கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.என்.பி.எஸ்.சி., செயலர் பொறுப்பேற்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், நேற்று பொறுப்பேற்றார். தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலரான விஜயகுமார், தேர்வாணையத்தின் புதிய செயலராக அறிவிக்கப்பட்டிருந்தார். அரசின் உத்தரவு வந்ததும், உடனடியாக செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகவில்லை. தேர்வாணையத்தில், அவரை தக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி, செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் புதிய செயலராக, விஜயகுமார், நேற்று காலை பொறுப்பேற்றார்.

>>>ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிட கலந்தாய்வு

சென்னையில் நேற்று, ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, நேற்று, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் நல ஆணையர், சிவசங்கரன் தலைமை வகித்து, ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினார். தமிழகமெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 ஆசிரியர்கள், நலத்துறை கல்வி அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர்.

>>>வெஜ் புலவு, முட்டை மசாலா தயாரிப்பது எப்படி? : பள்ளி சத்துணவு சமையலர்களுக்கு விரைவில் பயிற்சி

பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவில், பலவகை உணவு வகைகளை சமைப்பது குறித்த பயிற்சி, சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே மாதிரியான உணவுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குழந்தைகளிடத்தில் தற்போது உணவுப் பழக்க வழக்கம் மாறியுள்ளது. இதனால், சத்துணவுத் திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. பள்ளி இடை நிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்ததாக அரசுக்கு தகவல் கிடைத்தது.  இதை மாற்றும் முயற்சியாக, பள்ளிகளில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும், பல வகை உணவுகளை அளிக்க அரசு முடிவெடுத்தது.  சென்னையில், தாமு உள்ளிட்ட, சில பிரபல சமையல் வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையுடன், புதிய உணவுகளை, சத்து குறையாமல் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டது.  சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும், சோதனை ரீதியாக இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டது. அப்போது, பலவகை சாதங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது கண்டறியப் பட்டது. இதையடுத்து, ஊட்டச்சத்து மிகுந்ததாக, அந்த சாதங்களை தருவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, இத்திட்டத்தை, இம்மாதம் 2ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, 13 சாத வகைகள், மசாலா, மிளகுத்தூள் முட்டை என, நான்கு முட்டை உணவு வகைகள், உருளைக்கிழங்கு பொரியல் உள்ளிட்டவை, வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  வாரந்தோறும் மாறும் இந்த உணவு வகைகள், சோதனை அடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முதல்கட்டமாக, சத்துணவு திட்ட சமையலர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, பல வகை உணவு சமைப்பது குறித்து பயிற்சியளிக்க சத்துணவுத் திட்டத்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணி விரைவில் முடிந்து விடும். மாவட்டம் தோறும் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாத பகுதியை தேர்வு செய்து, அதில் உள்ள சமையலர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பலவகை உணவு சமைத்தல், அதில் சேர்க்க வேண்டிய பொருட்களின் அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கடைகளில் கிடைக்கும், "ரெடிமேட்' பொடி வகைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், புளியோதரைக்கு தேவையான புளிக்காய்ச்சல், அன்றாடம் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்க உள்ளது. தொடர்ந்து, பல வகை உணவுகள் மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

>>>சர்க்கரை நோய் வந்தாலே, அது "முதல் மாரடைப்பு'

"சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு' வந்துவிட்டதாக பொருள்,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. இதில் டாக்டர் மகேஷ்பாபு பேசியதாவது: இந்தியாவில் 6 கோடி பேர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதைவிட அதிகமானோர், தங்களுக்கு நோய் உள்ளது என்பதை கண்டறியாமல் உள்ளனர். எனவே 30 வயதை கடந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசர வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் சர்க்கரை நோயை உருவாக்கியுள்ளன. துவக்கத்தில் இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றி கண்கள், சிறுநீரகம், நரம்பு, இருதயம், மூளையை பாதித்துவிடும்.சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு' வந்துவிட்டதாக பொருள். எனவே இந்நோய் கண்டறியப்பட்டது முதல், உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, அதிக காய்கறிகளை உண்பது, மருந்து மாத்திரைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.தற்போது 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கூட இந்நோய் வருகிறது. உடற்பயிற்சி, மாலை நேரங்களில் விளையாடாமை இதற்கு காரணம். மாணவர்கள் அதிகமாக விளையாட வேண்டும். நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு மருத்துவ மனைகளில், சர்க்கரை நோய் மாத்திரைகள், இன்சுலின் போன்றவை இலவசமாக கிடைக்கிறது. மது அருந்துவோருக்கு கணையம் பாதிப்பதால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

>>>"கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்'

