கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்டோபர் 20 [October 20]....

  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
  • வீரேந்தர் சேவாக் பிறந்த தினம்(1978)

>>>அன்ன பிளவு அறுவை சிகிச்சை தொடர்புகொள்ள வேண்டுகோள்

"அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பல்வேறு உதவிகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், நடந்து முடிந்த மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டுள்ள அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டியது அவசியம். நடப்பு கல்வி ஆண்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றம் ஸ்மைல் ட்ரெயின் தொண்டு நிறுவனம் சார்பில், இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கோவை கங்கா மருத்துவமனை ஆகியவற்றில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

>>>சிறுபான்மை பள்ளிகளில் உரிமை மீறல்கள் அதிகம் : தேசிய ஆணைய குழுவிடம் புகார்

"தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிக உரிமை மீறல்கள் நடக்கின்றன' என, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம், புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் சார்பில், சென்னையில் நேற்று நடந்த விசாரணையின் போது, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர், "தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிகளவிற்கு, குழந்தை உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன' என்றார். ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா கூறுகையில், ""தனியார் பள்ளியோ, சிறுபான்மை பள்ளியோ... எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், அங்கு, எத்தகைய குழந்தை உரிமை மீறல் நடந்தாலும், அதற்கு, கல்வித் துறைக்கும், மாநில அரசுக்கும் முழு பொறுப்பு உண்டு. அவர்கள் தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின்படி, சம்பந்தபட்ட ஆசிரியரை, பணியில் இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதுடன், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சமீபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், போதிய அளவிற்கு இல்லை என, ஆணைய தலைவரிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ""ஆறு மாதங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?'' என, சாந்தா சின்கா கேள்வி எழுப்பினார். இதற்கு, பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறுகையில், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களுக்குள், முழுமையான அளவில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

>>>கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. தேர்வுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டி தேர்வு, அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை, நவ., 1 முதல், 9ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு, ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவு மாணவ, மாணவியர், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டி, தேர்வு கட்டணம், 50 ரூபாய் உடன், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு, இரு பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில், மனத்திறன் தேர்வு; பகுதி இரண்டில், படிப்பறிவு தேர்வு. ஒவ்வொரு பகுதிக்கும், தலா, 90 நிமிடங்கள் வழங்கப்படும். படிப்பறிவு தேர்வில், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் இருந்து, கேள்விகள் கேட்கப்படும். அறிவியலில், 35 கேள்விகள், கணிதத்தில், 20, சமூக அறிவியலில், 35 என, 90 கேள்விகள் கேட்கப்படும். தலா, 1 மதிப்பெண்கள். மனத்திறன் தேர்வுக்கு, பாடப் பகுதி கிடையாது. இப்பகுதியிலும், 90 கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

>>>திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் தேர்வு செய்ய மூவர் குழு அமைப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூவர் குழு அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர், கல்யாணி. இவரது, பதவிக்காலம் கடந்த, ஏழு மாதங்களுக்கு முன்பே முடிந்தது. இந்நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான மூவரை தேர்வு செய்வதற்கான மூவர் குழுவை, கவர்னர் நியமித்துள்ளார். இக்குழுவிற்கு, கவர்னரின் பிரதிநிதியாக, போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக, இணைவேந்தரும், சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தருமான தியாகராஜன், தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். அரசு சார்பில், உடுமலைப்பேட்டை, ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர், மஞ்சுளா; சிண்டிகேட் அமைப்பு சார்பில், காந்தி கிராம பல்கலைக்கழக, கணித துறை தலைவர், பாலசுப்ரமணியன் ஆகியோர், உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்தகுழு, துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகளை பரிசீலித்து, அதில் மூவரது பெயரை, கவர்னருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை, திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தராக, கவர்னர் நியமிப்பார்.

>>>சிறப்பு ஆசிரியர்கள் 1,524 பேர் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு, "பாலிடெக்னிக்' கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன.தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம் அனுப்பப்படும்.

>>>வானியல் இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாள்.

