கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு

கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது. இந்த சான்றிதழை, உயர் படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பிற்காகவும் பயன்படுத்தலாம்; எனினும், பட்டப் படிப்பு சான்றிதழ் அவசியம். குறிப்பாக, பலர், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியராக வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்களின் பணி நியமனத்திற்கு, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனில், தற்காலிக சான்றிதழ் மட்டும் போதாது. இதுபோன்ற பிரச்னைகளால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர், வீரமணி கூறுகையில், "பட்டமளிப்பு விழாவிற்கு, ஆளுனரிடம் தேதி கேட்டுள்ளோம். விரைவில், தேதி கிடைத்து விடும். நவம்பருக்குள், பட்டமளிப்பு விழாவை நடத்தி, சான்றிதழை வழங்கி விடுவோம்," என்றார்.

26 மாதிரி பள்ளிகள் கட்டுவதில் வந்தது சிக்கல்: நிதி ஒதுக்காததால் பணிகள் முடங்கின!

கல்வியில் பின்தங்கிய, ஒன்றியங்களில் கட்டப்பட உள்ள, 26 மாதிரிப் பள்ளிகளுக்கான திட்ட ஒதுக்கீடு, 117 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலா, மூன்று கோடி வீதம், 78 கோடி ரூபாய் மட்டுமே, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கட்டடம் கட்ட, கூடுதலாக தலா, 1.5 கோடி ரூபாய் கேட்பதால், கட்டுமானப் பணிகள் துவங்குவதில், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், கல்வியில் பின்தங்கியுள்ளதாக, 44 ஒன்றியங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த ஒன்றியங்கள், அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய, 13 மாவட்டங்களில் வருகின்றன.மத்திய அரசு திட்டத்தின் கீழ், இந்த ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், இரு கட்டங்களாக, 44 மாதிரிப் பள்ளிகள் துவங்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, 2010-11ல், 18 மாதிரிப் பள்ளிகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில், 14 பள்ளிகளுக்கான பணிகள் மட்டும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.  ஒப்பந்ததாரர் பிரச்னையால், இதில், நான்கு பள்ளிகளின் கட்டுமானப் பணியில், தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது.அரசுப் பள்ளிகள் வளாகத்தில் இயங்கி வரும், 18 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வியாண்டில், புதிய பள்ளிகள் பட்டியலில் சேர்க்கப்படும் என, தெரிகிறது.  கல்வியில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியருக்கென துவங்கப்பட்டுள்ள இப்பள்ளிகள், நல்ல தரத்துடன் இயங்கி வருகின்றன.கடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில், பெரியசிறுவத்தூர் மாதிரிப் பள்ளி மாணவி, மதுராம்பிகை, 486 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் அளவில், முதலிடம் பெற்றார்.  இது, அங்குள்ள கல்வித்தரத்திற்கு சாட்சியாகும். மாதிரிப் பள்ளிகளில், தற்போது, 3,537 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பணிகள் முடக்கம்:இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில் வெளியான நிலையில், இதுவரை பணிகளை ஆரம்பிக்கவில்லை.  ஒரு பள்ளிக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், 78 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு அனுமதித்து உள்ளது.ஆனால், தற்போதுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதலாக, தலா, 1.5 கோடி ரூபாய் வீதம், மொத்தம், 117 கோடியை ஒதுக்கினால் தான், பணிகளை முடிக்க முடியும்.  இக்கட்டடங்களின், கட்டுமானப் பணியை எடுத்துள்ள காவலர் வீட்டுவசதிக் கழகம், தெளிவாக இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
கால தாமதம்:கூடுதலாக தேவைப்படும், 39 கோடி ரூபாயையும், மத்திய அரசிடம் இருந்து கேட்க வேண்டுமெனில், அதற்குள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, அதற்கான நிதியைப் பெற, மிகவும் கால தாமதம் ஆகும்.எனவே, கூடுதலாக கேட்கும் நிதி ஒதுக்கீட்டு அளவை, கணிசமாக குறைக்குமாறு, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம், காவலர் வீட்டு வசதிக் கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, தற்போது மீண்டும் ஆய்வு நடந்து வருகிறது. இதனால், திட்டமிட்டபடி, நடப்பு கல்வியாண்டில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

