கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நிதிஒதுக்கீடு இல்லை: அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் அவதி

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, விசிட் வரும் குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள் மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின் தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட, அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத் துறையில் இருந்து ஆய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன. சேலம் மாவட்டத்தில், 21 வட்டார வளமையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மேற்பார்வையாளர்களாக உள்ளவர்களிடமே, இக்குழுவினை அழைத்து செல்லும் செலவுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்படைத்து விடுவதால், மேற்பார்வையாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த மாதத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமையிலான ஆய்வுக்கு, அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு நடத்தியது. நான்கு பேர் வரை அதிலும், பெண்களும் இருப்பதால், கார் மூலமாகவே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை செலவானது. இதில் திட்ட நிதியிலும் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதை செய்ய வேண்டிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களோ, தங்களுக்கு சம்பந்தம் இல்லை என, ஒதுங்கி கொள்கின்றனர். இதனால் கடந்த மாதமே, சொந்த பணத்தை செலவு செய்தோம். தற்போது அன்னை தெரஸா பல்கலையில் இருந்து, ஆய்வுக்குழு அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறது. இதன் செலவையும் வழக்கம் போல, மேற்பார்வையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும், 3,000 ரூபாய் வரை மேற்பார்வையாளர்கள் தங்களது சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

>>>குரூப்-2 காலி பணியிடம்: 2ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

குரூப்-2 பணியிடங்களில், நிரம்பாமல் உள்ள, 664 காலி இடங்களை நிரப்ப, இம்மாதம், 10, 12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. குரூப்-2 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர். மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு தேர்வாணைய செயலர் அறிவித்துள்ளார்.

>>>டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு: பங்கேற்காதவருக்கு வாய்ப்பு

டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாவட்ட தலைமை இடங்களில், கடந்த மாதம், 31ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடும் மழை காரணமாக, நீண்ட தொலைவில் இருந்த தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பது குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், நேரடியாக, டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம். அவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை" என, தெரிவித்துள்ளன.

>>>உலகளவில் ஆபத்தான தொழிலில் 11.5 கோடி குழந்தைகள்

"உலக அளவில் ஆபத்தான தொழிலில் ஈடுபட்டுள்ள, 11.5 கோடி குழந்தை தொழிலாளர்களில் ஆண்டு தோறும், 2,200 குழந்தைகள் உயிர் இழக்கின்றனர்" என, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சூசம்மா வர்கீஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் கும்மிடிப்பூண்டி, "சிப்காட்&' உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில், ஆபத்தான தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை முழுமையாக ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்சாலை பூங்கா வளாகத்தில் நடந்த கூட்டத்தில், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சூசம்மா வர்கீஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: உலகளவில், 21.50 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில், 11.50 கோடி குழந்தை தொழிலாளர்கள், பட்டாசு, ரசாயனம், சாயப்பட்டறை உள்ளிட்ட ஆபத்தான தொழிற்சாலை வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 2,200 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். படிப்பின்மையும், வறுமையுமே இதற்கு முக்கிய காரணம். இந்த முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் மட்டுமின்றி, அதன் தொடர்புடைய சார்பு நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் முறை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி வழங்க, அரசுடன் தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

>>>ஐகோர்ட் உத்தரவுப்படி 200 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம்

ஐகோர்ட் உத்தரவுப்படி, கட்டண நிர்ணயக் குழு, மீதமுள்ள, 200 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 400 தனியார் பள்ளிகள், புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.  இந்த வழக்கில், சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு, டிசம்பர் மாதத்திற்குள், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, 400 பள்ளி நிர்வாகிகளுக்கும், கட்டண நிர்ணயக் குழு அழைப்பு விடுத்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, அவர்களிடம் கருத்து கேட்டது. இதன்பின், முதல் கட்டமாக, நவம்பரில், 200 பள்ளிகளுக்கான புதிய கட்டணத்தை, குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள, 200 பள்ளிகளுக்கான கட்டணத்தை, நேற்று வெளியிட்டது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டுகளுக்கும், தனித்தனியே, வகுப்புகள் வாரியாக, கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கட்டண பட்டியலில், 6, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று பள்ளிகளுக்கும், தேனி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு பள்ளிக்கும், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

>>>பி.டி.ஏ., கட்டணம்: வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவர்கள்

அரசு மேல்நிலை பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) சார்பில், ஆறு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும், தேர்வு வினாத்தாள் கட்டணமாகவும், மாணவர் ஒருவருக்கு, ஆண்டுக்கு, 265 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், எட்டாம் வகுப்பு மலையாள பிரிவில், 14 மாணவியர் மற்றும் ஏழு மாணவர்கள், இந்த கட்டணத்தை செலுத்தவில்லை. நவ., 8ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 21 மாணவர்களும் நேற்று வரை தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து, 21 மாணவர்களையும், நேற்று காலை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை; வகுப்புக்கு வெளியே அவர்கள் நிறுத்தப்பட்டனர். தகவலறிந்த பெற்றோர், ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; கல்வித்துறை, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்க உத்தரவிட்டதை அடுத்து, பெற்றோர் திரும்பி சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாமுலேசன் கூறும் போது, "பி.டி.ஏ., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 265 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலர், பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், கட்டணத்தை செலுத்தாமல் பிரச்னை செய்கின்றனர். பி.டி.ஏ., கூட்டம் நடத்தி, இதற்கு தீர்வு காணப்படும்" என்றார்.

>>>விமானத்தை பள்ளியாக மாற்றிய ஆசிரியர்

ஜார்ஜியா நாட்டு ஆசிரியர் ஒருவர், பழைய விமானத்தை விலைக்கு வாங்கி, அதை, பள்ளிக் கூடமாக மாற்றி உள்ளார். ஜார்ஜியாவின், ரஸ்தாவி நகரை சேர்ந்தவர் காரி சாப்பிட்சி. இவர், பாலர் பள்ளியை நடத்துவதற்காக, ஜார்ஜியா நாட்டு ஏர்லைன்சிடமிருந்து, பழைய விமானம் ஒன்றை, விலை கொடுத்து வாங்கினார். விமானி அறையை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார். பயணிகள் அமரும் பகுதியை பள்ளியாக மாற்றினார். மழலையர்கள் பைலட்டாகும் கனவுடன், இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உற்சாகமாக வருகின்றனர். பைலட் அறையில் உள்ள கருவிகளை இயக்கி பார்த்து மகிழ்கின்றனர்.இந்த பள்ளியில் படிக்க, மாதக் கட்டணம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...