கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று - பாரதியார் பிறந்த நாள்.

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே...'

இப்போது தெரிந்திருப்பீர்கள்... 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி நான்தான் என்று. இளம் வயதிலேயே தமிழ் மீது எனக்குப் பற்று. என் மீத
ும் தமிழுக்குப் பற்று!

இளம் வயதில் என்னை வறுமை வாட்டியது. நல்ல வேளை, சுதேசமித்திரன் பத்திரிகைக்கு நான் ஆசிரியராகி ஓரளவு வயிற்றுப் பசியைத் தீர்த்தேன். ஆனால், என்னுள் கனன்ற சுதந்திரத் தீயின் பசியைத்தான் என்னால் அடக்க முடியவில்லை.

எழுதினேன்... எழுதினேன்... வெள்ளையரை எதிர்த்து ஓராயிரம் பாடல்கள் எழுதினேன். தேசத்தைப் பற்றி எழுதினேன், தெய்வீகத்தைப் பற்றி எழுதினேன், குயில் பாட்டும்கூட எழுதினேன். அறியாமை நீங்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், சாதி வெறியைச் சாடியும், நாடு விடுதலை பெறவும் எழுதினேன். காக்கை, குருவிகூட எங்கள் சாதி என்று எழுதினேன்.

துப்பாக்கிக் குண்டுகளுக்குக்கூடப் பயப்படாத ஆங்கிலேயர்கள், எனது பாடல்களுக்குப் பயந்தார்கள். ''ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்'' என்று பாடினேன்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் எனது கவிதை நின்றது. சுதந்திரப் போராட்ட வீரனுக்கு மரணமில்லை என்பார்கள். எனது கவிதை வடிவிலே இன்றும் நான் உங்களிடம் வாழ்கிறேன்!''
*
இன்று - டிசம்பர் 11: தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்... மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன்... மக்கள் மனங்களில் வாழும் ஒருவன்... அழகிய தமிழ் மகன் பாரதியார் பிறந்த நாள்.

>>>இரண்டாம் நாள் கலந்தாய்வில் பணியிடங்கள் தேர்வில் மந்தம்

இரண்டாவது நாளாக, நேற்று நடந்த கலந்தாய்வில், 2,035 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, வெளி மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். டி.இ.டி., தேர்வில் தேர்வான, 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. அதில், 6,592 பேர், சொந்த மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்தனர். நேற்று நடந்த, வெளி மாவட்டங்களுக்கான, பணி நியமன கலந்தாய்வில், 2,035 பேர் பங்கேற்றனர். வெளி மாவட்டத்தில் பணி என்பதால், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி, தொலைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அதன்பிறகே, பள்ளியை தேர்வு செய்தனர். இதனால், கலந்தாய்வு விறுவிறுப்பில்லாமல், சற்று மந்தமாக நடந்தது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 165 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர். மாலை வரை நடந்த கலந்தாய்வில், 2,035 பேரும், பணியிடங்களை தேர்வு செய்தனர். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான, 91 பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை. இதனால், தேர்வு பெற்ற ஆசிரியர்கள், தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த பட்டியலை, டி.ஆர்.பி., வழங்கினால், அவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வை நடத்த தயாராக இருக்கிறோம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம்

நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது.ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார்.அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை.ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

>>>சான்றிதழ் சமர்ப்பிக்க வந்த பட்டதாரிகள் விரட்டியடிப்பு

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தவிர்க்க முடியாத காரணங்களால், சில சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை, முற்றுகையிட்டனர். இவர்களின் குறைகளை கேட்க, துறை அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், போலீசாரை குவித்து, விரட்டி அடித்தனர்.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 533 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரவில்லை. வராததற்கான காரணத்தை தெரிவித்து, 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பில், வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை ஒப்படைக்காத, இடைநிலை ஆசிரியர்கள், 47 பேர், அந்த அட்டையை, நேரில் ஒப்படைக்கலாம் எனவும், டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்சென்ட் ஆன தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்களில், டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில சான்றிதழ்களை ஒப்படைக்காதவர்கள், அதிகளவில் இருந்தனர். தகுதி இருந்தும், தேர்வு செய்யப்படவில்லையே எனக் கூறி, பலர் வருந்தினர்.
இவர்கள் அனைவரிடமும், முறையாக விண்ணப்பங்களை பெறவோ, அவர்களின் குறைகளை கேட்கவோ, டி.ஆர்.பி., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போலீசாரை குவித்து, கூட்டத்தைக் கலைத்தனர். இதனால், ஆவேசம் அடைந்த பட்டதாரிகள், அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, கோஷம் போட்டனர்.
இன்றுடன், பணி நியமன கலந்தாய்வு முடிவதால், "தேர்வு பெற்றும், வேலை கிடைக்கவில்லையே" என, பெண் பட்டதாரிகள், கண்ணீர் விட்டனர். பல பட்டதாரிகளுக்கு, பி.எட்., சான்றிதழை, தமிழக அரசு தாமதமாக வழங்கியுள்ளது. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், இதையே காரணம் காட்டி, தற்போது தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், குமுறினர்.
பட்டதாரிகள் புகார் குறித்து, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரியிடம் கேட்ட போது, "தகுதியில்லாதவர்கள் எல்லாம் வந்துவிட்டனர். இவர்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேலை பார்க்க முடியாது" என்றார்.

