கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கிகளுக்கு கண்டிப்பு

"பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக, மாணவர்களுக்கான கல்விக் கடனை, வங்கிகள் வழங்க மறுக்கக் கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் அனிதா. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், விவசாய வேலை செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு, 92 ஆயிரம், இரண்டாம் ஆண்டு, 74 ஆயிரம், மூன்றாம் ஆண்டு, 74 ஆயிரம், இறுதியாண்டில், 74 ஆயிரம், என, மொத்தம், 3 லட்சத்து, 14 ஆயிரம், கட்டணமாக செலுத்த வேண்டும். ஆம்பூரில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், கல்விக் கடன் கேட்டு, விண்ணப்பித்தார். பள்ளி அளவில், சரியாக படிக்கவில்லை எனக் கூறி, விண்ணப்பத்தை, வங்கி பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், அனிதா தாக்கல் செய்த மனு: நான், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். என் குடும்பத்தில், முதலாவதாக, பட்டப் படிப்புக்கு செல்கிறேன். கூரை வீட்டில் வசிக்கிறோம். மின்சார வசதி இல்லை. இந்தச் சூழ்நிலையில், கஷ்டப்பட்டு, பள்ளிப் படிப்பை முடித்தேன். கல்விக் கடன் கோரிய, எனது விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்கு, வங்கி கூறும் காரணத்தை ஏற்க முடியாது.கடன் வழங்க மறுத்த, வங்கியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எனக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி அரிபரந்தாமன் மனுவை விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முனுசாமி ஆஜரானார். விசாரணைக்குப் நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: கல்விக் கடன் திட்டம் குறித்த சுற்றறிக்கையை, வங்கியின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், "பள்ளி அளவில் நன்றாகப் படித்தால் தான், கல்விக் கடன் வழங்கப்படும்" எனக் கூறப்படவில்லை. பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடன் வழங்க, எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மெட்ரிக்குலேஷன் தேர்வில், டாக்டர் அம்பேத்கர், 750க்கு, 287 மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தார். அவரது கல்விக்கு, பரோடா மன்னர் உதவினார். தனது பெற்றோர், விவசாயத் தொழிலாளி என்றும், அடித்தட்டில் இருந்து வந்திருப்பதாகவும், மாணவி கூறியுள்ளார். இதை, வங்கி தரப்பில் பரிசீலித்திருக்க வேண்டும். படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதியை, மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்பது, வங்கி தரப்பு வாதம் அல்ல. பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர, அவர் தகுதி பெற்றுள்ளார். எனவே, பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடனை, வங்கி மறுக்க முடியாது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்காகவே, கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய், கடன் பெற, மூன்றாம் நபர் உத்தரவாதம் கூட தேவையில்லை. எனவே, வங்கி மேலாளரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்கு வாரங்களில், கல்விக் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

>>>குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை

குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது. கடந்த ஆண்டு, ஜூலையில், குரூப்-2 தேர்வு நடந்தது. 6,692 பணியிடங்களுக்காக, இந்த தேர்வு நடந்தது. இதில், 3.5 லட்சம் பேர் எழுதினர். கடந்த, ஜூன் மாதம், தேர்வு முடிவு வெளியானது. 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு, ஜூன் இறுதியில் துவங்கி, ஜூலை வரை நடந்தது. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த நிர்மல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "ஐந்து கேள்விகளுக்கு, கீ விடைத்தாளில் வழங்கப்பட்ட, விடைகள் தவறானவை. "ஒரு மதிப்பெண்ணால், எனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு இல்லை. எனக்கு, ஐந்து மதிப்பெண்கள், கூடுதலாக வழங்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் கவுன்சிலிங், முடிந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க கூடாது. டி.என்.பி.எஸ்சி., தரப்பில், 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.

>>>டெங்கு: அச்சமில்லைஅச்சமில்லை: ‌தடுக்க முடியுமா டெங்கு காய்ச்சலை

தடுக்க முடியுமா டெங்கு காய்ச்சலை:டெங்கு காய்ச்சலை பரப்புவதே கொசுக்கள் தான். பகல் நேரத்தில் மட்டுமே மனிதர்களை கடிக்கும், "ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலமே இக்காய்ச்சல் பரவுகிறது. பருவமழை காலத்தில் அதிகம் பரவும் இக்காய்ச்சல், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
அறிகுறிகள்: இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல் எலும்பு மூட்டுகள், இணைப்புகளில் கடும் வலியுடன் தொடர் காய்ச்சல் இருக்கும். தலைவலியும் சேர்ந்து இருக்கும். உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால், தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டரை ஆலோசிக்க வேண்டும்.
பரிசோதனைகள் என்ன:
டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை செய்யப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், வயதிற்கேற்ப 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், சம்மந்தப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கும். பின், காயச்சலை உறுதி செய்யும் மற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மற்ற சிகிச்சைகள் தரப்படும்.
நிலைகள்:
டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். இதைத் தவிர, பெரிய பாதிப்பு இருக்காது.காய்ச்சல் குணமாகி, சில நாட்கள் கழித்து, மீண்டும் ஏற்பட்டால் அது இரண்டாவது நிலை டெங்கு என கருதப்படும். ரத்தம் உறைவதற்கான தட்டணுக்களின் எண்ணிக்கை இவர்களுக்கு குறைந்து விடும். வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்படும்.இதே நிலை முற்றினால், டெங்குவின் மூன்றாம் நிலை என கருதப்படும். இவர்களுக்கு ரத்தப் போக்கின் காரணமாக, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும்.
ரத்த அழுத்தம் மாறும். நாடித்துடிப்பு குறையும். மயக்க நிலையை அடையும் அபாயம் ஏற்படும். தோலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றும். டெங்கு தாக்கி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
தற்போது பாதிக்கப்பட்டோருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.
முன்னெச்சரிக்கைக்கு என்ன செய்ய வேண்டும்
* நாட்கணக்கில் தண்ணீரை சேமிப்பு வைத்து, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* சேமிக்கும் தண்ணீரை, முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
* தண்ணீர் சேமிக்கும் தொட்டி, பாத்திரங்களை ஆறு நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
* வீடுகளைச் சுற்றி, மழை நீர் சேமிக்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக், டயர்கள், சிரட்டை போன்றவற்றை அகற்ற வேண்டும்.
* வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

