தமிழக மின் பற்றாக்குறைக்கு, காற்றாலை மின்சார உற்பத்தி குறைவு
மட்டுமல்லாமல், தென் மண்டல மின் தொகுப்பில் ஏற்பட்டுள்ள மின் சுமை மற்றும்
அதிர்வெண் கட்டுப்பாடும், மிக முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.
நகர்ப்புறங்களில், சென்னையைத் தவிர மற்ற பகுதிகளில், பகலில் ஐந்து மணி
நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மின் வெட்டு இருப்பதாகக்
கூறப்படுகிறது.காற்றாலை உதவி:தமிழகத்தின் தற்போதைய தேவை, 12 ஆயிரத்து 500
மெகாவாட். ஆனால், 8,000லிருந்து, 9,000 மெகாவாட் வரையில் மட்டுமே உற்பத்தி
செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை உதவியால் மட்டுமே, இதுவும்
சாத்தியமடைந்து வந்தது.ஆனால், தற்போது காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி
அளவு குறைந்ததையடுத்து, அதிக மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதாக,
தொடர்ந்து பலபகுதிகளில் இருந்து புகார் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மின்
வெட்டு பிரச்னைக்கு, மின் தொகுப்பில் தற்போதுள்ள கட்டுப் பாடும், மற்றொரு
காரணமாக மின்வாரியத்தால் கூறப்படுகிறது. இதனால், போதுமான அளவிற்கு
மின்சாரம் பெறுவதில், சிக்கல் நிலவி வருவதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் தென்மண்டல மின்
தொகுப்பின் கீழ் வருகின்றன. தற்போது, இந்த மின் தொகுப்பில் மின்சாரம்
வரவேண்டிய தொடரில் ஏற்படும் மின் சுமை காரணமாக, தமிழகம் உட்பட மற்ற தென்
மாநிலங்களிலும் பற்றாக்குறை நிலவி வருகிறது.
தவிப்பு:கடந்த
மாத நிலவரப்படி, அதிகபட்ச தேவையின் மின்பற்றாக்குறை ஆந்திராவில், 26
சதவீதமாகவும், கர்நாடகாவில், 19.5 சதவீதமாகவும், தமிழகத்தில், 18
சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலை தற்போது அதிகரித்து உள்ளது.மேலும், மண்டல
மின் கட்டமைப்பை, நாட்டின் மற்ற மின் கட்டமைப்புகளுடன் இணைக்க, மின்
தொடர்கள் அமைக்கும் பணிகள் முடியாமல் இருப்பதும்
இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.இதனால், குஜராத் மற்றும் வடமாநிலங்களில்
இருந்து, தினமும் 855 மில்லியன் யூனிட்டிற்கு பதில், 232 மில்லியன்
யூனிட்கள் மட்டுமே மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
கொள்முதல்:
மேலும்,
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின் படி, கொள்முதல் அளவு
மற்றும் வாங்கப்படும் மின்சாரத்தின், விலைக்கு வரம்பு விதிக்கப்படவில்லை.
ஆகவே, மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாமல் தமிழக மின்வாரியம் தவித்து
வருகிறது.இதற்கு அடுத்தபடியாக, மின் கட்டமைப்பின் அதிர்வெண் பிரச்னை ஒரு
காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம்,இந்திய மின்
கட்டமைப்பின் அதிர்வெண்ணை, 49.5 ஹெர்ட்சில் இருந்து, 49.7 ஹெர்ட்ஸ் என்ற
அளவில் இயக்கவும்,திட்டமிடா மின் பரிமாற்றத்திற்கான நிர்ணயக் கட்டணத்தை
அதிகரித்தும், புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.இது மாநிலங்கள்
வரன்முறையின்றி, மின் தொகுப்பில் இருந்துஅதிக மின்சாரத்தை எடுத்து,அதனால்
எல்லா இடங்களிலும் இருள் சூழும் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் .நிர்ணயக்
கட்டணம் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுத்தும் என்பதால், இதை தற்காலிகமாக
நிறுத்தி வைக்குமாறு, முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை கேட்டுக் கொண்டார்.
ஆனால், இதில் நடவடிக்கை இல்லாததால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகம், ஐகோர்ட்டை நாடியது.
ஆனால், மின் உற்பத்திமற்றும்
பகிர்மான முறையில், மத்திய ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதலில், மின்வாரியம்
செயல்பட ஐகோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையில் வடக்குமண்டலத்தில் ஏற்பட்ட
பிரச்னையைக் காரணம் காட்டி, அதிர்வெண் விவகாரத்தில் கடந்த மாதம், 16ம் தேதி
முதல், இயக்க அதிர்வெண், 49.5 ஹெர்ட்ஸ் அளவிற்கு கீழ் செல்லும் போது, மின்
தொடரை தானாகத்துண்டிக்கவும், மீறும் மாநிலங்களின் மீது, கடும் தண்டனை
விதிக்கவும்
அதற்கேற்ற வாறு நடைமுறை கொண்டு வரப்பட்டது.வட மாநிலங்கள் இருளில் மூழ்கிய
சம்பவம், மற்ற மாநிலங்களில் இந்த நிகழ்வு வராதபடி மேற்கொள்ளப்பட்ட
செயலாகும்.அதே சமயம், தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் வரம்பை மீறி
"கிரிட்' எனப்படும், தொகுப்பில் இருந்து அதிக மின்சாரத்தை எடுத்து
குழப்பம் ஏற்படுத்தியது இல்லை.தற்போது
மத்திய மின்தொகுப்பு மின்சாரத்தைக் கையாளுவதில், மின்வாரியம் நம் தேவைக்கு
ஏற்ப தொகுப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும் நடைமுறையை ஏற்படுத்த
வேண்டும்.தவிரவும், அதே சமயம் உச்ச பட்ச பயன்பாட்டு நேரத்தில், நமது
தேவையும், சப்ளையும்சீரமைக்கப்படுவதன் மூலமே திடீர் திடீரென மின்
வெட்டுஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மின் தடை ஏன்? வாரியம் விளக்கம் :
தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செய்திக்குறிப்பு:தமிழகத்தில்
காற்றாலை மின்சாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகம் உள்ளது. மத்திய மின்
தொகுப்பில் இருந்து பெறப்படும் தமிழகத்தின் பங்கான, 2,950 மெகாவாட், 1,850
மெகாவாட்டாக குறைந்துள்ளது. நீர் மின் தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருப்ப
தால், மின்சாரம் அங்கிருந்தும் கிடைக்கவில்லை. கடந்த, 17ம் தேதி முதல்,
மத்திய ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டமைப்பு இயக்க விதிகளை கடுமையாக
அமல்படுத்தியதால், மின் கட்டமைப்பில் இருந்து, மின்சாரம் பெறுவது
முற்றிலும் தடைபட்டு உள்ளது. எனவே, மின் கட்டமைப்பு பாதுகாப்பு கருதி,
காற்றாலை மின்சாரம் குறையும் போது, கூடுதல் மின்தடை
அமல்படுத்தப்படுகிறது.வெளிமாநிலங்களில் இருந்து, 1,200 மெகாவாட் மின்சாரம்
கொள்முதல் செய்ய உத்தரவு அளித்திருந்தும், மத்திய மின் கட்டமைப்புக் கழகம்
மற்ற மாநிலங்களில் இருந்து போதிய அளவு மின்பாதை அமைக்காததால், 1,000
மெகாவாட் அளவிற்கு கூட, தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை.இதனால்,
சென்னை தவிர மற்ற இடங்களில், எட்டு மணி முதல் 10 மணி நேரம் வரையில் மின்தடை
செய்ய நேரிட்டது.