>>>பள்ளி கட்டடத்தை பாதுகாப்பு படையினர் பயன்படுத்த அனுமதியில்லை: அரசு அதிரடி

நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, அதிரடி வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர், பள்ளிக்கூடங்களை பயன்படுத்த கூடாது; இது தொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.நக்சல் பாதிப்பு, அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதிகளில் கல்வியின் நிலைமை குறித்து, தேசிய கலந்தாய்வு டில்லியில் நடந்தது.
இதற்கு, மத்திய மனித வள அமைச்சகமும், "யுனிசெப்'பும் ஏற்பாடு செய்திருந்தன.இதில், பங்கேற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது:கலவரம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக நக்சலைட் தொந்தரவு உள்ள மாநிலங்களில், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினருக்கு, தங்குவதற்கு பள்ளி கட்டங்களை ஒதுக்கக் கூடாது.

இதனால், நக்சலைட்டுகள் கல்வி நிறுவனங்களை குறி வைக்க கூடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், பாதுகாப்பு படையினருக்கு, பள்ளி கட்டடங்களை ஒதுக்க கூடாது.கனிம வளம் உள்ள மாவட்டங்களில், நக்சலைட் தொந்தரவு உள்ளது. இப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு என்று ஒருங்கிணைந்த சமூக பொறுப்பு நிதி உள்ளது. இந்த நிதியின் மூலம், மாணவிகளுக்கு கழிப்பறை கட்டித்தரவும், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இக் கூட்டத்தில் பங்கேற்ற, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷனின் தலைவர் சாந்தா சின்கா பேசும்போது, ""கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு படையினர் பள்ளிக் கூடங்களை ஆக்கிரமிப்பதால், ஆசிரியர்களே பள்ளிகளுக்கு போவதில்லை. பொதுவாக பள்ளிக் கூடங்கள் அமைந்துள்ள பகுதி அமைதியான பகுதியாக இருக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

>>>அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்!: தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள்

திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீரென வெளியேறியுள்ளது, மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவு, கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் வரும் 13ல் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்வான ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, பணி நியமன கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பட்டதாரி ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு நடந்தது; இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த 400 இடைநிலை ஆசிரியர்களும், பி.எட்., முடித்த 219 பட்டதாரி ஆசிரியர்களும், அரசு ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலோ அல்லது வெளிமாவட்டங்களிலோ பணி அமர்த்தப்பட உள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல்
திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், டி.இ.டி., தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களாக தேர்வாகியுள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளில், அவர்களது பணியிடம் திடீரென காலியாகி உள்ளது.தனியார் பள்ளிகள் சிலவற்றில் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவமிக்க ஆசிரியர்கள், திடீரென அரசு பள்ளிக்கு தாவியுள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய ஆசிரியர்களை பணியில் சேர்க்க, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டினாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முழு ஆண்டுக்கு உரிய "சிலபஸ்' முடிப்பதும், பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதும், ஆசிரியர்கள் தட்டுப்பாட்டால், தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆசிரியர்கள் வெளியேறுவதால், தேர்ச்சி விகிதம் நிச்சயமாக குறையும் என்ற அச்சத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"சில பள்ளிகளில் இருந்து ஐந்து பேர் வரை, அரசு ஆசிரியர்களாக தேர்வாகி வெளியேறியுள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால், பாடங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பணிக்கு வரும் ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதிலும், மாணவர்களை புரிந்துகொள்வதிலும் சிரமம் உள்ளது. பொதுத் தேர்வுக்கு பின், மே மாதத்தில், பணியிட நியமனத்தை அரசு செய்திருந்தால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது,' என்றனர்.மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதால், மாணவர்களில் கல்வி நலன் மேலோங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பணியிடங்கள், தனியார் பள்ளிகளில் திடீரென காலியாகியுள்ளது. இது, அப்பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.

>>>டிசம்பர் 11 [December 11]....

நிகழ்வுகள்

  • 1282 - வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டான்.
  • 1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
  • 1792 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
  • 1816 - இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.
  • 1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
  • 1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.
  • 1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
  • 1931 - ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
  • 1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
  • 1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன.
  • 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
  • 1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.
  • 1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
  • 1993 - மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1994 - ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.
  • 1998 - தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

  • 1781 - சர் டேவிட் ப்ரூஸ்டர், ஸ்காட்லாந்து இயற்பியலாளர். (இ. 1868)
  • 1803 - ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869)
  • 1843 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளரும் மருத்துவரும் (இ. 1910)
  • 1882 - மாக்ஸ் போர்ன், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் விருதாளரும், (இ. 1970)
  • 1882 - சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (இ. 1921)
  • 1890 - மார்க் டோபே, அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ. 1976)
  • 1911 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006)
  • 1918 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
  • 1931 - ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)
  • 1935 - பிரணப் முக்கர்ஜி, இந்திய அரசியல்வாதி,இந்திய குடியரசு தலைவர்
  • 1951 - பீட்டர் டி. டேனியல்ஸ், மொழியியல் அறிஞர்
  • 1954 - பிரசந்தா, நேபாளப் பிரதமர்
  • 1969 - விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1937 - ஜான் ஆன்வெல்ட், எஸ்தோனியாவின் தலைவர் (பி. 1884)
  • 2004 - எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

சிறப்பு நாள்

  • புர்கினா பாசோ - குடியரசு நாள் (1958)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...