கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>உயர்கிறது ஐஐடி கல்விக் கட்டணம்

ஐஐடி -களில் இளநிலைப் படிப்புகளுக்கான வருடாந்திர கல்விக் கட்டணம், அடுத்தாண்டு முதல், ரூ.90000 என்ற அளவில் அதிகரிக்கவுள்ளது. ஐஐடி இயக்குநர்கள் அடங்கிய கமிட்டி இந்தக் கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய நிலையில், வருடாந்திர கல்விக் கட்டணமாக ரூ.50000 வசூலிக்கப்பட்டு வருகிறது. இது, அடுத்தாண்டு முதல் 80% அதிகரிக்கவுள்ளது.
இதுதொடர்பான இறுதி முடிவு, ஐஐடி -களின் உச்சபட்ச அதிகாரமுடைய அமைப்பான முழு ஐஐடி கவுன்சிலால், ஜனவரி 7ம் தேதி எடுக்கப்படவுள்ளது. இக்குழுவில், அரசின் பிரதிநிதிகளும் உண்டு.
நவம்பர் 5ம் தேதியன்று, ஐஐடி கவுன்சிலின் ஸ்டான்டிங் கமிட்டி உறுப்பினர்கள், கடந்த 1 வருடமாக நிலுவையில் இருக்கும் கட்டண உயர்வு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்க மும்பையில் கூடினார்கள். இந்த கமிட்டியானது, பழைய 7 ஐஐடி -களின் இயக்குநர்களைக் கொண்டது.
அதேசமயம், இந்த ரூ.40,000 கட்டண உயர்வானது, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடன் திட்டம்
ககோட்கர் கமிட்டியின் பரிந்துரைகளை, வரும் 2013ம் ஆண்டு முதல் அமல்படுத்த, ஐஐடி கவுன்சில், ஏற்கனவே, கொள்கையளவில் அனுமதியளித்திருந்தது.(ஐஐடி ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.2 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தி, அதன்மூலம் ஐஐடி -கள் நிதிக்காக அரசினை நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று ககோட்கர் கமிட்டி பரிந்துரைத்திருந்தது).
இந்தப் புதிய கூடுதல் கட்டண உயர்வை சமாளிக்க இயலாத மாணவர்கள், படிப்பு முடிந்து, பணிவாய்ப்பைப் பெற்ற பிறகு, அத்தொகையை செலுத்தும் வண்ணம், கடன் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐஐடி -களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணமானது, பல தனியார் பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தை விட மிகமிக குறைவானது என்பது மட்டுமின்றி, ஐஐஎம் போன்ற இதர புகழ்பெற்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களையும் விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

>>>சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு ரூ.50 லட்சம்

சிறுபான்மை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, அடிப்படை கட்டடமைப்பு வளர்ச்சி திட்டத்தில் (ஐ.டி.எம்.ஐ.,), மத்திய அரசு, 50 லட்சம் நிதி வழங்குகிறது. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, புதிய திட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, முதன்மைக் கல்வி அலுவலர், பிற்பட்ட, சிறுபான்மை நல அலுவலர், சிறுபான்மை உறுப்பினர்கள் இருவர், தொடக்கக்கல்வி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து, நிதி வழங்க பரிந்துரைக்கும். இந்நிதியை பெற, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மானியக்குழுவின் பரிந்துரைகள், தொடக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின், நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

>>>12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: 1.40 லட்சம் பேருக்கு வேலை

தமிழக தொழில்துறை வரலாற்றில், முதல் முறையாக, 12 நிறுவனங்கள், 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் ஒரே நாளில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதல்வர்  தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும் தமிழக அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் பேசியதாவது: நாட்டில் பொருளாதார தாராளமய கொள்கையை, அமல் செய்த பின், தமிழகம் தான், முதன் முதலில், 1992ல் பொருளாதார கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு, வலுவான அடித்தளம் போடப்பட்டது.  இன்று, ஆட்டோமொபைல் தொழிலில், உலகின் முக்கிய கேந்திரமாக, தமிழகம் விளங்க இதுவே காரணம். 2001ம் ஆண்டு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த போது, தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினோம். 2003ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கை மூலம், தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், பெரும் புரட்சியே ஏற்பட்டது. நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கின. இன்று, உலகின் மொபைல் போன் உற்பத்தியில், சென்னை முன்னணியில் உள்ளது. இதற்கு, 1992 மற்றும் 2003ல் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கைகளே காரணம். தொழில் கொள்கை 2012 விரைவில் வெளியிடப்பட உள்ளது. கடந்த, 18 மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 706 கோடி ரூபாய் அன்னிய முதலீடு வந்துள்ளது. அன்னிய முதலீடு என்பது, இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதை கவனமாக கையாள வேண்டும். ஆனால், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளதை தமிழக அரசு ஏற்கவில்லை.
சூரிய சக்தி உற்பத்தி குறித்த கொள்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவையெல்லாம் தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல் இடத்துக்கு கொண்டு செல்லும்.

