கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்திய மருத்துவர் அமெரிக்காவில் பணியாற்ற முடியுமா?

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., படித்த ஒருவர் யு.எஸ்., சென்று பணியாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்: இந்தியக் குடிமக்கள் யு.எஸ்.ஸில் எச்1பி அல்லது எல் விசா பிரிவுகளின் கீழ் பணியாற்றலாம். இவ்வகை விசாக்களைப் பெறுவதற்கான நேர்காணல் தேதியைப் பெறுவதற்கு முன், யு.எஸ்., உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிலிருந்து ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
இத்தகைய கடிதங்களை, யு.எஸ்.ஸில் உங்களுக்கு வேலை தரும் நிறுவனம் தாக்கல் செய்யும். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தகுதியுள்ள ஒரு வேலையைப் பெறுவதே உங்களது முதல் படியாக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய, சென்னை அமெரிக்கத் துணைத்
தூதரகத்தின் இணைய தளத்தை (http://chennai.usconsulate.gov) பார்க்கலாம். அல்லது www.ustraveldocs.com/in என்ற இணையத் தொடர்பிலும் பார்க்கலாம்.
யு.எஸ். மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைய வழிப் படிப்புகளை (ஆன்-லைன் கோர்ஸ்) நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் தொலைநிலைக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்களை வேலைக்கான தகுதியாக எந்த அளவில் யு.எஸ்., அங்கீகரிக்கிறது? 
பதில்: யு.எஸ்.ஸில் தொலைநிலை மற்றும் தொடர்புவழிக் கல்வி ஆகிய இரண்டும் நேரடி வகுப்பறைக் கல்விமுறையைப் போலவே மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. யு.எஸ்., மட்டுமின்றி பிற இடங்களிலும், தகுதியுள்ள, சரியான நபர்களையே வேலைக்குத் தேர்வு செய்கின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் அது தரும் வேலையைப் பொருத்து அதற்குரிய தனித் தகுதிகளை எதிர்பார்க்கிறது. அத்தகைய தகுதிகளைப் பூர்த்தி செய்வதை ஒட்டியே வேலைவாய்ப்பு அமையும்.
யு.எஸ்., செல்லும் இந்தியர்கள் அங்குள்ள விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பிரபலமான நடிகராக இருக்கட்டும் அல்லது மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமாக இருக்கட்டும், யாரும் இத்தகைய சோதனைகளிலிருந்து தப்பவில்லை. இந்தப் பிரச்னையில் யு.எஸ்., தரும் விளக்கம் என்ன?
பதில்: உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போல, யு.எஸ்.ஸும் தங்கள் குடிமக்களையும் தங்கள் நாட்டுக்கு வருகை தருபவர்களையும் பாதுகாக்கப் பாடுபடுகிறது. எமது நுழைவிட எல்லைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்புச் சோதனை நடைமுறைகள், எல்லா நாடுகளிலிருந்தும் வரும் எல்லாப் பயணிகளுக்கும் பொருந்தும்.
அவை பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகின்றன. யு.எஸ்.ஸிற்கு வருகை தரும் எல்லாப் பயணிகளும் உரிய பாதுகாப்பு, சுங்கம் மற்றும் குடியேற்ற நடைமுறைகளுக்கு உட்படுகிறார்களா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, யு.எஸ்., சுங்கத் துறை மற்றும் உளநாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வரும் எல்லை ரோந்துப் பிரிவு ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எல்லாப் பயணிகளுக்குமான பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி கூடுதல் விவரங்களை அறிய: http://www.cbp.gov/xp/cgov/travel/
யு.எஸ்., அதிகாரிகளிடம் ஊழலைப் பார்க்க முடியவில்லையே... அதற்கு என்ன காரணம்?
பதில்: ஊழலை ஒழிக்க யு.எஸ்., பல்துறை உபாயங்களைக் கையாள்கிறது. இந்த அணுகுமுறையின் முக்கிய அங்கமாக, அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் (ஓ.ஜி.இ.,) செயல்படுகிறது. இந்த ஓ.ஜி.இ., அலுவலகம், நிர்வாகம் மற்றும் பட்ஜெட், அரசு பொறுப்புக் கண்காணிப்பு அலுவலகம், நீதித் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, திட்டங்களைச் செயல்படுத்தும் துறைகளுக்கான நெறிமுறைகள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை உருவாக்கி, நல்லாட்சியை ஊக்குவிக்கிறது.
அதே நேரத்தில், சர்வதேச தொழில், வர்த்தக நடைமுறைகளில் ஊழல், லஞ்சத்துக்கு எதிரான பன்னாட்டு முயற்சிகளை மேற்கொள்வதில் யு.எஸ்., முன்னோடி நாடாகத் திகழ்கிறது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இதர பன்னாட்டு அமைப்புகள், நிறுவனங்கள் யு.எஸ்.ஸின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கின்றன. மேலும், 1977 அன்னிய ஊழல் நடைமுறைகள் சட்டம், வெளிநாடுகளில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதைத் தடை செய்கிறது.

