கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை

மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் கல்விக் கடன் வழங்க, நிதி அமைச்சரகம் வலியுறுத்தி வருகிறது. அனைத்துப் படிப்புகளுக்கும், கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
கல்விக்கடன் கேட்கும் மாணவர்கள், விண்ணப்பம், உரிய ஆவணங்களுடன், அவர்கள் கடன் வாங்க முன் வரும் அனைத்து நகரங்களில் உள்ள வங்கிகளிலும், "இதற்கு முன், கடன் வாங்க வில்லை. மற்ற கடன்களிலும், நிலுவை இல்லை" என்ற தடையின்மைச் சான்றை, மேலாளர்களிடம் பெற்று, ஆவணங்களுடன் இணைக்க வேண்டும். ஆனால், இச்சான்றை பெற, மாணவர்கள் போராட வேண்டி உள்ளது.
இப்பிரச்னையைத் தீர்க்க, வரும் காலங்களில், கல்விக் கடன் கேட்கும் மாணவர்களிடம், தடையின்மைச் சான்று பெறத் தேவையில்லை. மாறாக, எந்த வங்கியிலும், கடனும், நிலுவையும் இல்லை என, பெற்றோர் உறுதிமொழிச் சான்று கொடுத்தால், அதை ஆதாரமாக வைத்து, கல்விக் கடன் வழங்க வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

>>>டி.இ.டி. மறுதேர்வுக்கு 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதியவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆறு லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளதாக டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.
அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, நாளை முதல், 28ம் தேதி மாலை வரை, 32 மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
சுமார் 6 லட்சம் விண்ணப்பங்களை, தயாராக வைத்துள்ளோம். எனவே, விண்ணப்பங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் வராது; அனைவரும், எவ்வித பிரச்னையும் இன்றி விண்ணப்பிக்கலாம்.
மறுதேர்வு முடிவு உள்ளிட்ட அனைத்து இறுதிக்கட்டப் பணிகளையும், நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மறுதேர்வு நடப்பது, அக்டோபர் 14ல், ஞாயிற்றுக்கிழமை. எனவே, தேவையான அளவிற்கு, தேர்வு மையங்களை அமைப்பதில், எவ்வித பிரச்னையும் இருக்காது.
கடந்த, 6 மாதங்களில், 9 தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். குறைந்த ஊழியர்கள் இருந்தாலும், பிரச்னை இல்லாமல், பல லட்சம் விண்ணப்பங்களை கையாள்வது, எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி. தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். எனினும், சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின், இறுதியாக, 2,209 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். 37 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. எனினும், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
இதுவரை 202 பேர் தகுதியிழந்துள்ளனர். உரிய சான்றிதழ்கள் இல்லாதது, குறிப்பிட்ட பாடத்தில் கல்வித் தகுதி பெறாதவர்கள் என, பல்வேறு காரணங்களால், இவர்கள் தகுதியிழந்துள்ளனர். கையெழுத்தை மாற்றிப் போட்ட விவகாரத்தில், இருவர், ஐந்து ஆண்டுகளுக்கு, டி.ஆர்.பி., தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சவுத்ரி கூறினார்.

>>>நேர்முக தேர்வுக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்காதவர்கள், 28ம் தேதி கலந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி. செயலர் உதயசந்திரன் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன் வளத்துறையில், 30 மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 2008ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதற்கான நேர்முகத் தேர்வு, கடந்த, 20ம் தேதி நடந்தது.
நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், அதற்கான காரணத்தைத் தெரிவித்து, வரும் 28ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களை, சம்பந்தபட்ட தேர்வர்கள், 27ம் தேதியே, தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதைத் தவறவிட்டால், அதன்பின், மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

>>>அண்ணாமலை பல்கலை பிரச்னை: முதல்வருக்கு எம்.எல்.ஏ. மனு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அனைத்து பாடப் பிரிவுகளும், மத்திய, மாநில அரசு தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையத்திற்கு பொருந்தும் வகையில், அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என, சிதம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பிய மனுவில், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2002ம் துவக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துள்ளார்கள். 30 பாடபிரிவுகளில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் ஏராளமான சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சில பாடப்பிரிவு படித்த மாணவர்களுக்கு மத்திய, மாநில வேலை வாய்ப்பில் உரிய தகுதியில்லை என நிராகரிக்கின்றன. தொடர்ந்து 5 ஆண்டுகள் பல்கலைக்கழக வகுப்புகளில் படித்து தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியும் பல்கலைக் கழகம் அக்கறை எடுக்கவில்லை. பல்கலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு மாணவர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாணவ, மாணவிகள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி எதிர்கால வாழ்வினை பாதுகாக்க வேண்டும்.
மேலும், அனைத்து பாடப்பிரிவுகளும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள், ஆசிரியர் தேர்வாணையம் உட்பட அனைத்தும் பொருந்தும் வகையில் உரிய அங்கீகாரத்தை அரசு வழங்கி உத்தரவிட வேண்டும்.
அனைவருக்கும் மூன்றாண்டு இளங்கலை படிப்பிற்கான பணிகளுக்கு செல்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

>>>செப்டம்பர் 23 [September 23]....

