கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு...

- பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

- சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

- ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

- மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

- பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

-ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

-கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

- மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.

- முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

- இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.

- கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.

- நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

- வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.

- நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

- உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

- உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.

- பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.

- உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க் கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.

- ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.

- உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

- சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

- அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.

>>>பிளேட்டோ

 
தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ... மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார்.

கிரேக்கத்தில் அப்போதெல்லாம் கட்டாய ராணுவச் சட்டம் இருந்ததால் பிளேட்டோ சிறிது காலம் ராணுவச் சேவையாற்றினார். போரில் கலந்துகொண்ட அனுபவமும் அவருக்கு உண்டு. தனது இருபதாம் வயதில் சாக்ரடீஸிடம் மாணவராக சேர்ந்து எட்டு ஆண்டுகள் அவரிடம் சீடராக இருந்தார். பிளேட்டோவிற்கு ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாக இருந்ததாலும், சர்வாதிகாரமும் அநீதிகளும் மலிந்திருந்ததாலும் அவருக்கு அரசியலில் வெறுப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் அவரது மானசீக குருவான சாக்ரடீஸூக்கு விஷம் அருந்தி சாகும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரணத்தை தடுத்து நிறுத்த முயன்றவர்களுள் பிளேட்டோவும் ஒருவர்.

சாக்ரடீஸின் மேல் பிளேட்டோவுக்கு இருந்த ஈடுபட்டைக் கண்ட ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள் பிளேட்டோவின் மீது ராஜ துரோகம் குற்றம் சாட்டினர். அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழும் முன் நண்பர்களின் அறிவுரையை ஏற்று ஏதென்ஸை விட்டு வெளியேறினார் பிளேட்டோ. அப்போது அவருக்கு வயது முப்பதுதான். கிமு 399 ஆம் ஆண்டில் ஏதென்ஸை விட்டுச் சென்ற பிளேட்டோ அடுத்த 12 ஆண்டுகள் எகிப்து, இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்த அரசியல் முறைகளையும், சமூக அமைப்புகளையும் கற்றறிந்தார். இந்தியாவுக்கும் வந்த பிளேட்டோ இந்துக்களின் ஆத்ம தியானங்களையும், வருனாசரம தர்மத்தையும் ஆராய்ந்தார்.

கிமு 387 ஆம் ஆண்டு தன் தாய்நாட்டிற்கு திரும்பினார் பிளேட்டோ வருங்கால சந்ததிக்கு இளையர்களை தயார்படுத்த விரும்பினார். தனிமனிதனின் அறிவும் பண்பும் வளர கல்வியும் தத்துவ சிந்தனையும் அவசியம் என்பதை உணர்ந்த அவர் "பிளேட்டோ அகாடமி" என்ற கல்வி கலைக்கூடத்தை நிறுவினார். அந்த கலைக்கூடம்தான் உலகில் தோன்றிய முதல் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடதக்கது. கிமு நான்காம் நூற்றாண்டில் கணிதமும், வானியலும் செழித்து வளர்ந்ததற்கு முக்கிய காரணம் பிளேட்டோவின் அந்த அகாடமிதான். அது தொடங்கப்பட்ட இருபது ஆண்டுகளுக்குள் அதன் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அந்த புகழ்மிக்க அகாடமியில் கல்வி பயின்றவர்களுள் முக்கியமானவர் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவஞானி அரிஸ்டாடில்.

தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் ஒன்று திரட்டி பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் "The Republic" ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் அது எப்படி ஆளப்பட வேண்டும், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது. அவர் உருவாக்கித் தந்த அரசியல் சித்தாங்களும், சமூக அமைப்புகளும் இன்றளவும் பொருந்தக்கூடியதாய் இருக்கின்றன. பெண்ணுரிமை என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட சில நாடுகளில் அபத்தமாக மீறப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமையை வலியுறுத்தியிருக்கிறார் பிளேட்டோ.

கிரேக்க மொழியில் பிளேட்டோ என்றால் "பரந்த" என்று பொருள். பெயருக்கு ஏற்பவே பரந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அவர். பிளேட்டோ ஏற்க்குறைய என்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய இறுதிக்காலம் அமைதியாகவே கழிந்தது. பிறந்த தினத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது மரணத்தைக் கேட்டு மாணவர்கள் கண்ணீர் சிந்தினர். ஏதென்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோக மயமாக காட்சி அளித்தது. அவரது உடலை சக மரியாதையுடன் ஏதென்ஸ் நகரமே அணிதிரண்டு சென்று அடக்கம் செய்ததாக வரலாறு கூறுகிறது.

"எண்ணமே செயலுக்கு அடிப்படை" என்பதுதான் பிளேட்டோவின் அடிப்படைத் தத்துவம். எண்ணம் உயரியதாக இருந்தால் செயலும் உயரியதாக இருக்கும் என்று அவர் நம்பினார். அவருடைய எண்ணங்கள் உயரியதாக இருந்ததால்தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் உருவானது. ஒழுக்கமான அரசியல் சிந்தனைகளும் உலகம் முழுவதும் பரவின. "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவரும் அதைதான் வலியுறுத்துகிறார். உங்கள் எண்ணம் உயரியதாக இருந்தால் உங்கள் செயல்பாடுகளும் உயரும். செயல்பாடுகள் உயர உயர உங்களுக்கு நீங்கள் ஒரு நாள் உயர்ந்து விடுவிர்கள்.

>>>டிசம்பர் 21 [December 21]....

