கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முகாமில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம்.

>>>குரூப்-2 மறுதேர்வு முடிவு எப்போது... நட்ராஜ் பேட்டி

தமிழகம் முழுவதும், குரூப்-2 மறுதேர்வு, நடந்தது. சென்னை, எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பார்வையிட்டார்.
பின், அவர் கூறியதாவது: ஓரிரு நாளில் இணையதளத்தில், தேர்விற்கான, கீ ஆன்சர் வெளியிடப்படும். அதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஒரு வாரத்திற்குள் தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும். எழும் ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு ஆய்வு செய்து, மீண்டும், கீ ஆன்சர் வெளியிடப்படும்.
மறுதேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, 45 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன்பின், அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும். வரும் காலங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும், அனைத்து தேர்வுகளையும், கணினி மூலம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

>>>குரூப்-2 மறுதேர்வு: 48 சதவீதம் பேர் ஆப்சென்ட்

தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதால், ரத்து செய்யப்பட்ட, குரூப் - 2 தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்காக, மொத்தம், 6.5 லட்சம்பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.73 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
கடந்த முறை தேர்வை நன்றாக எழுதியிருந்தும், வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக, நேற்றைய தேர்வை பெரும்பாலானோர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார் பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளில், காலியாக உள்ள, 3,687 பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 12ம் தேதி, குரூப்-2 தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய, இந்த தேர்வை, தமிழகம் முழுவதும், 6.5 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு நடந்த அன்றே, வினாத்தாள், ஈரோட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு, நேற்று நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும், குரூப்-2 மறுதேர்வு,நேற்று நடந்தது.காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, குரூப்-2 தேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல் 5:30 மணி வரை, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் பணிக்கான, சைவம், வைணவம் பாடத் தேர்வும், மாநிலம் முழுவதும், 3,456 தேர்வுக் கூடங்களில் நடந்தது.
தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, தேர்வு மையங்கள், வீடியோ காமிரா, வெப் கேமிரா  மூலம் கண்காணிக்கப்பட்டது. பிரச்னைக்குரிய மையங்களில், வெப் கேமிரா பொருத்தப்பட்டு, தேர்வு எழுதியவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். சென்னையில் பெரும்பாலான தேர்வு கூடங்கள், வெறிச்சோடி காணப்பட்டன.
மற்ற மாவட்டங்களிலும், இதே நிலை காணப்பட்டது. மாநிலம் முழுவதும் நடந்த மறுதேர்வில், 41.62 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என,டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 6.5 லட்சம் பேரில், 2.73 லட்சம்பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில், 48 சதவீதம் பேர், தேர்வை புறக்கணித்தனர். குரூப்-2 தேர்வில்,  2.73 லட்சம் பேர் பங்கேற்காமல் புறக்கணித்தது, தேர்வாணைய அதிகாரிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆகஸ்ட் மாதம் நடந்த, குரூப்-2 தேர்வு எழுதியவர்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது: ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வுக்காக, கடினமாக படித்து தேர்வு எழுதினோம். யாரோ சிலர் செய்த தவறால், வினாத்தாள் வெளியானது. இதற்காக,தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஒருமுறை, படித்து தேர்வை எதிர்கொள்வதற்கு, மனதளவில் நாங்கள் தயாராகவில்லை.
அதனால் ஏற்பட்ட விரக்தியால், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தும், பங்கேற்காமல் புறக்கணித்தோம். இனிமேலாவது, இதுபோன்ற தவறுகளுக்கு இடமளிக்காமல், ஆணையம் செயல்பட வேண்டும். அப்போதுதான்,  இளைஞர்கள் ஆர்வத்தோடு தேர்வில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தேர்வில் பங்கேற்றவர்கள், பொது தமிழ் கேள்விகள் எளிதாகவும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

>>>இன்று : நவ.7 - சர். சி.வி.ராமன் பிறந்தநாள்

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன் அறிவாற்றலாலும், விடாது செய்த ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் உலகின் உண்மைகளைக் கண்டுபிடித்தவரின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

அந்தக் கல்லூரியின் வகுப்பறையில் நுழைந்த பேராசிரியர், மாணவர்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பையனும் அமர்ந்து இருப்பதைக் கண்டார். ஏதோ தெரியாமல் அமர்ந்திருக்கிறான் என எண்ணிய அவர், ''நீ என்ன இந்தக் கல்லூரி மாணவனா?'' என்று கேட்டார். அதற்கு அவன் பணிவாக, ''ஆம் ஐயா!'' என்று சொன்னான். ஆச்சர்யம் அடைந்த பேராசிரியர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அவன் ''ராமன்'' என்றான்.

ஆமாம்! அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.

இவரது பெற்றோர் கணித மேதையும் ஆசிரியருமான சந்திரசேகரன் மற்றும் பார்வதி அம்மையார். சந்திரசேகர வெங்கட்ராமன் என்பதன் சுருக்கமே சி.வி.ராமன். இவர் பி.ஏ. இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்று தேர்வானார். கொல்கத்தாவில் இந்திய நிதித் துறையில் உதவி கணக்குப் பொது மேலாளராக 1907- ல் பதவி ஏற்றார். அப்போதைய ரங்கூன் நகருக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கல்கத்தாவுக்குத் திரும்பினார்.

அந்தச் சமயத்தில் டிராம் வண்டியில் பயணம் செய்தபோது ஒரு கட்டடத்தில் 'விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார். டிராமில் இருந்து குதித்தார். கட்டடத்தினுள் நுழைந்தார். அங்கே நிறைய அறிவியல் சாதனங்கள், பெரிய ஆராய்ச்சி அறைகள் இருப்பதைக் கண்டார். உடனே அங்கேயே தங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை விட்டு விட்டு, அறிவியல் ஆராய்ச் சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார்.

1921-ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலகப் பல்கலைக் கழகங்களின் சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்ற கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

தனது ஒளிச் சிதறல் பற்றிய அறிக்கையைத் தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928-ல் கண்டுபிடித்தார். இதுவே, ராமன் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ராமன். அதனால், அவர் நவம்பர் மாதம் நடக்கப்போகும் விழாவுக்கு ஜூன் மாதத்திலேயே டிக்கெட் பதிவுசெய்து விட்டார். அவரது கண்டுபிடிப்பின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை. நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். அதுவும் தவிர, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு அப்போதுதான் முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு நமது அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் முயற்சி மூலம் ஜெயிக்கலாம். ஒரு கடல் பயணத்தைக் கூட எப்படி அறிவியல் ஆர்வத்தின் மூலம் குறிக்கோளை அடைவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை மூலம் காப்பி அடிக்கலாம் வாங்க!

>>>நவம்பர் 07 [November 07]....

  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
  • போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
  • இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
  • உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.(1665)
  • உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)

>>>நவம்பர் 06 [November 06]....

  • ஜேம்ஸ் நெய்ஸ்மித் - கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் பிறந்ததினம் (1861)
  • டொமினிக்கன் குடியரசு - அரசியலமைப்பு நாள் (1844)
  • தஜிகிஸ்தான் - அரசியலமைப்பு நாள் (1994) 
  • பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.(1759)
  • ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.(1860)
  • புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது. (1944)

>>>நவம்பர் 05 [November 05]....

  • முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான் (1556)
  • நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. (1945)
  • பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார். (1996)
  • இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. (1999)
  • சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிறந்ததினம் (1870)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...