கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர்

பள்ளிகளில் செயல்படும் சத்துணவு திட்டத்தில், பல புதிய உணவுகளை, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வழங்குவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: சோதனை முறையின் அடிப்படையில், புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில்,
திங்கட்கிழமை - காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டை
செவ்வாய்க்கிழமை - கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா
புதன்கிழமை - தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை
வியாழக்கிழமை - சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை
வெள்ளிக்கிழமை - கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய்ப் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு.

மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில்,
திங்கட்கிழமை - சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா.
செவ்வாய்க்கிழமை - மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை
புதன்கிழமை - புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா
வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல்
வெள்ளிக்கிழமை - சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல்.
ஆகிய அட்டவணைகளில் உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும். புதிய திட்டத்தின்படி,
திங்கட்கிழமை - தக்காளி சாதம், வேகவைத்த முட்டை
செவ்வாய்க்கிழமை - கலவை சாதம் மற்றும் சுண்டல்
புதன்கிழமை - காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை
வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை
வெள்ளிக்கிழமை - பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு
சனி மற்றும் ஞாயிறு - கலவை சாதம்.
மேற்கூறிய புதிய உணவுவகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வட்டாரத்தில், இந்த புதிய உணவுமுறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின்னர், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

>>>அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில், விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களை காக்கும் வகையில், வீடு கட்டும் முன்பணம், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெண் ஊழியர்களுக்கான, மகப்பேறு விடுப்பு, மூன்றிலிருந்து, ஆறு மாதமாகவும், அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவக் காப்பிட்டு திட்டம் உள்ளிட்ட, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த, 1996ல், முதல்வராக இருந்த போது, 25 ஆண்டுகள், அப்பழுக்கற்ற பணியை முடித்த, அரசு ஊழியர்களுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள, இந்திரா விகாஸ் பத்திரத்தை வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வந்தது. பின், இந்திரா விகாஸ் பத்திரத்திற்கு பதில், கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு டிச., முதல், கிசான் விகாஸ் பத்திரத்தை, மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 500 ரூபாயை, 2,000 ரூபாயாக உயர்த்தியும், அதை ரொக்கமாக வழங்குவதோடு, பணியை பாராட்டி, அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை, 5,000 ரூபாயாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

>>>இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு

இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.
தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.
இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.
முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>தலைமை இன்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,095 பள்ளிகள், செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1.50 லட்சம் மாணவர்கள், பயின்று வருகின்றனர். இதில், நூற்றுக்கும் குறைவான மேல்நிலைப் பள்ளிகளே செயல்படுகிறது. இம்மேல்நிலைப் பள்ளிகளில், 24 தலைமை ஆசிரியர்கள், 97 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம், குறையும் அபாயத்தில் உள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பான்மையான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், கவுரவ ஆசிரியர்களை நியமித்திருந்திருக்கலாம். அதுகுறித்தும், எந்த அக்கறையும் காட்டவில்லை. இதனால், நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது.
நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளியில் பயிலும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆண்டு கணக்கில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பயிலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி பிரிவு உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, "காலி பணியிடங்களில், ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பின், காலி பணியிடங்களை நிரப்பி விடுவோம்" என்றனர்.

>>>மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் ஒரு பதவியில் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணி புரிந்தது சாதாரணமான ஒன்றாக இருந்தது.
உலக அளவில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) துறையின் வளர்ச்சியும், இதன் உடன் விளைவாக ஐ.டி.இ.எஸ்., எனப்படும் ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ் துறைகளின் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு சந்தையின் ஒட்டு மொத்த தன்மையையே புரட்டிப் போட்டுள்ளது எனலாம்.
அட்ரிஷன், கட்டாய விடுவிப்பு, பணி நீக்கம் போன்ற தாக்குதல்கள்தான் இன்றைய நவீன வேலை வாய்ப்பு சந்தையில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக மாறி உள்ளன. இவற்றில் கட்டாயப் பணி நீக்கத்திற்கு உள்ளாகும் நபர்களின் மன ரீதியாக ஏற்படும் அழுத்தம் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.
சுயமாக பல்வேறு முயற்சிகளைச் செய்தால் ஒழிய இந்த நிலையிலிருந்து மீள்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. எனவே வேலை இல்லாதோர் மற்றும் வேலை இழந்தோருக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய நான்கு உத்திகளை மென்எக்ஸ்எஸ்பி இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் சாராம்சத்தை உங்களுக்காகத் தருகிறோம்.

>>>ஆங்கிலத்தில் அசத்த டிப்ஸ்...

இன்றைய காலத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவற்றில் திறமையாக செயல்பட, ஆங்கிலம் அவசியம். ஆங்கிலத்தில் பேசும் போது தன்னம்பிக்கை மிளிரும். பிற மொழி பேசும் ஒருவரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் அத்தியாவசியம். பள்ளி, கல்லுõரிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் பேச, எழுத தெரிந்திருந்தால், வேலை உங்களை தேடி வரும் என்பதில் ஐயமில்லை. வேலையில் திறமை இருந்தும், ஆங்கில அறிவு இல்லாததால் குறைந்த சம்பளத்தில் ஏதோ ஒரு வேலை செய்யும் சூழலும் ஏற்படுகிறது. ஆங்கிலம் பேசுவதற்கு சில டிப்ஸ்களை தவறாது கடைபிடித்தால் நீங்கள் ஆங்கிலத்தில் அசத்தலாம்.
* எந்த மொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
* ஆங்கிலத்தை நம்மால் படிக்க முடியாது என்ற எதிர்மறையான எண்ணங்களை கைவிடுங்கள்.
* ஆங்கில நாளிதழ், புத்தகங்கள் போன்றவற்றை தினமும் வாசியுங்கள்.
* ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக எழுத பழகுங்கள்.
* படிக்கும் போது தெரியாத, கடினமான வார்த்தைகளின் அர்த்தத்தை, அகராதியில் பாருங்கள்.
* தவறாக பேசினாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்ற நம்பிக்கையுடன் பேசுங்கள்.
* ஆங்கில டி.வி., செய்திகள், படங்கள் போன்றவற்றை தினமும் பாருங்கள்.
* ஆங்கிலத்தில் புலமை பெற்றவரிடம், ஆங்கில உச்சரிப்பை கற்றுக்கொள்ளுங்கள்.

>>>கேட் தேர்வில் யார் அதிகம்?

இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு அக்., 11ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 6 வரை நடக்கிறது. தேர்வு முடிவு 2013 ஜன., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள 13 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்கள், 100 தனியார் கல்வி நிறுவனங்களில், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு, 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 4.2 சதவீதம் அதிகம். விண்ணப்பித்த மாணவிகளின் எண்ணிக்கையும் 8.6 சதவீதம் அதிகரித்தது.
விண்ணப்பித்துள்ளவர்களில் 67.6 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 31,040 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் இருந்து 25,270 பேரும், டில்லியில் இருந்து 21,507 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
டாப்  5 நகரங்கள்
* டில்லி  21,224 பேர்
* பெங்களூரு 19,553 பேர்
* மும்பை  16,895 பேர்
* ஐதராபாத்  16,138 பேர்
* புனே  13,368 பேர்
தேர்வு முடிவுகளில், எந்தெந்த மாநிலம் எந்த இடத்தை பெறுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...