புதிய கட்டண விவரம், தமிழக அரசு இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், கணிசமான அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

>>>புத்தகங்கள் பெறுவதில் ஆர்வம் காட்டாத பள்ளிகள்

சமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முதல் முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது.
"இன்டன்ட்"படி, முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்று அல்லது இரண்டு புத்தகத்திலேயே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து பாடங்களும் அச்சிடப்பட்டு இருந்தன. இம்மாதம், 30ம் தேதியுடன் முதல் பருவத்துக்கான காலம் முடிவடைவதால், அதற்கான தேர்வுகளும் நடந்து வருகின்றன.
தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 1ம் தேதியிலிருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடம் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் புத்தகங்கள் எண்ணிக்கை குறித்த, "இன்டன்ட்" பெறப்பட்டு, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலானவை, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவை குறித்து, எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளன. இதனால், அப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அலட்சியம்: இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: மண்டல பாட நூல் கழக குடோன் மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், தன் தேவைப்பட்டியலை வழங்கும் போது, அதற்கேற்ப முன் கூட்டியே தயார் செய்து, சரியான நேரத்துக்குள் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும்.
பெரும்பாலான மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் குறித்து எவ்வித தகவலும் தராமல், அலட்சியப்போக்குடன் உள்ளனர். அக்டோபர் மாதத்தில், ஒரே சமயத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வரும்போது, ஒரு சில பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அவற்றை தருவித்து தர, ஒரு சில நாள் தாமதமாகலாம்.
இதனால், அப்பள்ளிகளுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்கூட்டியே புத்தகங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம்.

>>>நவம்பர் 4ம் தேதி குரூப்-2 மறுதேர்வு

கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வு, நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வை, 6.50 லட்சம் பேர் எழுதினர். இதன் கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், தேர்வு நடந்த அன்றே வெளியானது. இதையடுத்து, குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ரத்தான குரூப்-2 தேர்வு, நவம்பர் 4ம் தேதி நடக்கவுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: ஏற்கனவே, குருப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே, மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்து, ஆகஸ்டில் நடந்த தேர்வில் பங்கேற்காதவர்களும், நவ., தேர்வில் பங்கேற்கலாம்.
இதற்கென, தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் முடிவு வெளியிடப்படும்.

>>>செப்டம்பர் 14 [September 14]....

  • அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
  • தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
  • ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
  • எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
  • எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)

>>>டயஸ் படிவம் பூர்த்தி செய்வதற்கு பயிற்சி நாளை காலை "ஞான்தர்ஷன்' மூலம் ஏற்பாடு

"டயஸ்' படிவம் பூர்த்தி செய்வது குறித்து, நாளை காலை தூர்தர்ஷன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் உள்ள வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் நியமித்தல், வகுப்பறை கட்டுதல், புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் பயன்கள் எந்த அளவுக்கு பள்ளிகளை சென்று சேர்ந்துள்ளது என்பதை கண்டறியும், அதுகுறித்த புள்ளி விபரங்களை தொகுக்கவும், இந்தியா முழுவதும், "டயஸ்' எனும் படிவம் ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டு, விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர், காம்பவுண்டு சுவர் வசதி உள்ளிட்ட பள்ளியை குறித்த அனைத்து விபரங்களும் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படிவம் வழங்கப்பட்டாலும், பல பள்ளிகளில் பிழைகளுடன் இப்படிவம் பூர்த்தி செய்வது தொடர்கிறது.
இதை தவிர்க்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகவல்களை பெறும் வகையில், மத்திய அரசின் மனிதவளத்துறை மூலம், தூர்தர்ஷன் பிரிவான, "ஞான்தர்ஷன்' "டிவி'யில், செப்டம்பர், 14ம் தேதி, காலை, 10 மணி முதல், பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், 20 பக்கம் வரை உள்ள டயஸ் படிவத்தை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரவள மையத்திலும், இப்பயிற்சியை எல்.சி.டி., பிராஜக்டர் மூலம் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

>>>மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வு

"நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு மே 5ம் தேதி நடைபெறும்' என, மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) அறிவித்துள்ளது. நாட்டில் மொத்தம், 355 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த, மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. நாட்டில் முதல் முறையாக மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.,) என அழைக்கப்படும் இந்த தேர்வில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு தேதியை அறிவித்த சி.பி.எஸ்.இ., "நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தும் என ஏற்கனவே, மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. இத்தேர்வு, ஆங்கிலம், இந்தி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தும் மாநிலங்களின் மொழிகளில் நடத்தப்படும். இதற்கான பாடத் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தது. அதேசமயம், மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் முடிவு செய்துள்ள இட ஒதுக்கீடு விவகாரங்களில் தலையிடப்பட மாட்டாது என, மருத்துவக் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

>>>சூறாவளி "ரோபோ'

நம்ம ஊரில் அவ்வப்போது புயல் தாக்குவதைப் போல், அமெரிக்காவையும் கரீபியன் நாடுகளையும் சூறாவளி தாக்குவது அமாவாசை, பவுர்ணமி வந்து போவதைப் போல. சூறாவளி என்றால் சாதாரண காற்று மட்டும் அல்ல, கார், வீடுகளை எல்லாம் அடித்து துவைத்து, தூக்கி எறிந்து, ஊரையே புரட்டிப் போட்டுவிடும்.

இந்த தலைவலியைப் போக்க, சூறாவளியை முன் கூட்டியே அறியும் புதிய "ரோபோ'வை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். இந்த "ரோபோ', கடல் மட்டத்தில் மிதந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் கடலில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாறுபாடுகள், சூறாவளி, புயல் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இயற்கையான ஆபத்துகள் தாக்காத வண்ணம் "ரோபோ' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது 85-120 மைல் வேகத்தில் வீசும் சூறாவளி காற்றைக் கூட, இது தாங்க வல்லது. இதன் மூலம் புயல் மையம் கொண்டுள்ள இடம், தாக்கத்தின் அளவு, செல்லும் திசை ஆகியவற்றை துல்லியமாக அறியலாம். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதற்கு முன் இருந்த கடல் "ரோபோ'க்களை விட இது சிறப்பாக இயங்குகிறது. இந்த "ரோபோ'வை சோதனை செய்தது போலவே, ஆளில்லாத சிறிய படகு ஒன்றையும் சோதனை செய்தனர். இந்த படகு 5 அடி 5 அங்குலம் நீளமுடையது. கடல் வளங்கள், மீன்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்யும். படகில் "சென்சார்'கள் இருப்பதால், தெளிவான படங்களை எடுக்கவும் பயன்படுகின்றன. கடலை ஆய்வு செய்ய எண்ணற்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், புதிய சாதனங்கள் முற்றிலும் புதிதானவை. சூரிய ஒளியிலிருந்து, சக்தியை பெற்றுக் கொள்ளும் "சென்சார்'கள் இதில் உள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபடும் கடற்படை வீரர்களுக்கும் இது பெரிதும் உதவுகிறது. இதை யாரும் எளிதில் அழித்துவிட முடியாது. வருங்காலத்தில் இந்த "ரோபோ', கடற்படைக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...