"சிறந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியர் மாற வேண்டும்; கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்,'' என ஓய்வு பெற்ற பேராசிரியர் சூரியநாராயணன் பேசினார். இடுவாய் அடுத்த சின்னக்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1954ல் படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம், "நெஞ்சம்மறப்பதில்லை' என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விநாயகம் வரவேற்றார். ஓய்வு பெற்ற கோவை அரசு கலைக்கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் சூரியநாராயணன் பேசியதாவது:பள்ளியில் மாணவன், ஆசிரியர் இருவரும் இரு கண்களைபோல் இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியரால் மட்டுமே நல்ல மாணவனை உருவாக்க முடியும். அதன் மூலமே அவன் எதிர்காலமும் பிரகாசமாகும். சரியான முறையில் எதிர்பார்த்த கல்வி கிடைக்காததால் தான், நம் நாட்டில் வன்முறை, கலவரம், தீவிரவாதம் உருவாகிறது. குருவை மதிக்கத் தெரிந்தவன் மட்டுமே புகழ் பெறுவான். கற்க வேண்டிய பருவத்தில் நன்முறையில் முழு மனதுடன் கற்றால் மட்டுமே அது களவற்ற கல்வி.அன்றைய மாணவர்களுக்கும், இன்றைய மாணவர்களுக்கும் வேறுபாடுகள் ஆயிரம்; இன்றைய மாணவர்கள் கல்வியை மறந்து காதலை பெரியதாக நினைக்கின்றனர். கடமை மறந்து, ஆசிரியர், பெற்றோரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து பாதை மாறி, விழித்துக் கொண்டே செல்கின்றனர். நல்ல கல்வி கற்ற ஒரு மாணவன் எப்போதும் பாதை மாற மாட்டான். தன்னிடம் படித்த மாணவன், நல்ல பதவியுடன் உயர்ந்து நின்று, வாழ்வில் வளம் பெற்றான் என்று கூறுவதை தவிர, ஆசிரியருக்கு வேறு பெருமை கிடைக்காது. அதையே இன்றைய ஆசிரியர்களும் விரும்புகின்றனர். பிடிப்பான வாழ்க்கை வேண்டாம்; பிடித்த வாழ்க்கையில் சிறப்பாக இருக்க முயற்சியுங்கள். எந்தவொரு மாணவனுக்கு நல்ல நண்பன் அமைகிறானோ, அவன் வாழ்க்கை சிறக்கும்; நல்ல ஆசிரியரும் கிடைத்துவிட்டால் வாழ்வு பூத்துக்குலுங்கும். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக மாறி பணியாற்றுங்கள். கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவனே நண்பன். நண்பனுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள், என்றார்.கடந்த 54ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை படித்த 300 மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கடந்த 1954ல் பள்ளியின் முதல் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிறைவில்,முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தி, கண்ணீருடன் விடை பெற்றனர்.

>>>நவம்பர் 16 [November 16]....

நிகழ்வுகள்

  • 1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
  • 1532 - ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் மன்னன் அட்டஹுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
  • 1632 - சுவீடனின் குஸ்டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
  • 1846 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
  • 1885 - கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
  • 1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
  • 1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
  • 1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
  • 1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் விமானப் படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை வீசின.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
  • 1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
  • 1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
  • 1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
  • 1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1922 - ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
  • 1930 - சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
  • 1982 - அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
  • 2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)

சிறப்பு நாள்

  • உலக சகிப்புத் தன்மை நாள்

>>>இந்திய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து

புதுமையை படைக்கும் திறன் கொண்ட இந்திய மாணவர்களுக்கு, அடுத்த கட்ட படிப்புகளுக்கு கல்வி  கட்டணம் வசூலிக்க கூடாது என ஜெர்மனி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறியதாவது: ஜெர்மனியில் படிக்க இந்திய மாணவர் களுக்கு ஆர்வம் உண்டாக்கும் பொருட்டே, கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. உணவு மற்றும் தங்கும் இடத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, ஜெர்மனியில் 6,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். சென்ற கல்வியாண்டில் இதற்கான முயற்சியில் சிக்கல் இருந்தது. வரும் கல்வியாண்டில் இச்சிக்கல் சரி செய்யப்பட்டது. மாணவர்கள், ஜெர்மனியில் வேலை செய்து பணம் ஈட்டவும் வழி செய்யப்பட்டுள்ளது. டில்லியில், ஜெர்மனி அரசால் நடத்தப்படும் இந்திய ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகமும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், இருநாட்டு உறவுகளும் மேம்படுவதோடு, அறிவியலில் புதுமைகளை படைக்க முடியும். டில்லியில் உள்ள ஜெர்மன் துõதரகம் அருகே அமைக்கப்படும் "ஜெர்மன் ஹவுஸ்" இந்திய மாணவர்கள், ஜெர்மனியில் பயில்வதற்கான வசதிகளை செய்யும். ஜெர்மன் பல்கலையில், இந்திய மாணவர்கள் ஆங்கிலத்தில் பயிலவும், வழி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள், ஜெர்மன் மொழியையும் கற்க முடியும். இளம் அறிவியல் படைப்பாளிகளை உருவாக்குதே ஜெர்மனியின் நோக்கம். "ஜெர்மன் ஹவுஸ்" உடன் இணைந்துள்ள 14 பல்கலைகள் மூலம், இந்திய மாணவர்கள் கட்டணம் இன்றி பயில முடியும். இதனால் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிக்கும். இந்தியாவைப் போலவே பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களிலும் ஜெர்மன் ஹவுஸ் அமைக்கப்படுகிறது என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...