>>>இடைநிற்றலை தடுக்க தமிழகம், ஒடிசாவில் முன்னோடி திட்டம்

இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்கும் பணியை, தமிழகம், ஒடிசா மாநிலங்களில், சோதனை முயற்சியாக செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் கல்லாமையை போக்க, ஆஸ்திரேலிய நாட்டு ஆசிரியர் இயக்கம் உதவி வருகிறது. இதன்படி, 6 முதல், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை, பள்ளியில் சேர்க்க வேண்டும்; மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் இடை நிற்க கூடாது; இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம், ஓடிசா மாநிலங்களில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டங்களில், முற்கட்டமாக இப்பணி நடக்க உள்ளது. மாவட்டத்திற்கு தலா, ஐந்து கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர், ஜோசப் சேவியர் கூறுகையில், "டிசம்பர் மாதத்திற்குள், இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவர். இதுகுறித்த அறிக்கையை, உலக ஆசிரியர் கல்வி அமைப்பு, ஆஸ்திரேலியா நாட்டு கல்வி அமைப்பு ஆகியவற்றிக்கு அனுப்பப்படும்" என்றார்.

>>>எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க கோரிய மனு தள்ளுபடி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, இடங்களை அதிகரிக்க, புதிதாக அத்தியாவசிய சான்றிதழ் வலியுறுத்தாமல், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிய, தனியார் மருத்துவக் கல்லூரியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, குரோம்பேட்டையில், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100ல் இருந்து, 150 இடங்களாக அதிகரிக்கக் கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பிக்க, அத்யாவசிய சான்றிதழ் கேட்டு, தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. அரசும், 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், அத்யாவசிய சான்றிதழ் வழங்கியது. இதன்பின், மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. கல்லூரியை, மருத்துவக் கவுன்சில் ஆய்வு செய்து, சில குறைகளை சுட்டிக்காட்டியது. பின், அந்த விண்ணப்பத்தை, கல்லூரி தரப்பில் வலியுறுத்தவில்லை. 2010ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், மருத்துவக் கவுன்சிலுக்கு, மீண்டும் விண்ணப்பித்தது. புதிதாக, அத்யாவசிய சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை, என, நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "புதிதாக, அத்யாவசிய சான்றிதழ் தேவை, என, வலியுறுத்தாமல், இடங்களை அதிகரிக்கக் கோரிய, விண்ணப்பத்தை பரிசீலிக்க, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: புதிய அத்யாவசிய சான்றிதழ் அல்லது மூன்று ஆண்டு காலாவதிக்குப் பின், புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ், தாக்கல் செய்ய வேண்டும், என, இந்திய மருத்துவக் கவுன்சில், முடிவெடுத்துள்ளது. தற்போது இடங்களை அதிகப்படுத்துவது தேவைதானா, கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா, என்பதை பார்ப்பதற்காக தான், இந்தச் சான்றிதழ் கோரப்படுகிறது. மருத்துவக் கவுன்சில் முடிவானது, சட்ட விதிகளுக்கு முரணாக இல்லை. எனவே, கவுன்சில் உத்தரவில், எந்த சட்டவிரோதமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

>>>தீபாவளி முன்பணம் சொற்பம்: அரசு ஊழியர் தயக்கம்

அரசிடம் இருந்து தீபாவளி முன் பணமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்களும், போலீசாரும் தயக்கம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு, அரசு ஊழியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை மாதம் 200 ரூபாய் வீதம் 10 தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர். வழக்கம் போல் நடப்பு ஆண்டும் தீபாவளி முன்பணம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் முன்பணம் பெற தயாராக இல்லை.  தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போலீசார் 5 சதவீதம் பேர் கூட தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிக்கவில்லை. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்காமல் உள்ளனர். போலீசார் கூறியதாவது: கடந்த 1994 ம் ஆண்டு தீபாவளி முன்பணம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என அரசு உத்தரவு வெளியானது. தற்போது அனைத்து பொருட்களும், ஜவுளிகளும் விலை உயர்ந்துள்ள நிலையில் 2 ஆயிரம் ரூபாயில் குடும்பத்தில் ஒருவருக்கு கூட ஜவுளி எடுக்க வாய்ப்பில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். தீபாவளிக்கு ஒரு மாதம் சம்பளத்தையாவது முன்பணமாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம்,என்றனர்.