>>>ரூ.81 லட்சம் சம்பளம் பெற போகும் மாணவர் யார்?

சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்று, கேம்பஸ் இன்டர்வியூ துவங்குகிறது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 81 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்த வேலையைப் பெறப் போகும் மாணவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.,யில், பி.டெக்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்., - எம்.எஸ்சி., - பி.எச்டி., உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்த, 1,263 பேர், வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். இவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் வழங்க, 266 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவற்றில், ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ், டோஷிபா, வால்மார்ட், பஜாஜ் ஆட்டோ, எம்.ஆர்.எப்., உள்ளிட்ட, 95 நிறுவனங்கள், புதிதாக வேலை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளன. மற்ற நிறுவனங்கள், ஏற்கனவே பட்டியலில் உள்ளன. இன்று முதல், 22ம் தேதி வரை, முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமும், ஜன., 16ம் தேதி முதல், இரண்டாம் கட்ட முகாமும் நடக்கிறது. மொத்த மாணவர்களில், 43 பேருக்கு, முன்கூட்டியே வேலைவாய்ப்பு வழங்க, நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள், மாணவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளன. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 81 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது.
இன்றைய வேலை வாய்ப்பு முகாமில், பாஸ்டன், ஐ.டி.சி., - கூகுள் இந்தியா, சோனி, ஷெல் டெக்னாலஜி, பேஸ்புக், மைக்ரோ சாப்ட், ஐ.பி.எம்., உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

>>>அண்ணா பல்கலைக்கு "சிண்டிகேட்' உறுப்பினர்கள் நியமனம் : கல்வியாளர்கள் பலர் இடம் பிடித்தனர்

அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமையில், 11 பேரை, "சிண்டிகேட்' உறுப்பினர்களாக, தமிழக அரசு நியமித்துள்ளது. இதில், வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி நிர்வாகி, கருமுத்து கண்ணன் உட்பட பலர், இடம் பெற்றுள்ளனர். முந்தைய ஆட்சியில், சென்னை, அண்ணா பல்கலை, ஐந்து பல்கலைகளாக பிரிக்கப்பட்டது. இதனால், அண்ணா பல்கலைக்கு என, தனியாக, "சிண்டிகேட்' தேவையில்லை என, கலைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும், ஐந்து பல்கலைகளும், சென்னை, அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீண்டும், சிண்டிகேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, பொறியியல் படிப்பை முடித்த, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பட்டம் வழங்க வேண்டி உள்ளது. இதற்கு, சிண்டிகேட் ஒப்புதல் பெற வேண்டும். இதனால், சிண்டிகேட் அமைத்து, உறுப்பினர்களை நியமித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

யார், யார்? : பல்கலையின் பொறுப்பு துணைவேந்தராக இருக்கும் காளிராஜ், சிண்டிகேட் தலைவராக இருப்பார். அரசு தரப்பில், 11 பேர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், கல்வி நிறுவனங்களை நடத்தும், முத்துராமலிங்கம், கருமுத்து கண்ணன் உட்பட, பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், துணைவேந்தர் தரப்பில், இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஓரிரு நாளில், மேலும், இரண்டு உறுப்பினர்களை, துணைவேந்தர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், சிண்டிகேட் கூட்டம் கூடி, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.

