கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இசையால் வந்த அழகு....

ஒகுய்ஸ்தேன் ரொம்ப நல்லவன். பேரழகன் மட்டும் இல்லை, பேரழகன்' சூர்யா மாதிரியே இவன் முதுகிலும் பெரிய கூன் ஒன்றும் இருந்தது. அதுதான் இவனுக்கு ரொம்ப வருத்தம். பிரமாதமாக வயலின் வாசிப்பான் ஒகுய்ஸ்தேன். இவனோட ஊரில் எந்த விழா நடந்தாலும் அதுல நம்ம ஒகுய்ஸ்தேனோட நிகழ்ச்சி இருக்கும்.

ஒருநாள் பக்கத்து ஊரில் ஒரு நிகழ்ச்சிக்கு போயிட்டு நடுராத்திரி காட்டு வழியா ஊருக்கு திரும்பிட்டு இருந்தான். அந்த காட்டுல மந்திரக் குள்ளர்கள் இருப்பாங்க. அதனால வேகவேகமா நடந்தான். ஆனாலும் அந்த குள்ளர்கள் இவனைப் பார்த்துட்டாங்க. இவன் ரொம்ப பயந்துட்டான்.

அந்த குள்ளர்களுக்கு இசைன்னா ரொம்ப இஷ்டம். இவனோட வயலினைப் பாத்து குஷியாகி... இவனை வாசிக்கச் சொன்னாங்க.

இவனும் குஷியா வாசிச்சான். இவனோட இசையில் மயங்கிப் போன குள்ளர்கள் "உனக்கு என்ன வேண்டுமோ கேள்'' என்றார்கள்.

ஈவனோட அம்மா அடிக்கடி இவன்கிட்ட "இந்த கூன் மட்டும் இல்லைன்னா நீ ராஜகுமாரன் மாதிரியே இருப்பே''ன்னு வருத்தப்படுறது ஞாபகம் வந்தது. அதனால இந்த கூன் மறைந்தாலே போதும்னு கேட்டான்.

"நீ வீடு போய் சேருவதற்குள் உன் கூன் மறைந்துவிடும்'' என்று அனுப்பி வைத்தார்கள் குள்ளர்கள்.

வீட்டை நெருங்கும்போது ஈவனோட கூன் இல்லாம போச்சு. ஊர்ல எல்லோரும் எப்படி இவனுக்கு கூன் மறைஞ்சதுன்னு ஆச்சர்யப்பட்டாங்க. இவன் நடந்ததை சொன்னதும் "முட்டாள்! கூன் மறைய வேண்டும் என்று கேட்டதுக்கு பதில் பெருஞ்செல்வம் கேட்டிருக்கலாமே''னு திட்டினாங்க. "எனக்கு அதில் எல்லாம் விருப்பம் கிடையாது'' என்றான் பேரழகன்.

"நான் போய் வாங்கிட்டு வர்றேன் பாரு''னு பொறாமைக்காரன் ஒருவன் அவனோட புல்லாங்குழலை எடுத்துட்டு போனான். அதே மாதிரி குள்ளர்களை தன் இசையால் சந்தோஷப்படுத்தினான். அவர்களும், "என்ன வேணுமோ கேள்''னு கேட்டாங்க, பெரும் சொத்து வேணும்னு கேட்க நினைத்த பொறாமைக்காரன், பதட்டத்தில் ஒன்றும் புரியாமல், "ஒகுய்ஸ்தேன் விரும்பாதது எல்லாம் எனக்கு வேண்டும்'' என்றான்.

குள்ளர்களும், "நீ வீடு போய் சேருவதற்குள் வந்து சேரும்'' என்று வரம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். வீட்டுக்கு திரும்பி வர வர தன் பின்னால் கனம் சேருவதை உணர்ந்தான் பொறாமைக்காரன். பெருஞ்செல்வம் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான். வீடு வந்து சேர்ந்ததும்தான் தெரிந்தது ஒகுய்ஸ்தேன் விரும்பாத கூன் விழுந்த முதுகைதான் விரும்பி வரமாக பெற்று வந்திருக்கிறோம் என்று!