>>>கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகள், 3,484, பணியிடங்களை நிரப்ப, 2010ம் ஆண்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிந்து, 2011ம் ஆண்டு, ஜூலையில், 2,407 இடங்களுக்கு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களுக்கு, 2011ம் ஆண்டு, செப்டம்பரில், பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 400 பேர், பணியில் சேரவில்லை. இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: காலியிடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், புதிதாக அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. கடந்த, 8ம் தேதி, வெளியிடப்பட்ட பட்டியலில், இடம் பெற்றுள்ள, 41 பேர், முதலில் வெளியிடப்பட்ட பட்டியலிலும் இல்லை. இரண்டாவது பட்டியலிலும் இல்லை. தகுதியற்றவர்களை நியமிக்க, முயற்சிகள் நடக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு நடந்த தேர்வில், நான் கலந்து கொண்டேன். நான், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டியலில், எனக்கு பின்னால் உள்ளவர்கள், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. எனக்கு, கிராம நிர்வாக அதிகாரி, பணி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, "தகுதிப் பட்டியலில், முன்னணியில் இருந்தும், மனுதாரரை தேர்ந்தெடுக்காததற்கு, என்ன காரணம், என தெரியவில்லை" என்றார்.
அரசு தரப்பில் பதிலளிக்க, சிறப்பு அரசு பிளீடர் ராஜேஸ்வரன், "நோட்டீஸ்" பெற்றுக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், வழக்கறிஞர் நிறைமதி, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க மாட்டோம், என, உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, நீதிபதி நாகமுத்து, "ஆதிதிராவிடருக்கான பொது மற்றும் விடுபட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை, வழங்கக் கூடாது" என, உத்தரவிட்டார். விசாரணையை, 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

>>>தமிழக சூரிய சக்திக்கொள்கை நிறைகளும், குறைகளும்...