நிகழ்வுகள்

  • 69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
  • 1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
  • 1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
  • 1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
  • 1967 - உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
  • 1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
  • 1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.
  • 1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
  • 1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1988 - ஸ்கொட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  • 1992 - டச்சு விமானம் ஒன்று போர்த்துக்கலில் வீழ்ந்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 2007 - பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1878 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
  • 1942 - ஹூ சிங்தாவ், சீன மக்கள் குடியரசின் தலைவர்

>>>3ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் லேப் - டாப் : திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போராட்டம் எதிரொலி

"மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் விலையில்லா, லேப் - டாப் வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த, விலையில்லா, லேப் - டாப், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், லேப் - டாப் வழங்கப்பட்டு வந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விழா நடக்கும் போது ஆர்ப்பாட்டம், வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து வந்தனர். சில தினங்களுக்கு முன், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில், எம்.எல்.ஏ., சம்பத் குமாரை முற்றுகையிட்டனர். திருப்பத்தூரில் சாலை மறியல் செய்தனர். கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு கல்லூரிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், லேப் டாப் வழங்க தமிழக அரசு, 18ம் தேதி உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் நகல் அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கு, பேக்ஸ் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

>>>20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. ஓரிரு நாளில், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.

>>>நேர்மையான முறையில் டி.இ.ஓ.,க்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளி கல்வித் துறை இயக்குனர் தகவல்

"தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்படும்' என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இத்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் முக்கியமானது. முப்பருவ கல்வி முறையில், முழுமையான தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளிகள், மாணவர்கள் கல்வித் தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்குவதற்கான ஒப்புதல் போன்ற பணிகளில், டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தற்போது, 75 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன.டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல், இந்தாண்டு ஜனவரியிலேயே தயாரிக்கப்பட்டு, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எவ்வித அறிவிப்பும், இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: காலியாக உள்ள, டி.இ.ஒ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பணிமூப்பு பட்டியலில், 15 தலைமையாசிரியர்களுக்கு சரியான, "ரெக்கார்டு' இல்லை. பொதுவாக, 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்றால், பணிமூப்பு பட்டியலில் உள்ள, 100 பேருக்காவது, "ரெக்கார்டு'கள், பணிப் பதிவேடு சரியாக உள்ளதா என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது வழக்கமான நடைமுறை. "ரெக்கார்டு' பிரச்னை உள்ள தலைமையாசிரியர்கள் குறித்து அவர்களுக்கு மேல் பணியாற்றிய டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம் சரியான ஆவணங்கள் கேட்டு பெற்று வருகிறோம். காலிப்பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>கார்ட்டூன் வடிவத்தில் பாடங்கள்: மாணவர்களை கவர புதிய முயற்சி

கணிதம், அறிவியல் என்றால் அலறி ஓடும் மாணவர்களுக்கு அதன் அடிப்படை அறிவை எளிமையாகவும், உறுதியாகவும் கற்றுத்தர கார்டூன் வடிவில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஏன்ஸ்ட் யங் பவுண்டேஷன் சார்பில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களும் கார்ட்டூன்களாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் ஆர்வத்துடன் எளிதாக பாடங்களை புரிந்து படிப்பார்கள் இதனால் மனப்பாடம் செய்து தேர்வில், பங்கேற்காமல் புரிந்து படிப்பார்கள். கல்வியின் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வட்டாரத்தில், 10 பள்ளிகள் வீதம் 22 வட்டாரங்களில் 220 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கடந்த 2 நாட்களாக 4 பிரிவுகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கார்ட்டூன் அடங்கிய "சிடி"க்கள் பயிற்சிகளின் போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த "சிடி"க்களில் சீனு, மீனு, பஸ் (ஈ) மற்றும் ஸ்கேல் என்ற 4 கார்ட்டூன் உருவங்கள் மூலம் பாடங்கள் விளக்கப்படுகிறது. இதில் பஸ் (ஈ) என்று கூறப்படும் கார்ட்டூன், சிந்தனைகளை தூண்டும் விதமாக கேள்விகளை எழுப்புகின்றது.
மாணவர்களில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக கார்ட்டூன் விளக்கப்படம் வண்ண மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை கற்றல் முறை டில்லி, புனே உள்ளிட்ட வட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்தில் கோவையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தற்போது "சிடி"க்கள் எளிமையான ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஏன்ஸ்ட் யங் பவுண்டேஷன் சார்பில், தமிழ் மொழிப்பெயர்ப்பும் செய்யப்பட உள்ளது. இவ்வகை கற்றல் மூலம் கல்வித்தரம் உயரும் என்பதில் எவ்வகை ஐயமும் இல்லை.
இதுகுறித்து, கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி கூறியதாவது: கார்ட்டூன் "சிடி" முறையில் கற்றல் முறை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநீற்றலை தவிர்க்கவும் இத்தகு கற்றல் முறை உதவும்.
கணிதம், அறிவியல் பாடங்கள் என்றால் மாணவர்கள் மிரண்டு ஓடுவார்கள். இப்பாடங்களில் அடிப்படை அறிவு குறைபாட்டால் பல மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தகுதியின்றி போகின்றனர்.
இந்த கற்றல் முறை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை அரசு பள்ளிகளில் உருவாக்கும். ஏன்ஸ்ட் யங் பவுண்டேசன் என்ற அமைப்புடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு முன்பு ஆங்கில புலமையை மேம்படுத்த அரசு பள்ளிகளில் சிடிக்கள் வழங்கப்பட்டன.
ஆனால், பாட புத்தகங்களில் உள்ள பாடங்களை கார்ட்டூன் வடிவில் தொகுத்து கொடுப்பது இதுவே முதல்முறை. ஆசிரியர்களுக்கு இந்த "சிடி”க்கள் பயன்படுத்துவது குறித்தும், கற்றல் சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்றவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி தரம் இதன் மூலம் உயரும் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...