>>> நிக்கோலா தெஸ்லா...

 
நிக்கோலா தெஸ்லா... செர்பியாவில் பிறந்த இவர் எடிசனிடம் வேலைக்கு சேர்ந்தார். எடிசனின் ஆற்றல் குறைவான நேர்திசை மின்னோட்ட மோட்டாரை தான் சிறப்பாக மாற்றிக் காண்பிக்கிறேன் என சொல்ல, அவர் அப்படி செய்தால் ஐம்பதாயிரம் டாலர் தருவதாக சொல்ல... இவர் முடித்தபொழுது,"அது ஒரு ஜோக்!"என்றார். சம்பளத்தை கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற கோபமாக வெளியேறினார்.

மார்கோனி உருவாக்கிய ரேடியோ இவரின் பதினேழு காப்புரிமை செயப்பட்ட பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டது. நேர்திசை மின்னோட்டத்தை எடிசன் பயன்படுத்தி மின்சார விநியோகத்தை செய்துகொண்டு இருந்தபொழுது எதிர்திசை மின்னோட்டத்தை உபயோகப்படுத்தி அதிக தூரம் மின்சாரத்தை மெல்லிய மின்கம்பிகளின் மூலம் கொண்டு செல்ல முடியும் என தீர்க்கமாக சொன்னார். அவ்வாறே எடிசனை விட்டுப்பிரிந்த பின் உருவாக்கி காட்டினார். அயனி மண்டலத்தில் இருந்து மின் சக்தியை எடுத்து உலக மக்கள் அனைவருக்கும் மின்சக்தியானது தண்ணீர் போல கிடைக்கச் செய்யலாம் என உறுதியாக சொன்னார்.

ரேடார், ரேடியோ எக்ஸ் ரே ஆகியவற்றில் முதலில் ஆய்வுகள் செய்த முன்னோடி இவர். உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கியதும் இவரே. ரிமோட் கண்ட்ரோல், நிலஅதிர்வு அளக்கும் கருவி என இவர் உருவாக்கியவை ஏராளம். இவர் தான் ஈட்டிய பணத்தையெல்லாம் ஆய்வுகளிலேயே செலுத்தினார். சாகிறபொழுது கடனாளியாக இறந்து போனார். எளிய மக்களுக்காக சிந்தித்த மின்சார யுகத்தின் தந்தை இவரே. அவரை நினைவுகூரும் விதமாக காந்தப்புல அலகு அவரின் பெயரால் வழங்கப்படுகிறது.

(இன்று - ஜன.7: நிக்கோலா தெஸ்லா எனும் இணையற்ற விஞ்ஞானி மறைந்த நாள்.)

