கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)

 
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.

அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர்.

இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர்.

நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.

தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.

தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

>>>தீயோர்க்கு அஞ்சேல்! - சுகி.சிவம்

"தாத்தா... என்ன படிக்கிறீங்க? எனக்கு பரீட்சை இருக்கு... அதனாலே நான் படிக்கிறேன். நீங்கள் ஏன் படிக்கிறீங்க?" என்றபடியே வந்தான் பாபு.

"வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கிலாந்தில் வாழ்ந்த லியானர்ட் வெல் பற்றி படித்தேன். எவ்வளவு ஆழமான சிந்தனை அவருக்கு" என்று பாபுவின் ஆவலை தூண்டினார் தாத்தா.

"அவரை பற்றி சொல்லுங்க தாத்தா" என்று நச்சரித்தான் பாபு.

"மக்கள் நடமாட்டமே இல்லாத பாதை, இருட்டுவேளை... கையில் பணத்துடன் குதிரை மீது பயணம் செய்து கொண்டிருந்தார் லியானர்ட் வெல். அப்போது 'நில்' என்று அவரை மிரட்டியபடி எதிரே வந்து துப்பாக்கியை காட்டினான் ஒரு முகமூடி கொள்ளையன்.

"எடு பணத்தை" என்று மிரட்டினான்.

பணத்தை கொடுத்த பிறகும், "ம்... மரியாதையாக குதிரையை என்னிடம் ஒப்படைத்துவிடு" என்று மேலும் மிரட்டினான். அதன்படியே நடந்துகொண்டார் வெல்.

வெற்றிக்களிப்புடன் குதிரை மீது ஏறி புறப்பட தயாரான முகமூடி கொள்ளையனை நிறுத்தி, "உனக்கு வெட்கமாக இல்லையா? உழைத்து உண்ணாமல் திருட்டு தொழில் செய்கிறாயே இது பாவம் இல்லையா?" என்று கம்பீரமாக குரலை உயர்த்தி கேட்டார் வெல். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன், "டேய், நீ மானம் அற்றவன். உயிருக்கு பயந்து பணத்தையும் குதிரையையும் என்னிடம் கொடுத்த கோழை" என்று கேலி பேசினான்.

லியனார்ட் வெல் உறுதியுடன் "மூடனே, நாளை கடவுளின் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்வாய்? திருடுவது பாவம் என்ற பைபிள் நெறியை நீ அறியாதவனா? இறைவனின் தண்டனைக்கு ஏன் உள்ளாகிறாய்?" என்று கேட்டார்.

அவரது உறுதி மற்றும் தெளிவான பேச்சால் கொள்ளைக்காரன் ஆச்சர்யம் அடைந்தாலும் தப்பிக்கும் நோக்கத்தில் "மேலே பேசாதே... பேசினால் சுட்டுவிடுவேன். சாக பயந்து பணத்தையும், குதிரையையும் கொடுத்த கோழை நீ. எனக்கு புத்தி சொல்கிறாயா?" என்று உறுமினான்.

"போயும் போயும் பணத்துக்காகவோ குதிரைக்காகவோ நான் சாக விரும்பவில்லை. அவற்றை சம்பாதிக்க என்னால் முடியும். இப்போதும் நான் சாவதற்கு தயார். கடவுளுக்கு விரோதமான இழி செயலான திருட்டினால் உனக்கு பாவம் வரும். அந்த பாவத்திலிருந்து உன்னை தடுப்பதால் மரணம் வந்தாலும் அந்த மரணம் ஏற்கத்தக்கது. சுடு என்னை" என்றபடி குதிரைக்கு முன்னே நின்று மார்பை திறந்து காட்டினார் வெல்.

திகைத்துப் போன கொள்ளையன் சற்று தடுமாறினான். இறுதியில் குதிரையில் இருந்து இறங்கி லியானார்ட் வெல்'ஐ தழுவிக் கொண்டு, "பாவத்திலிருந்து என்னை மீட்டுவிட்டாய். அதற்கு நன்றிக் கடனாக திருட்டு தொழிலை விட்டுவிடுகிறேன்" என்று கண்ணீர் விட்டான்" என கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

"தாத்தா, ஆத்திச்சூடியில் இது பற்றி என்ன சொல்லியிருக்கு?" என்றான் பாபு.

"தீயோர்க்கு அஞ்சேல்" என்றார் தாத்தா.

>>>உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு I.A.S.

இன்று புத்தாண்டு...

