கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட் மற்றும் எம்.எட் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு

தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. பி.எட்., மற்றும் எம்.எட்., மறு மதிப்பீட்டின் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வில் தவறிய மாணவர்கள், டிசம்பரில் நடக்கும் துணைத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை, தாங்கள் படித்த கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், ந்ந்ந்.ட்ன்டெஉ.இன் என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி முதல்வர்கள் மூலம் வரும் 29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அபராத கட்டணத்துடன் நவம்பர் 7ம் தேதி வ்ரை விண்ணப்பங்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>இந்திய மாணவர்களின் நலன் காக்கப்படுமா?

முறையான வசதிகள் இன்றி செயல்பட்டு வரும், 3 ஆஸ்திரேலிய தொழிற்கல்வி கல்லூரிகளை மூட, அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதால், 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரத்தில், இத்தகைய மூடுதல் நடவடிக்கையால், இந்திய மாணவர்களின் நலன், எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸ் உறுதியளித்துள்ளார். Australian skills quality authority(ASQA) எனப்படும், ஆஸ்திரேலியாவின் தொழில்முறை கல்வி நெறிமுறை அமைப்பு, விக்டோரியாவில் 2 தொழிற்கல்வி கல்லூரிகளையும், நியூசெளத் வேல்ஸ்சில் 1 தொழிற்கல்வி கல்லூரியையும் மூட முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ASQA தரப்பில் கூறப்படுவதாவது, "பயிற்சி நிறுவனங்களின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் மிகவும் முக்கியம். மேலும், குறிப்பிட்ட நிறுவனங்கள், தங்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகளை, மறுபரிசீலனை செய்யும்படி கோரும் உரிமையைப் பெற்றுள்ளன".
The Ashmark group pty ltd, G plus G global trading pty ltd, Ivy group போன்றவையே அந்த 3 கல்வி நிறுவனங்கள். The Ashmark group pty ltd -ல் 400க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களும், G plus G global trading pty ltd -ல் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களும், Ivy group  -ல் 30 இந்திய மாணவர்களும் படித்து வருகின்றனர்.

>>>தொழில்முறை படிப்புகளில் தமிழகம் இரண்டாமிடம்!

பொறியியல், மேலாண்மை, கட்டடக்கலை மற்றும் பார்மசி போன்ற தொழில்முறை படிப்புகளை வழங்குவதில், தமிழகம் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தம் 33 மாநிலங்களில், பொறியியல், மேலாண்மை, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கட்டடக்கலை, ஹோட்டல் மேலாண்மை, டிப்ளமோ மற்றும் பார்மசி போன்ற தொழில்முறை படிப்புகளை வழங்குவதில் தமிழகம் 2ம் இடம் வகிக்கிறது. தமிழகத்தில், இதுபோன்ற படிப்புகளின் மொத்த மாணவர் சேர்க்கை 5,31,986. முதலிடத்தில், 6,91,237 மாணவர்களுடன், ஆந்திரா உள்ளது.
கடந்த ஆண்டு, மேற்கூறிய தொழில்முறை படிப்புகளில் 52,506 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதன்மூலம், அதிகளவு பொறியாளர்களையும், மேலாண்மை பட்டதாரிகளையும் உருவாக்கும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாமிடம் பெற்றது.
தமிழகத்தில், 516 பொறியியல் கல்லூரிகளும், 487 பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன. நாட்டில் வழங்கப்படும் ஒட்டுமொத்த தொழில்முறை கல்வியில், 15.4% பங்கை தமிழகம் கொண்டுள்ளது.
அதேசமயம், டெல்லி, அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மணிப்பூர், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில், தொழில்முறை படிப்புகளில் மாணவர்கள் சேர்வது குறைந்துள்ளது. மேலும், திரிபுரா, டாமன் அன்ட் டயூ, அருணாச்சல் பிரதேஷ், சண்டிகர் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகியவற்றில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை.

