கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மூட விரும்பும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது.
அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் புதிய படிப்புகளை தொடங்க விரும்பினாலோ அல்லது ஏற்கனவே உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினாலோ ஏ.ஐ.சி.டி.இ.க்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யே அறிவிப்பு வெளியிடும்.
ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என கடந்த ஜுன் மாதம் நாடு முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 324 கல்லூரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 71 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும்.
புதிய படிப்புகள், இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விண்ணப்பிப்பது குறித்து கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
புதிய படிப்புகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விண்ணப்பிப்பது போன்று கல்லூரிகளை மூடவிரும்பும் நிர்வாகத்தினரும் அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால் கோரிக்கையை பரிசீலித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நலன்கருதி முடிவு எடுக்கவும் சற்று கால அவகாசம் கிடைக்கும் என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், கல்லூரி நிர்வாகத்தினர் அவசர அவசரமாக வேறு ஒரு நிர்வாகத்திடம் கல்லூரியை விற்றுவிடுவதையும், வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காக கல்லூரியை லீசுக்கு விடுவதையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

>>>பழங்குடியினரை மிரட்டும் ரத்த சோகை நோய்: பொது வினியோகத்தில் வெல்லம் வழங்க முடிவு!

"ரத்த சோகை பாதிப்பில் இருந்து பழங்குடியின மக்களை மீட்க, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என, பழங்குடியினர் நல ஆணையர் தெரிவித்தார்.

பழங்குடியினர் நல ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான, கிறிஸ்துதாஸ் காந்தி, ஊட்டியில், அளித்த சிறப்பு பேட்டி: நீலகிரி மாவட்டத்தில், ஆறு தொல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மேம்பாட்டுக்குரிய திட்டங்களை அவர்களே திட்டமிட்டு கொள்ளும் வகையில், ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி உட்பட மலைப் பிரதேசங்களில், பழங்குடியின கிராமங்களில் வாழும் கர்ப்பிணி பெண்கள், உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சேர முடிவதில்லை; காரணம், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், பிரசவ கால பிரச்னைகளை பழங்குடியின கர்ப்பிணிகள் எதிர்கொள்கின்றனர். சாலை, போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின கர்ப்பிணி பெண்கள், குறித்த நாளுக்கு, ஒரு மாதத்திற்கு முன், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் காப்பகம் அமைத்து, அவர்களை அங்கு தங்க வைத்து, பிரசவ சிகிச்சை அளிக்கலாம். இதற்கான பரிந்துரை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்கள், "சிக்கில் -செல்- அனிமியா' மற்றும் ரத்த சோகையால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெல்லத்தை உண்பது, ரத்த சோகை நோயைக் கட்டுப்படுத்தும் என்பதால், பழங்குடியின மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவ, மாணவியர் இடையே, கல்வி பெறுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், அரசு கல்லூரிகளில், அதிகளவு, மாணவ, மாணவியர் இணைகின்றனர். எனவே, கூடுதலாக, எஸ்.சி., - எஸ்.டி., விடுதிகளை அமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.

>>>ஆசிரியர் நியமன விதிமுறை ஓரிரு நாளில் வெளியாகிறது

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை, உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

>>>அக்டோபர் 05 [October 05]....

  • சர்வதேச ஆசிரியர்கள் தினம்
  • பாகிஸ்தான் ஆசிரியர் தினம்
  • இந்தோனேஷிய ராணுவ தினம்
  • இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)

>>>அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை பசுமைப்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு...


தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 24412 / ஜே3 / 2012, நாள் 04.10.2012ன் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பசுமைப்படுத்தும் நோக்கத்துடன் வனத்துறை மூலம்   1,87,331 மரக்கன்றுகளும், பொது தொண்டு நிறுவனங்கள் மூலம் 10,000 மரக்கன்றுகளும் ஆக மொத்தம் 1,97,331 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் வனத்துறையினரிடமிருந்து மரக்கன்றுகளைப் பெற்று அனைத்துப் பள்ளிகளிலும் அக்டோபர் 31க்குள் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாட்டினை உடனடியாகச் செய்திடவும், அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகளை ஒவ்வொரு வகுப்பிற்கும் பொறுப்பினை அனித்து உரிய முறையில் வளர்க்க அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடுமாறும் இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>பள்ளிகளில் அடிப்படை வசதி மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு

"நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்'என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டில் உள்ள பல, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. குறிப்பாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை; இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள், தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனு, நீதிபதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என்ற தகவல், வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குள், அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

>>>ஓலைச்சுவடிகள் உள்ளதா? புதுப்பிக்க வாய்ப்பு

ஓலைச்சுவடிகள் வைத்திருந்தால், அதை சீரமைத்து தருவதாக, அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் அறிவித்து உள்ளது. தொல்லியல் துறை கீழ் இயங்கும், அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 72,300 ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஓலை சுவடிகள், எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளதால், அவை அழியும் நிலையில் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், வேதிப்பொருள் பயன்படுத்தி பாதுகாக்கவில்லையென்றால், அவை முற்றிலும் அழிந்து போகும். எனவே, இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, இந்திய அரசின் கலாசார மையத்தின் ஒரு பிரிவான, தேசிய சுவடிகள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள அடிப்படை தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் வள ஆதார மையமாக, அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைந்து உள்ளது. இதுகுறித்து, அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலக காப்பாளர் சந்திரமோகனை அணுகலாம். ஓலைச் சுவடிகளை வைத்திருப்போர், அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரியிலும், 044-2536 5130, 98400 41761, 89395 91336 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...