கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பள்ளிகள் புதிதாக துவங்க டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்

"புதிய தனியார் பள்ளிகள் துவங்க, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. தற்போது, மாநிலம் முழுவதும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அதிகம் துவங்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் குறையவில்லை. ஆண்டுதோறும், 50 முதல், 70 புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் (2013-14), புதிய பள்ளிகளை துவக்க விரும்புவோர், டிச., 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், முகவரி உள்ளிட்ட முழுமையான ஆவணங்கள் அடங்கிய இரு கோப்புகளை தயார் செய்து, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர், ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின், இயக்குனரகத்திற்கு பரிந்துரைப்பார். இயக்குனரகம், ஆவணங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும். வரும் கல்வியாண்டில், 50 புதிய பள்ளிகள் துவங்க, விண்ணப்பங்கள் வரலாம் என, எதிர்பார்ப்பதாக, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>முதலாண்டுத் தேர்வில் தோல்வியடைந்தோர் இனி 2ம் ஆண்டு செல்லலாம்

முதல் வருடத் தேர்வில் தவறும் மருத்துவ மாணவர்கள், இனிமேல் காத்திருக்காத வகையில், புதிய திட்டத்தை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கொண்டுவந்துள்ளது.
தற்போதை நிலையில், முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவர், அவ்வருட தேர்வில் தோல்வியடைந்து விட்டால், அவர் 2ம் வருட படிப்பில் அனுமதிக்கப்படாமல், 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், தற்போது புதிதாக அப்பல்கலை கொண்டு வந்துள்ள விதிமுறைகளின்படி, முதல் வருடத்தில் தோல்வியடைந்த மாணவர், 2ம் வருட படிப்பில் அனுமதிக்கப்படுவார். ஆனால் முதல் வருட தேர்வை மீண்டும் எழுதி தேறிய பிறகுதான், 2ம் வருட தேர்வில் கலந்துகொள்ள முடியும். இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் கூறியதாவது: தேர்வில் தவறிய மாணவர்கள், 6 மாதங்கள் நிறுத்திவைக்கப்படுவதால், அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள், பிற மாணவர்களோடு கலந்து செயல்பட முடியாமல், தனி அணியாக இருக்க வேண்டியுள்ளது. ஆனால், 2ம் ஆண்டிற்கு சென்றாலும், அந்தாண்டின் தேர்வை, முதலாமாண்டு தேர்வில் தேறிய பின்புதான், எழுத முடியும் என்றார். இம்முடிவை வரவேற்றுள்ள மாணவர் அமைப்பினர் சிலர் கூறியதாவது உண்மையிலேயே இது வரவேற்கத்தகுந்த முடிவு. 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பில், மாணவர்களை நிறுத்தி வைப்பது சரியல்ல. பிற கல்லூரிகளைப் போலவே, தேர்வுகளில் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும், மருத்துவப் பல்கலையின் முடிவானது, வரவேற்கத்தக்கது என்றனர். ஆனால், மருத்துவப் பல்கலையின் இந்த முடிவிற்கு MCI அனுமதி பெற வேண்டுமா? அல்லது தேவையில்லையா? என்றும் சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.

>>>பழைய பாடத்திட்டத்தில் தேர்வு - பெரியார் பல்கலை வாய்ப்பு

பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லூரி களில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து, வெளிச்சென்ற மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை, ஐந்தாண்டுகள் படிப்புக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது வழக்கம். இவ்வாறு, படிப்பு ஆண்டு, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் பயின்று தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள் வைத்திருக்கும் மாணவர்களுக்கும், தற்போது இறுதியாகப் படித்த பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 14ம் தேதிக்குள், பெரியார் பல்கலைக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே பெற்று, பூர்த்தி செய்து, முதல்வர் வாயிலாக அனுப்ப வேண்டும். இதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

>>>கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்

மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, மொத்தம் 235 மணி நேரங்கள் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், ஐ.டி, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிவாய்ப்புகள் பெறுவது எளிதாக்கப்படும். தகவல் தொடர்பு திறன்கள், ஆங்கில உச்சரிப்பு மற்றும் இலக்கணம், வாடிக்கையாளர் சேவை திறன்கள், பி.சி அப்ளிகேஷன்ஸ், சட்டச்சு திறன்கள், நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சி திட்டத்தில் அடங்கும். இவைத்தவிர, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும். இப்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதுமுள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும். இந்த தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஒத்துழைப்பை, மாநில அரசின் கல்லூரி கல்வித்துறை வழங்கும். கல்லூரி இறுதியாண்டில், 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சிகள், வாரத்திற்கு தோராயமாக 8 மணிநேரங்கள் வரை வழங்கப்படும். இத்தகைய பயிற்சிகள், கிராமப்புறங்களிலிருந்தும், தமிழ் வழியில் கல்விக் கற்றும் வரும் மாணவர்களுக்கு, பேருதவியாக இருந்து, அவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உதவிக் குழுவானது, ஐ.டி. ஐ.டி.இ.எஸ், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக பணியாற்றும். படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள் எளிதாக கலந்துகொள்ள வழியேற்படும். மாநில அரசின் இந்த புதிய திட்டத்தை, கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

