கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்" என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அரையாண்டு தேர்வு குளறுபடி : தேர்ச்சி விகிதம் குறையுமா?

அரையாண்டு தேர்வு கால அட்டவணை குளறுபடியால், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு,செய்முறை தேர்வு நடத்துவதில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் அஞ்சப்படுகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு, டிசம்பர் 19 ல், துவங்கி ஜனவரி 10 ல் முடியும்படி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 23ல் தேர்வு முடியும். விடுமுறை நாட்களில், விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியர்களும், செய்முறை நோட்டு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாணவர்களும் மேற்கொள்வர். ஜனவரி முதல் பிப்ரவரி வரை மூன்று திருப்புதல் தேர்வு நடைபெறும். தற்போது, அரையாண்டு தேர்வே, ஜனவரி 10 வரை நடக்கிறது. அதன் பிறகு பொங்கல் விடுமுறை வருகிறது. ஜனவரி 15க்கு பிறகு மாணவர்கள் செய்முறை தேர்வில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், திருப்புதல் தேர்வுக்கு தங்களை தயார்படுத்த முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஜனவரி இரண்டாவது வாரம் வரை அரையாண்டு தேர்வை நடத்தி விட்டு, உடனே திருப்புதல் தேர்வை நடத்தினால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர். செய்முறை தேர்வுக்கு மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க முடியாத நிலை ஏற்படும். அரையாண்டு தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை, இயக்ககம் மாற்றியமைத்திட வேண்டும். இல்லையேல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறையும், என்றார்.

>>>பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது.

தேர்ச்சியில் முரண்பாடு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வட மாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.

கல்வித்துறை ஆய்வு:
இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

கணிதத்தில் தோல்வி அதிகம்:பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
* 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>"கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு"

கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.
உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

>>>பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது," எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

>>>நவம்பர் 25 [November 25]....

நிகழ்வுகள்

  • 1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
  • 1542 - ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
  • 1667 - கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1703 - பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
  • 1783 - கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
  • 1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
  • 1833 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
  • 1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
  • 1926 - ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
  • 1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1950 - ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
  • 1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
  • 1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
  • 1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
  • 1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
  • 2000 - அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1844] - கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)
  • 1952 - இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

  • 1974 - ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
  • 1979 - பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்

  • பொஸ்னியா ஹெர்செகோவினா - தேசிய நாள் (1943)
  • சுரிநாம் - விடுதலை நாள் (1975)
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

>>>'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா?

 
'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா? அய்யய்யோ அறிவியல்.'

இப்படி நீளமான தலைப்பிலேயே பயமுறுத்துகிறார் ஆசிரியர். தைரியமாக புத்தகத்தில் நுழைந்தால், பித்தாகரஸ் முதல் இன்றைய இத்தாலி விஞ்ஞானி ஸ்டீபன் போர்க் வரை அத்தனைப் பேரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதை நடையில் சொல்கிறது புத்தகம். சாதாரணக் கதைகள் இல்லை. ஒவ்வொன்றுமே காட்டுக்குள் அட்வென்ச்சர் பயணம் போவதைப்போல் திக் திக் அனுபவங்கள். சில உதாரணங்கள்...

கி.மு. 470-ம் நூற்றண்டில் வாழ்ந்தவர் 'எம்பெடோகல்ஸ்' என்ற கிரேக்க ஞானி. பூகம்பம், மழை என அனைத்தையும் மிகச் சரியாக கணித்து சொல்பவர். திடீர் என ஒரு நாள் 'நான் கடவுளாக மாறப்போகிறேன்' என சொல்லிவிட்டு ஓடிப்போய் ஆழமான எரிமலைக்குள் குழிக்குள் குதித்துவிட்டார்.

நெம்புகோல் தத்துவத்தை அறிவதற்காக அடிமைகளை வைத்து பல்வேறு பாறைகளை தூக்கவைத்த ஆர்க்கிமெடிஸ்... செத்துப்போவது என்ன என்பதை அறிவதற்காக சோதனையில் இறங்கி நிஜமாக இறந்துவிட்ட பாவ்லவ்... ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டதால் தான் யார்? என்ன பெயர் என்பதையே 20 வருடங்களாக மறந்துபோய் தனது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற ஜான்நேஷ்...

இப்படி பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்த சவால்கள், ஆபத்துகள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், அறிவியலாளர்களின் விசித்திர குணங்கள் என நமக்கு அதிகம் தெரிந்து இருக்காத விஷயம் புத்தகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் ஓரிரு மணி நேரத்திலேயே படித்து முடித்துவிடலாம். அப்படி முடித்த பிறகு இரவு தூக்கத்தில் கலிலியோவும், பிளாட்டோவும் வந்தால் ஆச்சர்யம் இல்லை. இன்னொரு விஷயம்... இந்தப் புத்தகத்துடன், 10 எளிய இயற்பியல் சோதனைகள், 10 எளிய வேதியியல் சோதனைகள், 10 எளிய உயிரியல் சோதனைகள் என்ற மூன்று புத்தகங்கள் இலவசம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...