>>>"தனியார் பள்ளிகள் வரம்பிற்குள் மெட்ரிக் பள்ளிகள் வராது"

"தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வராது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனைத்தும், சென்னைப் பல்கலை, மதுரை பல்கலையின் இணைப்பு பெற்றிருந்தது. பின், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைகழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டியதில்லை என, முடிவெடுக்கப்பட்டது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான போர்டு உருவாக்க, 1977ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மெட்ரிக்குலேஷன் போர்டுக்கு, மெட்ரிக் பள்ளிகள் அளிக்க வேண்டிய நிதி பங்களிப்பு குறித்து, 2002ம் ஆண்டு, அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, கிருஷ்ணகிரியில் உள்ள டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாக சங்கம், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த, நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: மெட்ரிக் பள்ளிகள் போர்டின் ஒப்புதல் பெற்று, மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகள், 1978 ஜூன் மாதம், அமலுக்கு வந்தது. இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாகவும், மெட்ரிக் பள்ளிகள் பேணும் குணாதிசயங்கள் காரணமாகவும், தனியார் பள்ளிகள் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படவில்லை. மனுதாரர்கள், மெட்ரிக் பள்ளிகள் என்ற அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள, ஒரு பக்கம் விரும்புகிறது. மறுபக்கம், அரசாணையின் மூலம் நிதிச்சுமை ஏற்படுவதால், இத்தகைய வழக்குகளை தொடுக்கின்றனர். இவர்கள், மெட்ரிக் பள்ளி அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை. தனியார் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும், தனித் தனியானவை. "தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக் பள்ளிகள் வராது என்பதால், அந்தப் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது" என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சதாசிவம் இருந்த போது, இந்த உத்தரவை பிறப்பித்தார். அவரது உத்தரவில், நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

>>>நுணுக்கமான உழைப்பே முக்கியம்

 


கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்' என்கிறது நவீன உலகம்.!!!!

ஸ்மார்ட்டா வேலை பாருங்க!

வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம்.

'ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்'.

இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம்.

ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது.

'கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்' என்கிறது நவீன உலகம்.

'ஸ்மார்ட் ஒர்க்' என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்கள்.

வேலையில் சுட்டித்தனம், திறமை கலப்பது, வித்தியாசமாய்ச் சிந்திப்பது, புதுமையாய்ச் செயல்படுவது இவற்றையே 'ஸ்மார்ட் வேலை' என்கிறார்கள்.

ஒரே மாதிரி ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்க நாம் இயந்திரங்கள் இல்லையே.

காலையில் அலுவலகம் சென்றவுடன் ஒரே மாதிரியான வேலையை மாலை வரைச் செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு போரடிக்கும்!

அதே வேலையை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்குப் போவதே ஒரு போரடிக்கும் போராட்டக் களத்துக்குள் போவது போல் இருக்கும் இல்லையா?

'திறமை இல்லாமல் வெறும் கடின உழைப்பு மட்டும் இருப்பது வெட்கக் கேடானது. திறமை இருந்து கடின உழைப்பு இல்லாத நிலையோ துயரமானது' என்கிறார் ராபர்ட் ஹால்ப்.

மனிதனுக்கு கடவுள் வெறும் உடலை மட்டும் தரவில்லை, சிந்திக்கும் மூளையையும் சேர்த்தே தந்திருக்கிறார். எனவே வெறும் கடின உழைப்பு எனும் வட்டத்தை விட்டு விலகி சிந்தனையின் நாற்றுகளை நட வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களே உயரிய இருக்கைகளை விரைவில் சென்றடைகிறார்கள்.

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள்.

ஒரு நாள் காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதற்றமடையவில்லை. மரங்களை வெட்டினார், ஓய்வெடுத்தார், மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் அவரே வெற்றியும் பெற்றார்.