>>>ஜி.ஆர்.இ தேர்வின் நுணுக்கங்களை அறியுங்கள்

ஜி.ஆர்.இ. தேர்வானது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக இருப்பதால், அதில் தேர்ச்சிபெற ஏராளமானோர் முயலும் நிலையில், தேர்வைப் பற்றி அடிக்கடி எழும் பலவிதமான கேள்விகளும், அதற்கான பதில்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஜி.ஆர்.இ ரிவைஸ்டு ஜெனரல் டெஸ்ட் என்றால் என்ன?
இளநிலை அளவிலான ஒரு பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு, ஒரு மாணவர் எந்தளவிற்கு தயாராகவும், தகுதியாகவும் உள்ளார் என்பதை அளவிடுவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களில் சேர, உங்களுக்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஒரு தேர்வாகும் இது.
உலகெங்கிலும், முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கிவரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள், GRE Revised General Test  மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் 1000க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள், தங்களின் MBA மற்றும் பிறவகை வணிகப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள இத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுகின்றன.
முதுநிலைப் பட்டப் படிப்பை ஒரு மாணவர் வெற்றிகரமாக முடிப்பதற்கான திறன்கள் இருக்கிறதா என்பதை இந்த GRE Revised General Test சோதிக்கிறது. Verbal reasoning, Quantitative reasoning, Critical thinking, Analytical writing போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்கும்.

>>>குரூப்-2: இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்கியது

குரூப்-2 தேர்வில் தேர்வானவர்களில், நேர்முகத் தேர்வு அல்லாத, 3,220 பணியிடங்களை நிரப்புவதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நேற்று துவங்கியது. குரூப்-2 நிலையில், 6,000க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரில், நேர்முகத் தேர்வு உடைய, 3,000 பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடந்தது.
இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வு அல்லாத, 3,220 பணியிடங்களை நிரப்ப, நேற்று கலந்தாய்வு துவங்கியது. டிச., 1ம் தேதி வரை, தொடர்ந்து கலந்தாய்வு நடக்கிறது. ஒவ்வொரு நாளும், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கேட்டு கொண்டுள்ளார்.

>>>அனுமதி பெறாத பாடப்பிரிவால் மாணவர்களுக்கு சிக்கல்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்காமல், ஜவகர் கல்லூரியில் துவங்கப்பட்ட புதிய பாடப்பிரிவால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி ஜவகர் கல்வி கழகத்தின் கீழ், ஜவகர் அறிவியல் கல்லூரி கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை, முதுகலையில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
நுழைவுத் தேர்வு: கல்லூரியில், இந்தாண்டு புதிதாக கணித துறையில், எம்.பில்., பாடப்பிரிவு துவங்க முடிவெடுக்கப்பட்டது; மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பில்., பாடப்பிரிவில் நுழைவுதேர்வு எழுதினர். இதில், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கல்வி கட்டண தொகையையும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வகுப்புகள் துவங்கப்படவில்லை. மாணவர்கள் கல்வி கட்டண தொகையும் திரும்பி தரப்படவில்லை. மற்ற கல்லூரிகளில், செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், ஜவகர் கல்லூரியில், எம்.பில்., வகுப்புகள் துவங்கப்படவில்லை. கல்வி கட்டணம் செலுத்தியும், வகுப்பு ஆரம்பிக்கப்படாததால், எதிர்காலம் பாழாகும் என, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்பட்டனர். கல்வி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
அனுமதி அவசியம்: இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை விவரங்களை ஜவகர் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியுள்ளது. "புதிய வகுப்புகள் துவங்க வேண்டும் என்றால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்க வேண்டும். வகுப்பு துவங்குவதற்கு, விண்ணப்பிக்காத நிலையில், எப்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தினீர்கள் என, விளக்கம் அளிக்க வேண்டும்" என, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகத்திற்கு கேட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி முதல்வர், உரிய காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்யாததாலும், கல்லூரி பேராசிரியர்கள், எம்.பில்., நெறியாளர்களுக்கான தகுதி, பல்கலைக் கழகத்திலிருந்து, முன்கூட்டியே பெறாததாலும், எம்.பில்., வகுப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் ஓராண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்திய மாணவர்களை, மற்ற கல்லூரியில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வலியுறுத்தல்: கல்லூரி முதல்வர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, "இது குறித்து நான் எந்த விளக்கமும் அளிக்க முடியாது; கல்லூரி நிர்வாகம் மட்டுமே பதிலளிக்க முடியும்,&'&' என்றார். அனுமதி பெறாமல் பாடப்பிரிவை துவங்கிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் காக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...