  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
  • மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
  • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)

>>>பள்ளிகளில் "ஜெனரேட்டர்' வாடகை இழுபறி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, மின்தடையை சமாளிக்கும் வகையில், "ஜெனரேட்டர்' பயன்படுத்த, அரசு உத்தரவிட்டது. இதன்படி, 136 மையங்களில், 42 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டு, தினமும் தலா, 1000 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. "ஜெனரேட்டர்' வாடகையாக, 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், நான்கு மாதமாகியும் வழங்காமல், கல்வித்துறை இழுத்தடிக்கிறது. "ஜெனரேட்டர்' உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ""மூன்று பள்ளிகளில், வாடகைக்கு வைத்தேன். நான்கு மாதமாக, பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அலைகிறேன். பணம் தான் கிடைக்கவில்லை,'' என்றார்.முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ""முறையான "பில்' கொடுக்காததால், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணம் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

>>>பாட புத்தக கொள்முதலில் மாவட்ட அதிகாரிகளுக்கு பங்கு? தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தனியார் பள்ளிகள், மொத்தமாக பாடப் புத்தகங்களை கொள்முதல் செய்யும்போது, பாடநூல் கழகம் வழங்கும், 5 சதவீத தள்ளுபடி தொகையை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பறித்துக் கொள்வதாக, பள்ளி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முப்பருவம்: இந்த ஆண்டு, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று கட்டங்களாக, பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, பெரும்பாலான நிர்வாகிகள், தமிழக அரசின் பாடப் புத்தகங்களையே வாங்குகின்றனர். பாடப் புத்தகங்களை, மொத்தமாக கொள்முதல் செய்தால், மொத்த தொகையில், 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பாடநூல் கழக குடோனில் இருந்து, பள்ளிக்கு புத்தகங்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்துச் செலவிற்கு, இத்தொகையை, பள்ளி நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நடைமுறை, கடந்த ஆண்டு வரை இருந்தது.

வினியோக மையம்: தனித்தனி பள்ளி நிர்வாகிகளும், பாடநூல் கழக குடோனில் குவிந்ததால், புத்தக வினியோகத்தில், பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதை தவிர்ப்பதற்காக, இந்த ஆண்டு, 40, 50 பள்ளிகளுக்கு ஒரு வினியோக மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து, பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் செய்தனர். இந்த முறையில், குளறுபடிகளோ, குழப்பங்களோ எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பாடநூல் கழகம் வழங்கும், 5 சதவீத தள்ளுபடி தொகை, அதிகாரிகள் பாக்கெட்டுக்குச் செல்வதாக, பள்ளி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: சிறிய பள்ளியில் கூட, 1.5 லட்சம் ரூபாய்க்கு, பாடப் புத்தகங்களை கொள்முதல் செய்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 5 சதவீத கமிஷன் தொகையே, 5 லட்சம் ரூபாய் வரை வருகிறது. நாகை, திருவாரூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கமிஷன் தொகை, பல லட்சத்தை தாண்டுகிறது.

செலவாகுமா? இவ்வளவு பணமும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களால் நியமிக்கப்பட்ட பாடப் புத்தக வினியோக மையத்தின் பொறுப்பாளரிடம் செல்கிறது. அவர் மூலம், ஆய்வாளர்களுக்குச் செல்கிறது. இவ்வளவு பணத்தையும், போக்குவரத்துச் செலவுக்காக, வினியோக மைய பொறுப்பாளர்கள் செலவு செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில், பள்ளிகளுக்கு நேரடியாக புத்தகம் வினியோகம் செய்யாமல், குறிப்பிட்ட இடங்களில் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து, நாங்கள் தனியாக வாகனம் வைத்து, எடுத்து வர வேண்டி உள்ளது. இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

பற்றாக்குறை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தின் பதில்: ஐந்து சதவீத தொகையில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கோ, இயக்குனரகத்திற்கோ எவ்வித பங்கும் கிடையாது. இத்தொகை, பாடநூல் கழக குடோனில் இருந்து, பள்ளி களுக்கு கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்திற்கு செலவிடப்படுகிறது. சில இடங்களில், இந்தப் பணம் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உள்ளது. அதை சரிசெய்யும் பணியை, சம்பந்தப்பட்ட வினியோக மைய பொறுப்பாளர்களே செய்கின்றனர். இவ்வாறு, இயக்குனரகவட்டாரங்கள் தெரிவித்தன.

இரு அதிகாரிகள் "சஸ்பெண்ட்': பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், விருதுநகர் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மெர்சி ஜாய், நெல்லை மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜாய் எபினேசர் ஹெப்சி ஆகிய இருவரையும், கடந்த வாரம், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் கூறும்போது, ""தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, அதனடிப்படையில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதிகாரிகள் தவறு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை பாயும். பாடப் புத்தக கமிஷன் தொகையில், அதிகாரிகள் தவறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...