கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாதமே இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பயிற்சிக்கு Assessment of Speaking and Listening Skills எனப் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிமிடங்கள் இதற்கான தேர்வு நடத்தப்படும் என்றும், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பேச்சு மற்றும் கவனிப்புத் திறமையை கண்டறிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு புரியும் வகையிலான இடம், பொருள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அடுத்ததாக, மாணவ, மாணவிகளே தேர்வு செய்யும் வகையில் தலைப்புகள் வழங்கப்பட்டு, அதன் மீது அவர்கள் பேச வேண்டும். கடைசியாக, படக் காட்சி அல்லது தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் மீது மாணவர்கள் குழுவாக 3 நிமிடத்திற்கு விவாதிக்க வேண்டும்.
ஒருவேளை மாணவர்கள் பேச முடியாமல் திணறினால், அந்த மாணவருக்கு கூடுதல் அவகாசம் வழங்கி ஆசிரியர் தயார்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் கவனிப்புப் பயிற்சி, வரும் காலங்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

>>>மேலாண்மைப் படிப்புக்கான CAT தேர்வுக்கு மீண்டும் மவுசு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.எம்.எம்) உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான CAT தேர்வை எழுத இந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த 2 கல்வியாண்டுகளை விட அதிகம் என்பதால், மாணவ, மாணவிகள் மத்தியில் மேலாண்மைப் படிப்புக்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான CAT தேர்வை கோழிக்கோடு ஐ.ஐ.எம். நடத்துகிறது.
கடந்த 2010ம் ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம் பேரும், 2011ம் ஆண்டு 2 லட்சத்து 5 ஆயிரம் பேரும் CAT தேர்வை எழுதினர். இந்த எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டு 2 லட்சத்து 42 ஆயிரமாகவும், 2008ம் ஆண்டு 2 லட்சத்து 76 ஆயிரமாகவும் இருந்தது.
கடந்த 2008க்குப் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக CAT தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது உலகளவில் பொருளாதாரம் முன்னேற்றமடையத் தொடங்கியுள்ள நிலையில், CAT தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகள், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் போது, அவர்களுக்கு பல சர்வதேச நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் CAT தேர்வு நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 13 ஐ.ஐ.எம்.-கள் மற்றும் 150க்கும் அதிகமான தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில், மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளின் தகுதியை இந்தத் தேர்வுதான் நிர்ணயிக்கப் போகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டும், 2 பகுதிகளாக CAT தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர் குமார், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறினார். இதில் 2 பகுதிகளாக நடைபெறும் தேர்வுக்கு, தலா 70 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் தலா 30 கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>கடல்சார் படிப்புகளில் சேர ஆர்வமா?

கொல்கத்தாவிலுள்ள துறைமுக மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம், துறைமுகம் மற்றும் கடல்சார் துறையில், பயிற்சி, ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி போன்றவைகளை மேற்கொள்கிறது.
துறைமுக இயக்கம் மற்றும் மேலாண்மை, Post - sea modular மற்றும் Competency படிப்புகளை நடத்துவதுடன், கடல்சார் துறையில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.
விசாகப்பட்டினத்திலுள்ள தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், கப்பல் மற்றும் கப்பல் கட்டுதல் துறையில், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.
மேலும், கப்பல், கப்பல் கட்டுதல் மற்றும் இதர கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சி திட்டங்களை நடத்துவதுடன், ஆராய்ச்சி மாணவர்களுக்கு டெக்னிக்கல் டாகுமென்டேஷன் வசதியையும் வழங்குகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கொச்சின்
இந்தக் கல்வி நிறுவனம், மெரைன் பொறியியல் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இறுதியாண்டில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் அல்லது நேவல் ஆர்கிடெக்சர் படிப்பில் பி.டெக் முடித்தவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்புகளில், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
முழுமையான விபரங்களுக்கு, மேற்கூறிய கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு செல்லவும்.
பிற கடல்சார் கல்வி நிறுவனங்கள்
* MERI - Mumbai
* International maritime institute - Greater Noida
* Anglo eastern maritime training centre - Mumbai
* Maritime foundation - Chennai
* AMET university - Chennai
* Chidambaram institute of maritime technology - Kalpakkam
* CV Raman college of engineering - Bubaneshwar
* Seascan marine services pvt. ltd - Goa
* Mercantile maritime academy - Kolkatta
* Lal Bahadur shastri college of nautical science - Mumbai
* National institute of port management - Chennai
* Vel&'s college of maritime studies - Chennai
* International maritime institute - Greater Noida, UP
* Tolani maritime institute - Pune
* T.S. Chanakya institute - Mumbai