>>>ஆர் யூ தேர் மேடம் சி.எம் ? - ஓ பக்கங்கள்-ஞாநி

இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்து சொன்னால், வாராவாரம் இந்த சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத் தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன்.எகிப்திலே செய்தார்கள். டெல்லியிலே செய்தார்கள். என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
“புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும்படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். cmcell@tn.gov.in” என்று ஓர் வேண்டுகோளை பேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி — இந்த சி.எம் செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
“ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்ற சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சிஎம் செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு….பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூட போறாங்க?” என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி எம் செல்  கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக் இருக்கிறது.
“விபத்தாக சித்தரிக்கப் பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்ப படும் விஷயம் சி.எம்.செல்லுக்கு தான் முதலில் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவுலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை.அந்த கேஸ் மூடப்பட்டது. ஒரு வருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவுலகத்திற்கு சென்று கேட்டபோது , அது முடிந்து போன விஷயம் என புகாரையே எடுக்க வில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்து சென்று புகாரை பதிவு செய்தேன் ஒரு வருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது.” என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.
சிஎம்செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.சூளைமேடு மாநகராட்சி பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்ம்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சிஎம்செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே !
சென்னை மேயர் சைதை துரைசாமியின் பேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்பொது பார்த்தால் அந்த தளத்தில் எதுவும் உருப்படியாக் நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தன் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாந்கராட்சி, மின்வாரியம் குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களை சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை.எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும்படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ‘ ரொம்ப வேலை பளு. நேரம் ஒதுக்குவதற்கில்லை ” என்று கூட இன்று வரை அதற்கு பதில் கிடையாது. சமூகப் பிரச்சினையைப் பற்றி தன்னிடம் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தனக்கு டெல்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறார் ! என்ன கொடுமை இது !
சிஎம்செல் வேஸ்ட். சிஎம் ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்…. ? இதோ இன்னொருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: “சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்ற சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள் குழந்தைகள் எல்லாரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம்,போரூர்,மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள்,பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது.”
தெருவில் இறங்கிப் போராடினால் போலீசை வைத்து அடி உதை மிரட்டல்…. சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை சொந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத்திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத்தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஒரு அமைச்சரோ அந்த அமைதியான மக்களை சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாரவாரம் பத்திரிகையாளரை சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும் யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும் கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.  இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னைக் குப்பை நகரமாக இருப்பது வரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்கு புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்கு பிரச்சினையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தன் குடிமக்களுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில்   தன் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்கு தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா?  இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துகொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படி தன்னைத்தானே ஒரு இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்கு சொல்லவேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தன்னைத்தானே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேவை.
கடந்த ஆண்டில் பல முறை முதல்வருக்கு பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் முதுகெலும்புள்ள எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டி பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.
கல்கி 5.1.2013

>>>ஜனவரி 07 [January 07]....

நிகழ்வுகள்

  • 1325 - போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.
  • 1558 - காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.
  • 1598 - ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.
  • 1608 - வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
  • 1610 - கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.
  • 1782 - அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
  • 1789 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
  • 1841 - யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1894 - வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
  • 1935 - முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.
  • 1950 - அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1953 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
  • 1959 - பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
  • 1968 - நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1972 - ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1979 - வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
  • 1984 - புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
  • 1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
  • 2006 - திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1941 - ஜோன் வோக்கர், ஆங்கிலேய வேதியியலாளர்

இறப்புகள்

  • 1943 - நிக்கோலா தெஸ்லா, கண்டுபிடிப்பாளர் (பி. 1856)
  • 1984 - ஆல்பிரட் காஸ்லர், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)
  • 1998 - விளாடிமிர் பிரெலொக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)

>>>ஜனவரி 06 [January 06]...

நிகழ்வுகள்

  • 1066 - இங்கிலாந்தின் மன்னனாக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டான்.
  • 1690 - முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் ரோமின் மன்னன் ஆனான்.
  • 1838 - சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.
  • 1887 - எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
  • 1899 - இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
  • 1900 - போவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிஸ்மித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • 1907 - மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.
  • 1912 - நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
  • 1928 - தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
  • 1936 - கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1940 - போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
  • 1950 - ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது.
  • 1959 - பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.
  • 2007 - கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
  • 2007 - இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2007 - இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

பிறப்புகள்

  • 1883 - கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931)
  • 1924 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
  • 1944 - ரோல்ஃப் சிங்கேர்னாகல், நோபல் பரிசு பெற்றவர்
  • 1959 - கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
  • 1967 - ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்

இறப்புகள்

  • 1852 - லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)
  • 1884 - கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)
  • 1918 - கேன்ட்டர், ஜெர்மன் கணிதவியலாளர் (1845
  • 1919 - தியொடோர் ரோசவெல்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1858)
  • 1990 - பாவெல் செரென்கோவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1904)
  • 1997 - பிரமீள், ஈழத் தமிழ் எழுத்தாளர்,
  • 2010 - திருவேங்கடம் வேலுப்பிள்ளை - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை

>>>வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.

அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது.

1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
 
 வீரபாண்டிய கட்டபொம்மனைக் கெளரவிக்கும் விதமாக 1999-ல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை!

>>>அழகாவோம் - வெ.இறையன்பு I.A.S.

நம் எல்லோருக்குமே அழகாக தோன்ற வேண்டும் என்று ஆசை!