உன்னிப்பாக வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே புத்தாண்டுதான். இன்று ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளாவிட்டால், இந்த நாள் காலண்டரில் மட்டுமல்ல, நம் வாழ்க்கை குறிப்பில் இருந்தும் கிழித்து எறியப்பட்டதாகத் தான் பொருள். நாளை புதுப்பிக்க நம் வாழ்வை செறிவுபடுத்த வேண்டும். முதல் நாளன்று கொண்டாடுவதோடு புத்தாண்டு முடிந்து விடுவது இல்லை.

இந்த புத்தாண்டில் நம்மை நாம் எந்த வகையில், நம்மையே தாண்டிச் செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம். தொழிலதிபர்கள் அடுத்த ஆண்டுக்குள் எத்தனை புதிய தொழில்களை தொடங்குவது என்று திட்டமிடுவார்கள். இலக்கியவாதிகள் இன்னும் எத்தனை நூல்களை எழுதி முடிப்பது என்று அறுதியிடுவார்கள். விஞ்ஞானிகள் எத்தனை புதிய நுணுக்கங்களை கண்டுபிடிப்பது என்று வியூகம் வகுப்பார்கள். பெற்றோர்கள் எதில் முதலீடு செய்யலாம் என திட்டம் போடுவார்கள்.

இப்படி எல்லோருக்குமே ஒரு கனவும், ஆசையும் உண்டு. இதுபோல் மாணவர்களாகிய நாமும் ஏதாவது ஒரு விஷயத்துக் காக சங்கற்பம் செய்தால்தான் இந்த புத்தாண்டுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். பள்ளி இறுதித்தேர்வுக்கு படிக்கிறவர்கள், ‘அடுத்த கல்வி ஆண்டில் நாம் விரும்புகிற கல்லூரிப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும்’ என நினைப்பது ஓர் இலக்கு. கல்லூரியில் கடைசி ஆண்டு படிப்பவர்கள், ‘நல்ல பணியில் சேர்ந்திட வேண்டும்’ என எண்ணுவது ஒரு சங்கற்பம். ஆனால் எண்ணுவது மட்டுமே வெற்றியை வரவழைத்து விடாது. அதற்கு தகுந்தபடி நம் நடவடிக்கைகளும் இணை குதிரையின் ஓட்டமாய் இருக்க வேண்டும்.

நம்மால் எட்ட முடிந்தவற்றை குறிக்கோளாக்கி கொண்டு அவற்றை நோக்கி ஒவ்வொரு நாளும், அழுத்தமாக அடியெடுத்து வைக்க வேண்டும். ‘நான் 50 தலைசிறந்த புத்தகங்களையாவது படித்து முடித்து விடுவேன்’ என்று வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ‘நல்ல பொழுதாக்கத்தை கற்றுக் கொள்வேன்’ என சூளுரைக்கலாம். ‘ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ச்சி பெறுவேன்’ என சபதம் ஏற்கலாம். ‘25 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்’ என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.

இப்படி, ஏதேனும் ஓர் உயர்ந்த உறுதிமொழியை மனதில் எழுதி அதை கடைப்பிடித்தால், அந்த ஆண்டு முடிகிறபோது, நம்மையும் அறியாமல் நாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு சொந்தக்காரர்களாகி விடுவோம். நேரத்தை முறையாகப் பயன்படுத்திய நிம்மதியும், திருப்தியும் ஏற்படும். இந்த புத்தாண்டில் எப்படி நம்மை நாமே புதுப்பிக்கப்போகிறோம் என்பதில்தான், புத்தாண்டை நாம் எதிர்கொள்ளும் சாராம்சம் அடங்கி இருக்கிறது.

>>>முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி

புதிதாக தேர்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.
போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் நடந்த விழாவில், தேர்வு பெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது.
2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும், 2,273 பணியிடங்கள் மட்டும், நேற்று நிரப்பப்பட்டன. மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, காலையிலும்; வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, பிற்பகலிலும் நடந்தன.
மொத்த தேர்வர்களில், 1,600 பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். மீதமிருந்த, 673 பேர் மட்டும், சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால், வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் இருந்து, 50 பேர் தேர்வு பெற்றிருந்தனர். ஆனால், 18 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இதனால், 32 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை, தேர்வு செய்தனர். பணி நியமன உத்தரவுகளை பெற்ற அனைவரும், நாளை பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