>>>இன்று ஒரு தகவல்.....

 
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
 ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!
 ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்... ‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’ ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது . ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’
தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!
நன்றி :
தென்கச்சி கோ.சுவாமிநாதன்

>>>அக்டோபர் 22 [October 22]....

  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
  • அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • இந்தியா தனது முத‌ல் ஆளில்லா செயற்கைகோளான சந்திரயான் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)

>>>டி.இ.டி., மறுதேர்வு"கீ-ஆன்சர்' வெளியீடு

டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., நேற்று இணையதளத்தில் வெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>மலைப்பகுதிகளில் பணிபுரிய ஆர்வம் காட்டிய ஆசிரியர்கள்...

மலைப் பகுதிகளில் வேலை என்றாலே, ஆளை விடுங்க சாமி என, கையெடுத்து கும்பிடாத குறையாக, அரசு அலுவலர்கள், ஊழியர்கள், "எஸ்கேப்' ஆகி விடுவர். இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மலைப் பிரதேச பகுதிகளை அனுபவித்துப் பார்க்க, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தயாராகவே உள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று முன்தினமும், நேற்றும், "ஆன்-லைன்' வழியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தன. முதல் நாள் கலந்தாய்வில், 224 பேர், பதவி உயர்வு பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, 221 காலியிடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடந்தது.தஞ்சாவூர் மாவட்டத்தில், 39 இடங்கள், கிருஷ்ணகிரி, 42, திருவண்ணாமலை, 23, விழுப்புரம், 16 இடங்கள் காலியாக இருந்தன. மற்ற மாவட்டங்களில், குறைந்த அளவு இடங்களே இருந்தன.  இதில், நீலகிரி மாவட்டத்தில், 16 இடங்கள் காலியாக இருந்தன.வழக்கமாக, நீலகிரி உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில், ஆசிரியர் பணியிடங்கள், அதிகளவில் காலியாகவே இருக்கும். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பணி என்றாலும், "ரிஸ்க்” அதிகம் என்பதால், இது போன்ற பணியிடங்களை, ஆசிரியர் விரும்புவதில்லை. போக்குவரத்து இல்லாதது, பெரும் பிரச்னையாக இருக்கும். அதனால், உள்ளூர் அல்லது உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, பெரும்பாலும் பணிபுரிவர். நேற்று நடந்த கலந்தாய்வில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே எதிர்பார்க்காத நிலையில், 16 காலியிடங் களையும், பட்டதாரி ஆசிரியர், போட்டி போட்டுக்கொண்டு, தேர்வு செய்தனர். இவர்களில், சிலர் மட்டுமே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரியர்கள், விழுப்புரம்,சேலம், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தது, அதிகாரி களை வியப்பில் ஆழ்த்தியது.இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் வாழ்வதையும், அந்த சூழலை அனுபவிக்கவும், ஆசிரியர்கள் தயாராகி விட்டதையே, இது காட்டுகிறது. இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மலை சார்ந்த பகுதிகளில் பணி என்றால், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கும். ஆனால், இப்போது, அங்கேயும் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. அதனால், மலை சார்ந்த பகுதிகளிலும், பணிபுரிய ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், மலைப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில, "அலவன்ஸ்'கள் வழங்கப்படுகின்றன. பழமையான சில பள்ளி வளாகங்களில், தலைமை ஆசிரியருக்கு, விடுதிகளும் உள்ளன. எனவே, அங்கேயே ஆசிரியர், குடும்பத்துடன் கூட தங்கலாம். இப்படி, பல வசதிகள் இருப்பதால் தான், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும், நீலகிரி மாவட்ட பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடு அட்டி... எருமாடு...மாவட்டத்தில் உள்ள 16 இடங்களும், கேரளா, கர்நாடகா எல்லைகளை ஒட்டி வருவதா கவும், பெரும்பாலான பள்ளிகள், மலை சார்ந்த பகுதிகளில் இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். எகோனி, கட்ட பெட்டு, கை உன்னி, இடு அட்டி, சோளூர் மட்டம், தெங்கு மராடா, எருமாடு உள்ளிட்ட இடங்கள், காலியிடங்களில் அடக்கம். மலை சார்ந்த பள்ளிகளாக இருந்தாலும், 300 முதல் 500 மாணவர் வரை, ஒவ்வொரு பள்ளிகளிலும் படித்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...