மின்சார உற்பத்தியை பெருக்க, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட, தமிழகசூரிய சக்தி கொள்கையை, மின் துறை முதலீட்டாளர்கள் வரவேற்று உள்ளனர். அதே நேரத்தில், அமலாக்க தேதிகள் உட்பட, பல கொள்கை முடிவுகள் தெளிவில்லாமல் உள்ளன. இவற்றை தெளிவுபடுத்த, தமிழக மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து, முதலீட்டாளர் களுக்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
கொள்கையின் நல்ல அம்சங்கள்
* இந்தியாவிலேயே முதல் முறையாக நிகர கணக்கீடு (நெட் மீட்டரிங்) முறை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம், வீடுகளில் நிறுவப்படும் ‹ரிய சக்தி மின் தகடுகளில் இருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தில், சொந்த தேவை போக, மீதம் உள்ளதை மின் வாரியத்திற்கு விற்றுவிடலாம்.
* வீடுகளில் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
* உயரழுத்த மின்சாரத்தை பெறும் நுகர்வோர் மற்றும் சில வகையான வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது
இது, இரு கட்டங்களாக செயல்படுத்தப் படும். டிசம்பர் 2013 வரை 3 சதவீதமும்; ஜனவரி 2014ல் இருந்து 6 சதவீதமும் கட்டாயம்.
* வரும், 2020க்குள், மாநில மின்வாரியங்கள் வாங்கும் மின்சாரத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம், குறைந்தபட்சம், 3 சதவீதம் இருக்க வேண்டும் என, தேசிய மின் கட்டண கொள்கை கூறுகிறது
தமிழகத்தில், சில மாதங்களில், 40 சதவீதம் மின்சாரம், காற்றாலைகளில் இருந்து தான் உற்பத்தியாகிறது. இதனால், தேசிய கொள்கை கட்டுப்பாடுகளை எளிதில் கடந்துவிடலாம். இதன் மூலம், தமிழகத்தில் ‹ரிய சக்தி மின்சாரம் பின்தங்கிவிடும் என, கருதி, 6 சதவீதம் கட்டுப்பாடு, சாதுர்யமாக சேர்க்கப் பட்டு உள்ளது.
* இந்த கட்டுப்பாடு,சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பவர்களுக்கு, ஆயத்த நிலை சந்தையை உருவாக்கி, பெரும் ஊக்கத்தை தரும்.
* தமிழகத்தில், 24 மாவட்டங்களில், தலா, 50 மெகாவாட் திறன் உள்ளசூரிய சக்தி மின்சார பூங்காக்கள் அமைக்கப் படும். இது தவிர, பெரிய அளவிலான மின் பூங்காக்களும் அமைக்கப் படும். இதன் மூலம், சூரிய மின் திட்டங்கள் அமைப்பதற்கான மூலதன செலவும், பராமரிப்பு செலவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
* தொகுப்புடன் இணைந்த உற்பத்தியாளர்கள், 240 வோல்ட் அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்ப வசதி செய்யப் பட்டு உள்ளது; இது, வீடுகளில் நிறுவப்படும் திட்டங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
* அதே போல், 100 கிலோவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்பவர்களும், 11 கே.வி., அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்பலாம். பெரும்பாலான கிராமப்புறங்களில், 11 கே.வி., வசதி தான் உள்ளது. இந்த கொள்கை முடிவு, திட்டங்களை பரவலாக செயல்படுத்த வழிவகை செய்கிறது.
* இதுவே, குஜராத்தில், 66 கே.வி., ஆந்திராவில், 33 கே.வி., என, நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. அவற்றை ஒப்பிடுகையில், தமிழகத்தின் கொள்கை முற்போக்காகவே உள்ளது.
கொள்கையின் குழப்பமான அம்சங்கள்
* கொள்கை எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது, குறிப்பிடப் படவில்லை.* அதே போல், கொள்கையின் ஆளுமை எந்த ஆண்டு வரை இருக்கும் என்பதும் குறிப்பிடப் படவில்லை. இதனால், அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது, கொள்கையில் நிலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டால், முதலீடு செய்ய முன்வர தயங்குவர். குஜராத், ஆந்திரா மாநிலங்களின் ‹ரிய சக்தி கொள்கையில் இது தெளிவாக குறிப்பிடப் பட்டு உள்ளது.*சூரிய மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், என்ன விலையில் மின்சாரத்தை வாங்கும் என்பது குறிப்பிடப் படவில்லை. இது கொள்கையில் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணயம் முடிவு செய்யும் ஒன்றாக இருந்தால், முதலீட்டாளர்கள் தயங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
* நிகர கணக்கீட்டு முறை, வீடுகள் மற்றும் அலுவலக கட்டடங்களில்சூரிய மின் உற்பத்தி வசதி களை நிறுவுபவர்களுக்கு தான் பெரும்பாலும் பயன்படும் என்பதால், அது குறித்த மொத்த விதிக ளும் வெளிப்படையாக அறிவிக்கப் பட வேண்டும். தற்போது, இது எப்படி செயல்படும் என்பது தெளிவாக இல்லை.
* உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையில், உற்பத்தியாகும் அனைத்து, "யூனிட்'டுகளுக்கும் ஊக்க தொகை உண்டா அல்லது தேவைக்கு மிகுதியான,"யூனிட்'டுகளுக்கு மட்டும் தான் ஊக்கத் தொகை யா என்பது தெளிவாக இல்லை
* இத்தகைய உற்பத்தியாளர்களுக்கு, மூலதன மானியம் கிடைக்குமா என்பதும் குறிப்பிடப் படவில்லை. "யூனிட்'வாரியான ஊக்கத்தொகை இருந்தாலும், இத்தகைய வசதியை நிறுவுவதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால், மூலதன ஊக்கத்தொகை இருந்தால் தான், தனிநபர்கள் இதை செயல்படுத்த முன்வருவர்.
* கட்டாய சூரிய சக்தி மின்சார பயன்பாடு, எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது குறிப் பிடப் படவில்லை.