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். 'நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தேன். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத்தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய்?' வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார், 'நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால்தான் வென்றேன்.'

பல வேளைகளில் நாம் நம்முடைய சிந்தனைகளைக் கூர் தீட்ட மறந்து போய் விடுகிறோம். எறும்புகள் போல ஒரே பாதையில் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதை விட நல்ல பாதை, எளிய பாதை இருந்தாலும் நாம் பாதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. கடினமான அந்தப் பாதையில் ஓடிக் கொண்டே இருந்தால் போதும் என நினைக்கிறோம்.

ஒரு செயலை நாம் முதலில் செய்யும் போது அது நமக்குக் கடினமாக இருக்கிறது. அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் எளிதாகி விடுகிறது. பிறகு அந்தச் செயல் நமது மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நம்மை அறியாமலேயே மூளை நம்மை அந்தச் செயலைச் செய்யப் பணிக்கிறது.

அதனால்தான் பல வேளைகளில் பழக்கமான வழியை விட்டு வேறு வழிக்குச் செல்ல மிகுந்த தயக்கம் எழுகிறது என்கின்றனர் உளவியலார்கள்.

ஸ்மார்ட் வேலை என்பது வழக்கமான வழியை விட்டு புதுமையான வழிக்குத் தாவுவது. ராத்திரி பகலாகக் கண் விழித்துப் படிப்பவர்கள் சில வேளை தோல்வியைச் சந்திப்பதுண்டு. ஆனால் திட்டமிட்டு, குறிப்பெடுத்து, முக்கியமானவற்றை வரிசைப்படுத்திப் படிப்பவர்கள் குறைந்த உழைப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் உண்டு.

ஒரு சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது உங்கள் வெற்றியும், தோல்வியும். இந்தச் சூழலுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மனம் எப்போதும் சொல்லும். அதைத் தாண்டிய வழிகளைச் சிந்திக்க மூளையைப் பழக்கப்படுத்துபவர்களே அறிவாளிகளாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு பற்பசை நிறுவனம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் விற்பனைக்காக ஓடி ஓடி உழைத்தார்கள். ஏன் பற்பசை விற்பனையாகவில்லை என நிறுவனம் யோசித்தது. வாங்கும் பற்பசை மக்களுக்கு ரொம்ப நாளைக்குப் போதுமானதாய் இருப்பதைக் கண்டு பிடித்தது. அதற்கான தீர்வு என்ன என எல்லோரும் யோசித்துத் தளர்ந்தார்கள்.

ஒருவர் சொன்னார், 'இனிமேல் பற்பசையின் வாய்ப் பகுதியைப் பெரிதாக வைப்போம். மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். விரைவில் பற்பசை காலியாகும். வாங்குவார்கள்.'

அந்த ஸ்மார்ட் சிந்தனை, நிறுவனத்தை மீண்டும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.

யார் வேண்டுமானாலும் ஸ்மார்ட் வேலைக்காரர் ஆக முடியும். அதற்கு சில அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருந்தாலே போதும்.

முதலாவது, ஒரு வேலையில் வலது காலை வைக்கும் முன் அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது பொருளாகவும் இருக்கலாம், தகவலாகவும் இருக்கலாம், அறிவாகவும் இருக்கலாம்.

என்ன செய்யப் போகிறோம் என்பதை வரிசைப்படுத்துங்கள். அப்படித் திட்டமிடும் போது மாற்று வழிகளையும் மனதில் கொள்ளுங்கள். அது உங்களை புதிய செயல்பாடுகளை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஒரு திட்டத்தை முடிவு செய்த பிறகு அதில் நிலைத்திருங்கள்.

குறிப்பாக, பல வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது கற்கால வழிமுறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செய்ய முடியுமா என்பதை திட்டமிட்டுச் செய்வது ஸ்மார்ட் முறை.

மிக முக்கியமான வேலைகளை, அதிக பயனுள்ள வேலைகளை, அதிக மரியாதை தரும் வேலைகளை முதலில் செய்யத் துவங்குங்கள். அது அடுத்தடுத்த எளிய வேலைகளை சுலபமாய்ச் செய்ய உங்களைப் பக்குவப்படுத்தும்.