>>>நெட் தேர்வில் 43,957 பேர் தேர்ச்சி

கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட நெட் தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 43,957 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜுன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வை, மொத்தம் 5,71,627 பேர் எழுதினர். அவர்களில் 43,957 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில், 3625 பேர், JRF(Junior research fellowship) எனப்படும் ஆராய்ச்சி உதவித்தொகை பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
நெட் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்கள், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 65% என்ற அளவிலும், OBC பிரிவு மாணவர்களுக்கு 60% என்ற அளவிலும், SC/ST மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 55% என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Answer keys மற்றும் கேள்வித் தாள்களை, தனது இணையதளத்தில், UGC, பதிவேற்றியிருந்தது மற்றும் அதன்மூலம், தேர்வெழுதியவர்களின் கருத்துக்களையும் கேட்டிருந்தது. தேர்வு முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக, தேவையான சமயங்களில், Answer keys மறுஆய்வு செய்யப்பட்டு அப்டேட் செய்யப்பட்டது.
கடந்த ஜுன் மாதம் முதற்கொண்டு, நெட் தேர்வானது, முழுவதும் Objective type முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

>>>ஆதிதிராவிடர் தேர்வாளர்களுக்கு 25ம் தேதி கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட, ஆதிதிராவிடர் தேர்வாளர்களுக்கு, வரும் 25ம் தேதி, சென்னையில் பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தேர்வு பெற்றவர்களுக்கு, வரும் செப்டம்பர் 25ம் தேதி, காலை, 11 மணிக்கு, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையர் அலுவலகத்தில், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள், உரிய சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

>>>கோர்ட் மேலாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

கோர்ட் மேலாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட், சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக நீதிமன்றங்களில், 33 மேலாளர் பணியிடங்களை நிரப்ப, சென்னை பாரிமுனையில் உள்ள, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 23ம் தேதி, காலை 10 மணி முதல், பகல் ஒரு மணி வரை, போட்டித் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்த, 207 பேரின் முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் (www.hcmadras.tn.nic.in) மற்றும் டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் (www.tnpsc.tn.nic.in) வழியாகவும், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

>>>திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் தேர்வு செய்ய புதிய குழு

தமிழ்நாடு, திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரைப் பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, புதிய தேர்வுக்குழு அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தராக இருந்த கல்யாணியின் பதவிக்காலம் முடிந்ததற்குப் பின், புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, அன்னை தெரசா மகளிர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தவல்லி தலைமையில், மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டது.
இக்குழு, திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை, கவர்னருக்கு பரிந்துரைத்தது. மூவரில் ஒருவராக, பேராசிரியர் குமரகுரு பெயர் இடம் பெற்றிருந்தது. நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைத் துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டார். எஞ்சிய, இருவர் பெயரைப் பரிசீலனை செய்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய, கவர்னர் விரும்பாததால், புதிய தேர்வுக்குழுவை அமைக்க உத்தரவிட்டதாக, உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது.
இதையடுத்து, புதிய தேர்வுக்குழு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கவர்னர் சார்பில் ஒரு உறுப்பினர், தமிழக அரசு சார்பில் ஒரு உறுப்பினர் மற்றும் பல்கலை சிண்டிகேட் சார்பில் ஒரு உறுப்பினர் என, மூன்று பேரைக் கொண்ட தேர்வுக் குழு, இன்னும் ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும்.
அக்குழு, துணைவேந்தர் பதவிக்காக, மூன்று பெயர் அடங்கிய பட்டியலை, ஒரு மாதத்திற்குள், கவர்னருக்கு பரிந்துரை செய்யும். அதன்பின், திறந்தநிலைப் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...