தெளிவுபடுத்த கூட்டம் தேவை:
முடிவெடுக்கும் குழுவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை'
டி.பி. குமரேசன்
சூரிய சக்திக்கான புதிய கொள்கை, ஒரு முன்னோடியான கொள்கை என்பதில் சந்தேகம் இல்லை. இதில், மூன்று ஆண்டுகளில், உற்பத்தியை 3,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
ஒரு மெகாவாட், சுமார் பத்து கோடி என்ற முறையில், 3,000 ஆயிரம் மெகாவாட்டிற்கு, சுமார், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். சூரிய சக்தி உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தொடங்குவதற்கு மற்றும் வீடுகளில் சூரிய சக்தி மேற்கூரை அமைப்புக்கு, சுமார், 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.
* தமிழக அரசு அமைத்திருக்கும், அதிகாரமளிக்கப் பட்ட குழுவில், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிபுணர்கள் இடம்பெறவில்லை. இந்த தொழிலில் அனுபவம் உள்ள, தொழில் முனைவோர்களும் பங்கு பெற வேண்டும். அப்போதுதான், இந்த கொள்கையை செயல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை முறைப்படுத்தி, வெற்றி காண முடியும்.
* சில வகையாவ நுகர்வோருக்கு, ஆறு சதவீதம், சூரிய சக்தி மின்சாரம் வாங்குவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கான விலை நிர்ணயம் எதையும் தெளிவாக குறிப்பிடப் படவில்லை. * விடுகளில் உற்பத்தியாகும், சூரிய சக்தி மின்சாரத்தை மின் தொகுப்புக்கு வழங்கும்போது,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து, கிடைக்க வேண்டிய மொத்த தொகை எவ்வளவு என்பதை தெளிவுப் படுத்தவில்லை.
* முந்தைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, "டெடா' மூலம் கட்டணம் வசூலிக்கப் பட்டது. அதே போல், தற்போது, கட்டணம் எவ்வளவு என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.* சோலார் பூங்கா அமைக்கும் போது, அமைப்பவர்களுக்கான முன் அனுபவம், என்ன என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.
டி.பி.குமரேசன், செஞ்சுரி கன்சல்டிங் குரூப்பின், துணை தலைவர். இந்த நிறுவனம் புதுப்பிக்கத்க்க எரிசக்தி மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.
ஐந்து சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்'
சூரிய சக்தி மூலம், 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், தமிழக அரசின், புதிய கொள்கை வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முன்னரே செயல்படுத்தி இருந்தால், மின் பற்றாக்குறை நெருக்கடி நிலை ஏற்பட்டு இருக்காது.
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோர், 6 சதவீத சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது, ஒரு நீண்ட கால கொள்கை. இது போன்ற திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
அதே நேரத்தில், குறைந்த அழுத்த மின்சாரத்தைபயன்படுத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சூரிய சக்தியை உற்பத்தி செய்வதில் அதிக முதலீடு செய்வது கடினம்.
சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்படும் அதிக செலவை குறைப்பதற்கான எவ்வித திட்டத்தையும், அரசு அறிவிக்கவில்லை. இதை சரி செய்ய, விற்பனை வரியை தளர்த்தி, வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி இருக்கலாம்.சாதாரணமாக, வீடுகளில், 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த, 2.50 லட்சம் ரூபாய் செலவாகும்.
இதில், 75 ஆயிரம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக அளிக்கிறது; இதற்கு விற்பனை வரி தனி.
ஒரு நாளுக்கு, 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பில், 5 யூனிட் வரை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை, புதிய திட்டம் அளிக்கிறது.அதன்படி, 1 யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம், ஒரு நாளுக்கு, 10 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும். தொடர்ச்சியாக, 300 நாட்கள் உற்பத்தி செய்தால், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக கிடைக்கும்.
மாநில அரசு, இதற்கான மூலதன செலவிற்கு, எவ்வித மானிய தொகையையும் அறிவிக்க வில்லை; அதிக முதலீட்டிற்கு, இந்த ஊக்கத் தொகை மிகவும் சொற்பமே. அதனால், இது எப்படி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும், என்பது சந்தேகமாக உள்ளது. சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான முதலீட்டு தொகை சுமையைக் குறைக்க, வங்கி அல்லது "சிட்கோ' மூலம் கடன் பெறும் வசதியை ஏற்படுத்தி, 5 சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்.
புதிய கொள்கை நீண்ட கால திட்டம். நாள்தோறும் மின் தடையால், அவதிப்படும் பாமர மக்களுக்கு, இத்திட்டம் ஒரு அவசர தீர்வாகாது. தற்போது நிலவும், 14 மணி நேர மின் தடை மற்றும் 3,500 மெகாவாட் பற்றாக்குறைக்கு, இப்புதிய கொள்கை எப்படி அவசர தீர்வாகும் என்பது சந்தேகமாக உள்ளது. ரகுநாதன், சோல்கர் சோலார் தொழில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...