ஒரு வேலையை இன்னொரு நபருக்குக் கொடுக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று, சரியான நபரிடம் அதைக் கொடுப்பது. இன்னொன்று, சரியான நேரத்தில் அதைக் கொடுப்பது. இதில் ஒன்று தவறினாலும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு அது உங்களை இட்டுச் செல்லலாம்.

ஸ்மார்ட் வேலை மூன்று முக்கியமான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதலாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறைந்த உழைப்பில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். இரண்டாவது குறைந்த செலவில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக சரியான நேரத்தில் முடிக்க முடிவதாக இருக்க வேண்டும்.

இந்த மும்மூர்த்திகளை மனதில் கொண்டே எல்லா செயல்களையும் திட்டமிடுங்கள்.

ஸ்மார்ட் வேலைக்காரர்களிடம் தன்னம்பிக்கையும், 'ரிஸ்க்' எடுக்கத் தயங்காத மனமும் இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் வேலையை அப்படியே செய்து கொண்டே இருப்பார்கள். தோற்று விடுவோமோ, தவறாகிப் போய்விடுமோ எனும் பயமே அதன் முக்கியக் காரணம். எனவே, சில 'ரிஸ்க்'களை எடுக்கத் தயங்காதீர்கள்.

ஒரு செயலைச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல வசீகரிக்கும் விதமாய் அதை முடிப்பது மிக மிக முக்கியம். சரியான வகையில் உங்கள் வேலையை நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள அது உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், கற்றுக் கொள்ளத் தயங்காத மனம். நீங்கள் செய்வது போன்ற அதே வேலையை உங்களைச் சுற்றி பலரும் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஏதேனும் நல்ல 'டெக்னிக்' இருந்தால் அதை உள்வாங்கிக் கொள்ளத் தயங்க வேண்டாம். அடுத்தவருடைய ஐடியாவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்னும் வறட்டுப் பிடிவாதங்கள் அர்த்தமற்றவை.

திறமையான உழைப்பாளிகளிடம், கடின உழைப்பும் கை கூடும்போது பயன் பல மடங்கு அதிகமாகி விடுகிறது. ஸ்மார்ட் வேலை என்பது சோம்பேறித்தனத்துக்கான முன்னுரையல்ல. அது கடின உழைப்புடன் கலக்கும் போது உங்களுக்கு வங்கக் கடலும் வணக்கம் சொல்லும், வானமும் வந்து வாழ்த்துப் பாடும்

>>>சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

 
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதன
ாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் உறவு வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, உறவு பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு உறவு வைத்துக்கொள்வதே நல்லது.

>>>டிசம்பர் 02 [December 02]....

நிகழ்வுகள்

  • 1755 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்தது.
  • 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
  • 1805 - நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
  • 1843 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
  • 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.
  • 1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
  • 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
  • 1908 - பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
  • 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
  • 1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
  • 1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
  • 1954 - சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1956 - பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
  • 1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
  • 1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
  • 1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
  • 1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
  • 1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
  • 1980 - எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
  • 1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
  • 1990 - ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
  • 1993 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
  • 2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
  • 2005 - போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
  • 2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
  • 2006 - பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1910 - ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
  • 1933 - கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
  • 1979 - அப்துல் ரசாக், பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
  • 1982 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
  • 1981 - பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப் இசைப் பாடகர் (பாடகி)
  • 1973 - மோனிகா செலஸ், டென்னிஸ் வீராங்கனை.
  • 1973 - யான் உல்ரிச், செருமானிய மிதிவண்டி வீரர்.

இறப்புகள்

  • 1547 - எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)
  • 1552 - புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
  • 1911 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
  • 1933 - ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்
  • 2006 - வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)
  • 2008 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)

சிறப்பு நாள்

  • லாவோஸ் - தேசிய நாள்
  • ஐக்கிய அரபு அமீரகம் - தேசிய நாள் (1971)
  • ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - CEO அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவேங்கட உடையான்பட்டி தஞ்சா...