>>>1999 ல் பிறந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியுமா

எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999 ல் பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது 14 க்குள் இருக்க வேண்டும் என்பது அரசு விதி. 2013 மார்ச்சில் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் விபரங்கள், பிறந்த தேதியுடன் ஆன்-லைனில் பதியப்படுகிறது.1998ல் பிறந்தவர்களின் விபரங்கள் ஆன்-லைன் ஏற்கப்படும் நிலையில்,
99ல் பிறந்தவர்களின் வயது 14 முடியாததால், ஆன்லைனில் பதிய முடியவில்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். 1999ல் பிறந்த மாணவர்களின் பிறந்த ஆண்டை, தற்காலிகமாக 1998 என குறிப்பிட்டு, பதிவு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க, முடியாமல் உள்ளனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1999ல் பிறந்தவர்களின் வருடத்தை 1998 என குறிப்பிட்டு, சாப்ட்வேரில் ஏற்ற சொல்கின்றனர். இந்த முறை தற்காலிமானது என்றாலும், அதை மீண்டும் சரியாக மாற்றாவிடில், பிறந்த சான்றிதழிலும், எஸ்.எஸ்.எல்.சி.,மார்க் பட்டியலிலும் பிறந்த ஆண்டு மாற வாய்ப்பு உள்ளது,''என்றார்.

கல்வித்துறை கம்ப்யூட்டர் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,""1999 ல் பிறந்து, 14 வயதை தாண்டாதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 6 மாதம் கால நீடிப்பு சான்றிதழ் பெற்று, வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இதன் அடிப்படையில், 14 வயதை கணக்கிட்டு, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பிறந்த சான்று, டி.சி.,யில் உள்ள பிறந்த தேதிக்கு ஏற்ப மார்க் பட்டியலிலும் ஒரே மாதிரி இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் பயப்பட வேண்டாம்,'' என்றனர்.

>>>நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு

முதல்வர் பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர்.
எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கு, முன்கூட்டியே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம், அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, அவர்கள், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பலர் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றும், கலந்தாய்வுக்கு அழைப்பு வராத தேர்வர்கள், நேற்று டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், டி.ஆர்.பி., அலுவலர்களை சந்தித்து, முறையிட்டனர்.
அலுவலர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்றும், எதையாவது கூறி மழுப்புகின்றனர் என்றும், தேர்வர்கள் புகார் கூறினர். தாவரவியல் பிரிவில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாததால், அந்த பிரிவைச் சேர்ந்த தேர்வர்களும், அதிகளவில் வந்தனர்.
அவர்கள் கூறியதாவது: தாவரவியலில், 204 இடங்கள் உள்ளன. ஒரு இடம்கூட நிரப்பவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், நிரப்பப்படவில்லை என்றும், வழக்கு முடிந்ததும் நிரப்பப்படும் என்றும் முதலில் டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கு குறித்த விவரங்களை கேட்டு, வழக்கு எண் விவரத்தை பதிவு செய்து, இணையதளத்தில் பார்த்தபோது, வழக்கு முடிந்துவிட்ட விவரம் தெரியவந்தது.
இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வழக்கு முடிந்துவிட்டது. ஆனால், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபின், இறுதி தேர்வு பட்டியலை வெளியிடலாம் என, கோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களை சரிபார்த்தபின், தேர்வுப் பட்டியலை வெளியிடுவோம்" என, தெரிவித்தனர்.
கலந்தாய்வுக்கு நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் கூறியதாவது: பல லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி, 6,000த்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது என்பது, சாதாரண வேலை கிடையாது.
மாவட்டங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில், ஒரு சில இடங்களில், அதிகாரிகள் சரியாக கவனிக்காததால், சில தவறுகள் ஏற்பட்டன. இந்த தவறுகளை, நாங்கள் அப்படியே அனுமதிக்கவில்லை. தகுதியான தேர்வர்களின் பட்டியலை மட்டும் தான், கல்வித்துறையிடம் ஒப்படைத்தோம். அதில் இடம்பெற்றவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
காரணம் இல்லாமல், எந்த ஒரு தேர்வரையும், நாங்கள் நிராகரிக்கவில்லை. தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தேர்வர்களின் பெயர், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், இணையதளத்தில் வெளியிடுவோம். அதேபோல், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்" மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, தாவரவியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

>>>தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராவுக்கு கூடுதல் பொறுப்பு

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராவிடம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பதவி, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பதவி, கூடுதலாக வசுந்தராவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில், இரு இணை இயக்குனர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அப்போது, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியிடமும் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனர் பணியிடமும் நிரப்பப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...