>>>உதவி நூலகர் பணி வழங்க மறுப்பு: துணைவேந்தருக்கு நோட்டீஸ்

தகுதியானவருக்கு உதவி நூலகர் பணி வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த மனோன்மணி, தாக்கல் செய்த மனுவில், நான், மதுரை காமராஜ் பல்கலை நூலகத்தில் உதவியாளராக சேர்ந்தேன். 18 ஆண்டுகளுக்கு பின் 2009ல் தொழில்நுட்ப உதவியாளரானேன். 2011 டிசம்பர் 27ல் நூலகப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றேன்.
எனக்கு உதவி நூலகராக தகுதியுள்ளது. 2008ல் ஆறு உதவி நூலகர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தகுதி இருந்தும் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. 2011 பிப்ரவரி 3ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், எனக்கு உதவி நூலகர் பணியிடம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படியும் பதவி உயர்வு வழங்கவில்லை.
இதுகுறித்து துணைவேந்தர், பதிவாளரிடம் முறையிட்டும் பயனில்லை. எனக்கு உதவி நூலகர் பதவியிடம் வழங்க உத்தரவிட வேண்டும், என கோரினார். நீதிபதி வினோத்குமார் சர்மா முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜரானார். இதுபற்றி விளக்கம் அளிக்க, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

>>>மூட விரும்பும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது.
அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் புதிய படிப்புகளை தொடங்க விரும்பினாலோ அல்லது ஏற்கனவே உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினாலோ ஏ.ஐ.சி.டி.இ.க்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யே அறிவிப்பு வெளியிடும்.
ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என கடந்த ஜுன் மாதம் நாடு முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 324 கல்லூரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 71 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும்.
புதிய படிப்புகள், இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விண்ணப்பிப்பது குறித்து கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
புதிய படிப்புகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விண்ணப்பிப்பது போன்று கல்லூரிகளை மூடவிரும்பும் நிர்வாகத்தினரும் அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால் கோரிக்கையை பரிசீலித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நலன்கருதி முடிவு எடுக்கவும் சற்று கால அவகாசம் கிடைக்கும் என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், கல்லூரி நிர்வாகத்தினர் அவசர அவசரமாக வேறு ஒரு நிர்வாகத்திடம் கல்லூரியை விற்றுவிடுவதையும், வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காக கல்லூரியை லீசுக்கு விடுவதையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

>>>பழங்குடியினரை மிரட்டும் ரத்த சோகை நோய்: பொது வினியோகத்தில் வெல்லம் வழங்க முடிவு!

"ரத்த சோகை பாதிப்பில் இருந்து பழங்குடியின மக்களை மீட்க, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என, பழங்குடியினர் நல ஆணையர் தெரிவித்தார்.

பழங்குடியினர் நல ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான, கிறிஸ்துதாஸ் காந்தி, ஊட்டியில், அளித்த சிறப்பு பேட்டி: நீலகிரி மாவட்டத்தில், ஆறு தொல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மேம்பாட்டுக்குரிய திட்டங்களை அவர்களே திட்டமிட்டு கொள்ளும் வகையில், ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி உட்பட மலைப் பிரதேசங்களில், பழங்குடியின கிராமங்களில் வாழும் கர்ப்பிணி பெண்கள், உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சேர முடிவதில்லை; காரணம், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், பிரசவ கால பிரச்னைகளை பழங்குடியின கர்ப்பிணிகள் எதிர்கொள்கின்றனர். சாலை, போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின கர்ப்பிணி பெண்கள், குறித்த நாளுக்கு, ஒரு மாதத்திற்கு முன், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் காப்பகம் அமைத்து, அவர்களை அங்கு தங்க வைத்து, பிரசவ சிகிச்சை அளிக்கலாம். இதற்கான பரிந்துரை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்கள், "சிக்கில் -செல்- அனிமியா' மற்றும் ரத்த சோகையால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெல்லத்தை உண்பது, ரத்த சோகை நோயைக் கட்டுப்படுத்தும் என்பதால், பழங்குடியின மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவ, மாணவியர் இடையே, கல்வி பெறுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், அரசு கல்லூரிகளில், அதிகளவு, மாணவ, மாணவியர் இணைகின்றனர். எனவே, கூடுதலாக, எஸ்.சி., - எஸ்.டி., விடுதிகளை அமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.

>>>ஆசிரியர் நியமன விதிமுறை ஓரிரு நாளில் வெளியாகிறது

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை, உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...