 இன்று - அக். 19 : இந்தியர் பெருமையை உலகம் அறியவைத்த தமிழகச் சாதனையாளர்களில் ஒருவரான வானியல் இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாள்.
* வானியல் இயற்பியலாளர், சுப்ரமணியன் சந்திரசேகர், பிரிக்கப்படாத அன்றைய இந்தியாவின் லாகூரில் அக்டோபர் 19, 1910-ல் பிறந்தார். அப்பா சுப்ரமணியன்! லாகூரில் ரயில்வேயில் ஆடிட்டராக இருந்தார். நன்றாக வயலின் வாசிப்பார். அம்மா சீதாலஷ்மி மெத்தப் படித்தவர். உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் இப்செனின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். 'அம்மாவின் தூண்டுதலே அறிவியல் மீதான எனது ஆர்வத்துக்குக் காரணம்’ என்பார் சந்திரசேகர்.
* இவரது மாமாதான் சர் சி.வி.ராமன். இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண் பிள்ளை என்பதால், சந்திரசேகருக்கு செல்லம் அதிகம். தன் பொம்மைகளை உடைத்துவிட்டு, சகோதரிகளின் பொம்மைகளைப் பிடுங்கிக்கொள்வார். வீட்டிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார். 11 வயதில் திருவல்லிக்கேணி, ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பு ஆர்வத்தில், அடுத்த வருடப் பாடங்களை முன்னரே படித்துவிடுவார்.
* சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார். அப்போதுதான் 'குவான்டம் இயற்பியல்’ என்கிற புதிய துறையை நோக்கி இயற்பியல் பயணிக்க ஆரம்பித்து இருந்தது.அப்போது நோபல் பரிசு பெற்ற சோமர்ஃபீல்ட் (Sommerfeld) அவர்களைச் சந்தித்தது இவர் வாழ்வில் திருப்புமுனை.
* மாநிலக் கல்லூரியில் முதல் மாணவராகத் தேறினார் சந்திரசேகர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல சிறப்பு ஸ்காலர்ஷிப் இவருக்காகவே ஏற்படுத்தப்பட்டு, கேம்ப்ரிட்ஜ் போனார். இந்தியாவில் இருந்து கேம்ப்ரிட்ஜ் நோக்கிக் கப்பலில் போகும்போதுதான் புகழ்பெற்ற 'சந்திரசேகர் எல்லை’ என்ற அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் வயது 20.
* நட்சத்திரங்களின் வாழ்நாளைப் பற்றி ஆய்வு செய்து, 'சூரியனின் நிறையைபோல 1.4 மடங்கு அதிக எடைகொண்ட நட்சத்திரங்கள், எரிபொருள் தீர்ந்ததும் மற்ற நட்சத்திரங்கள், வான்வெளியில் உள்ள இன்னபிறவற்றைத் தம்முள் இழுத்துக்கொள்ள முயற்சிக்கும்’ என அறிவித்தார். இதுவே 'சந்திரசேகர் எல்லை’ எனப்படுகிறது.
* இந்த ஆய்வுகளை உலகப் புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர், ஆர்தர் எடிங்டன் (Arthur eddington) அடிப்படை அற்றது என ஏற்க மறுத்துவிட்டார். சந்திரசேகரின் கட்டுரையைச் சில அறிவியல் இதழ்களும் நிராகரித்தன. மனம் வருந்தினார் சந்திரசேகர். கேம்ப்ரிட்ஜ் படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்று, சிகாகோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஆனார். தன் மரணம் வரையில் அங்கேயே இருந்தார்.
* தலைசிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெற்ற சந்திரசேகர், தன்னை மாணவர்கள் 'சார்’ என அழைக்கத் தடை விதித்தார். சந்திரா என்றே அழைக்கலாம் என அறிவித்தார். 'மாணவர்கள் அடிமைகள் இல்லை, அவர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள்’ என்பது அவர் கொள்கை. றீ200 மைல் தொலைவில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் வெறும் இரண்டே மாணவர்களுக்குக் பாடம் நடத்தக் கொட்டுகிற பனியில் செல்வார். ''அந்த இரண்டு மாணவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்.'என்பார்.அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றிய அந்த மாணவர்கள் சந்திரசேகருக்கு முன்னமே 1957-ல் நோபல் பரிசு பெற்றனர். அவர்களின் பெயர் லீ மற்றும் யாங்.
* எடிங்டன் எதைத் தவறு என நிராகரித்தாரோ, அதை உலகம் 40 வருடங்கள் கழித்து ஏற்றுக்கொண்டது. அதற்கான நோபல் பரிசு 1983-ல் அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு துறையில் தன் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு தளங்களில் ஆய்வுகள் செய்தவர். அவற்றை அற்புதமான நூல்களாகவும் வடித்தார். 1995 ஆகஸ்ட் 21-ல் மரணமடைகிற அன்றுகூடப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் சந்திரசேகர்.
* ''என்னைப்பற்றி சமகால மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குக் கவலை இல்லை. வருங்கால சந்ததிகளுக்கு என் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். இப்போது நான் செய்ய வேண்டியது, எனக்குள் இருக்கும் அறிவு ஒளியை, மனதை வேறு எதிலும் பறிகொடுக்காமல் காத்தலில்தான் உள்ளது'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs 5 lakh relief for teacher Ramani's family - Tamil Nadu Chief Minister M.K.Stalin's announcement

ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மல்லி...