சிலருக்கோ தாம் மட்டுமே அழகென்று திடமான நம்பிக்கை. அழகு என்பது சிலருக்கு நப்பாசை. சிலருக்கு அது ஒத்தாசை.

எவ்வளவு முயன்றாலும் ஒரு சதவிகிதம்கூட நம் முகத்தை மாற்ற நம்மால் முடியாது. இயற்கை நம்மை படைத்த விதத்தை சிகை திருத்தி, முகம் கழுவி செம்மைப்படுத்த மட்டுமே இயலும். ஆனாலும் எதையாவது செய்து நாம் அழகாகி விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புகள் ஏராளம்!

இருக்கிற முகத்தை அசிங்கமாக்காமல் பார்த்துக்கொள்ள நம்மால் முடியும். இயல்பாக இருக்கிறபோது நாம் எல்லோருமே அழகுதான். கோபப்படுகிற போது நாம் அசிங்கமாக தோன்றுகிறோம் என சிலர் சொல்வதுண்டு.

கோபப்பட வேண்டிய இடத்தில் உணர்வுகளை விழுங்கிக்கொண்டு அமைதி காப்பதுகூட அருவருப்புதான். நியாயமான கோபங்களும், சமூகத்தில் நடக்கும் அவலங்களின் மீது ஏற்படும் கோபங்களும் முகத்தை சிவப்பாக்கும்போது ஏற்படும் கம்பீரம் நம்மை அழகாக்குகிறது.

பலவீனமானவர்கள் மீது சிறுபிள்ளைத்தனமாக கொள்கிற கோபம் முகம் முழுவதும் ஓடுக்கல்களை உண்டாக்குகிறது.

அழுகிறபோது மனிதன் அழகை இழந்துவிடுகிறான் என்று சொல்பவர்கள் உண்டு. வாய் கோணலாகி, கன்னங்கள் புடைக்க, சக்தியற்று வெளிப் படும் அழுகையில் பரிதாபம் தோன்றுமே தவிர அழகு ஏற்படாது என்று வாதிப் பவர்களும் இருக்கிறார்கள்.

நெஞ்சை உலுக்கும் சோகத் தில் மௌனமாக, ஆரவாரம் செய்யாமல், தன் கண்ணீர் துளிகளை இரங்கற் கவிதையாக மாற்றுகிற மனிதர்கள் அழுகையைக்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதில் அன்பு, பாசம், இயலாமை, வருத்தம், பிரிவு, அக்கறை ஆகிய அனைத்து உணர்வுகளும் பிரதிபலிக்கின்றன.

அழகாக்கும் ஆசையில் நிறைய ஒப்பனைகள் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் அழகை இழக்கிறோம். நம் இயல்பு தன்மையுடன் ஒட்ட மறுக்கின்ற அவை, ஒட்டவைத்த மலர்களைப் போல் மணம் பரப்ப மறுக் கின்றன. சின்னக் குழந்தைகள் வெட்கப் படும்போதுகூட நம் மனதில் மகிழ்ச்சி தூரல் தெளிக்கப்படுகிறது. இயல்பான உணர்வுகள் தான் எப்போதுமே முகத்தில் அழகையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

உண்மையிலேயே மனித முகங்களை கவனிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசிங்கமாக தோன்றுவது கொட்டாவி விடும்போதுதான் என்பதை புரிந்துகொள்வார்கள். படுக்கை அறையில் விடுகிற கொட்டாவியை காட்டிலும், பள்ளியில் விடுகிற கொட்டாவி அதிகஅசிங்கத்தை கொடுக்கும். கண்களின் துடிப்பையும், முகத்தின் வசீகரத்தையும், உதடுகளின் இருத்தலையும், கன்னங்களின் செழுமையையும் கொட்டாவி ஒரே நொடியில் களவாடிவிடுகிறது.

சோம்பலும், மந்தத்தனமும் கொட்டாவிகளை பிரசவிக்கின்றன. சுறுசுறுப்பான முகங்களும், துருதுருவென தெரியும் வெளிப்பாடுகளுமே, அருகில் இருப்பவர்களையும் ஆனந்தப்படுத்துகின்றன!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...