>>>அரையாண்டு தேர்வுக்கு இடையே விடுமுறை: மாணவர்கள் பரிதவிப்பு

அரையாண்டுத் தேர்வு அட்டவணையில், தேர்வின் இடையில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாமலும், தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியாத தர்மசங்கடமான சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். பின், 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையின் படி, 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர்  19ம் தேதி துவங்கி, ஜனவரி 7ம் தேதியிலும், பிளஸ் 2 தேர்வு, டிசம்பர் 19ம் தேதி துவங்கி, ஜனவரி 10ம் தேதியும் நிறைவடைகின்றன. இதில், மொழித் தாள்கள் மட்டும் தொடர்ச்சியாக, டிசம்பர் 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வு, 10 நாட்களுக்குப் பின், ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. பொதுவாக, தேர்வுகள் தொடர்ச்சியாகவோ, ஓரிரு நாட்கள் இடைவெளியிலோ நடக்கும். இம்முறை, 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறையையும் நிம்மதியாக அனுபவிக்க முடியாமல், தேர்வுக்கும் முழு மனதுடன் தயாராக முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுவதன் முக்கிய நோக்கமே, கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து படித்த பாடங்களை, ஆண்டு இறுதித் தேர்வுக்கு முன், மீண்டும் ஒருமுறை மனப்பாடம் செய்து, எழுதி பார்ப்பதற்காக தான். ஒரு தேர்வு முடிந்து, அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு முன், மாணவர்கள் உடல், மன ரீதியாக தயார்படுத்திக் கொள்வதற்காக, விடுமுறை அளிக்கப் படுகிறது. இந்த ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, விடுமுறை விடுவதற்கு பதிலாக, இடையிலேயே 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதோடு, 10 நாட்களும் அவர்கள் தேர்வுக்கு பயனுள்ள முறையில் தயார் ஆவார்களா என்பதும் சந்தேகமே. இது போன்ற செயல்களால் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பாடச் சுமை அதிகரித்து உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால், விடுமுறை நாட்களை குறைக்கும் விதமாக, இம்முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றார்.

>>>பல்கலை., வாகனங்களை ஜப்தி செய்ய மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

நில உரிமையாளர்களுக்கு, கூடுதல் இழப்பீடு தொகை வழங்கும் விவகாரத்தில், பாரதியார் பல்கலைக்கழக வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாணவர்கள், பொதுமக்களின் எதிர்ப்பால், ஜப்தி செய்ய சென்றவர்கள், நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பினர்.
கடந்த, 1982ம் ஆண்டு, கோவையில் பாரதியார் பல்கலை அமைக்க, தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நிலம் பெறப்பட்டது. ஆனால், நில உரிமையாளர்களுக்கு, குறைந்தளவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் தொகை வழங்கக் கோரி வலியுறுத்திய போதும், நிர்வாகம் கண்டுகொள்ளாததால், வடவள்ளி, மருதாபுரத்தைச் சேர்ந்த ரங்கப்பமுதலியார் மற்றும் இவரது மகன்கள் குருகேசன், 71, மாரியப்பன், 65, ஆகியோர், 2009ம் ஆண்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜூலை, 27ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு, 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பல்கலை நிர்வாகத்திடம் கோர்ட் உத்தரவு சமர்பிக்கப்பட்ட நிலையிலும், உத்தரவை அமல்படுத்தாததால், வழக்கு தொடுத்தவர்கள், மீண்டும் கோர்ட்டில் மனு செய்தனர். விசாரணையில், பல்கலைக்குச் சொந்தமான, 11 வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி, வழக்கறிஞர்கள் விஜயகுமார், திருஞான சம்பந்தம், ஜப்தி அலுவலர்கள் மற்றும் வழக்குத் தொடர்ந்தவர்கள், பாரதியார் பல்கலைக்கு நேற்று சென்று, "வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்" என்ற கோர்ட் உத்தரவைக் காட்டி நடவடிக்கைக்கு முயன்றனர். ஆனால், பல்கலை மாணவர்களும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து, வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜப்தி செய்ய சென்றவர்கள், "கோர்ட்டில் முறையிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தெரிவித்து, நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

>>>எஸ்.சி., - எஸ்.டி., சான்று: போலியாக பெற்றால் தண்டனை நிச்சயம்

பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும், ஜாதி சான்றிதழ்களை சரிபார்க்க, மண்டல அலுவலகங்களை, தமிழக அரசு அமைக்கிறது. வருவாய் துறையினரிடமிருந்த, எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ்கள் வழங்கும் பணி, இதன் மூலம் காவல் துறைக்கு மாற்றப்படுகிறது. போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்காக, இந்நடவடிக்கை" என்று, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மண்டலங்கள்:எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை தலைமை இடங்களாக கொண்டு, மண்டல அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும், ஒரு முதுநிலை, டி.எஸ்.பி., தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்படுகின்றனர். மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கப்படும், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள், மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.மண்டல அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், விண்ணப்பதாரரின் முகவரிக்கு சென்று, விவரங்களை சேகரித்து, விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை, மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். இப்பணிகளுக்கு நியமிக்கப்படும் போலீசார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் கீழ் பணிபுரிவர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் குறித்து, ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை அறிய, மாநில அளவில் உள்ள கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. இதற்கு, நீண்ட காலமாவதோடு, விண்ணப்பதாரரின் விவரங்களை முழுமையாகவும் கண்டறிய முடிவதில்லை. இதற்காக, சுப்ரீம் கோர்ட் அளித்து உள்ள வழிகாட்டுதல்கள் படி, மண்டல அளவில் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இம்மையங்களில் நியமிக்கப்படுவோருக்கு, எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர் பற்றிய முழுவிரங்களை அறிந்து கொள்ள, முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், உரிய சான்றிதழ் வழங்குவது எளிதாகும். இப்புதிய நடைமுறை மூலம், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ்கள் வழங்க ஏற்கனவே இருக்கும் நடைமுறை கைவிடப்படும். புதிய முறையில், சான்றிதழ்கள் பெற, குறைந்தது ஒரு மாதமாகும். இதனால், ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, தற்காலிக சான்றிதழ் முதலில் வழங்கப்படும். மண்டல அலுவலகம்;பரிந்துரையில் அளிக்கப்படும் சான்றிதழ்களே இறுதியானது. தண்டனை:சான்றிதழ் கோருபவர் பொய்யான தகவல்களை அளித்தால், அவர் இந்திய தண்டனை சட்டத்தில் தண்டிக்கப்படவும், மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர் உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படும். மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தவும், போலீசாரை நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...